டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஜோ ரூட்

110
Joe Root replace Labuschagne to become new No. 1 ICC Test Batter rankings

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சதமடித்ததன் மூலம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ICC டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ள நிலையில், டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ICC புதன்கிழமை (21) வெளியிட்டுள்ளது.

ஆஷஸ் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாக அவுஸ்திரேலியா அணியின் மார்னஸ் லபுஷேன் முதலிடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் இரண்டாமிடத்திலும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் மூன்றாம் இடத்திலும் இருந்தனர். ஒரே அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் ICC தரவரிசையில் முதல் 3 இடங்களைப் பிடித்திருந்தது இதுவே முதல்முறையாக அமைந்தது.

எவ்வாறாயினும், குறித்த 3 வீரர்களும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஆஷஸ் போட்டியில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. இந்த நிலையில், ICC புதன்கிழமை வெளியிட்ட புதிய டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் குறித்த 3 வீரர்களும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

அதில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக சதம் விளாசிய ஜோ ரூட் 887 புள்ளிகளை எடுத்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 118 ஓட்டங்கள் எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 46 ஓட்டங்கள் எடுத்தார்.

ICC டெஸ்ட் துடுப்பாட்ட வீர்களுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியா வீரர் மார்னஸ் லபுஷேன் ஆறு மாதங்களுக்கும் மேலாக முதலிடத்தில் நீடித்திருந்த நிலையில், தற்போது ஜோ ரூட்டிடம் முதலிடத்தை இழந்துள்ளார்.

அதேபோல, நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 883 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார். இதனிடையே, முதலிடத்தில் இருந்த லபுஷேன் 877 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும், 3ஆவது இடத்தில் இருந்த டிராவிஸ் ஹெட் 4ஆவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல, இரு இன்னிங்ஸிலும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த ஸ்டீவ் ஸ்மித் 2ஆவது இடத்தில் இருந்து சரிந்து 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை அணி தரப்பில் திமுத் கருணாரத்ன 765 புள்ளிகளுடன் தொடர்ந்து 9ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடாத ரவிச்சந்திரன் அஸ்வின், பந்துவீச்சாளர்களுக்கான ICC டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துள்ளார். இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் அண்டர்சன் 2ஆம் இடத்திலும், கங்கிசோ றபாடா 3ஆம் இடத்திலும் உள்ளனர்.

அதேபோல, டெஸ்ட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் 352 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும், பங்களாதேஷ் அணியின் சகிப் அல் ஹசன் 3ஆம் இடத்திலும் உள்ளனர்.

இதேவேளை, டெஸ்ட் அணிகளில் இந்தியா 121 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியா அணி 116 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும், இங்கிலாந்து அணி 114 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் உள்ளன. தென்னாபிரிக்கா அணி 104 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும், 100 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 5ஆம் இடத்திலும் இருக்கின்றன. 86 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 6ஆம் இடத்திலும், 84 புள்ளிகளுடன் இலங்கை அணி 7ஆம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<