இலங்கையின் கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்

Asia Cup 2023

1573
PCB refuses to play ODI series in Sri Lanka

எதிர்வரும் ஜூலை மாதம் ஒருநாள் கிரிக்கெட் தொடரொன்றை நடத்துவதற்கான இலங்கையின் யோசனையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிராகரித்துள்ளது.

இந்த ஆண்டு ஆசிய கிண்ணத் தொடரை நடத்துவதற்கு இலங்கை முன்வந்த காரணத்தால் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கையை அந்நாட்டு கிரிக்கெட் சபை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள 2023-2025 பருவகாலத்துக்கான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணி இலங்கை வரவுள்ளதுடன், அதன் போது ஒருநாள் உலகக் கிண்ணத்தை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் அணியுடன் ஒருசில ஒருநாள் போட்டிகளில் விளையாட இலங்கை யோனனையொன்றை முன்வைத்திருந்தது.

இந்த நிலையில், ஏதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆசியக் கிண்ணத்தை பாகிஸ்தானில் நடத்துவதற்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், இந்தியா அணி ஆடுகின்ற போட்டிகளை மாத்திரம் பொதுவான இடத்தில் நடத்துகின்ற வகையில் கலப்பு வடிவிலான ஒரு யோசனையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்மொழிந்தது.

ஆனால் பாகிஸ்தான் முன்வைத்த பிரேரணைக்கு இணங்குவதற்குப் பதிலாக, முழு ஆசியக் கிண்ணப் போட்டிகளையும் இலங்கையில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை முன்வைத்த யோசனையினால் பாகிஸ்தான் இலங்கை மீது அதிருப்தி அடைந்துள்ளதாக அறியமுடிகிறது.

அதேபோல, முதலில் இலங்கையுடன் ஒருநாள் போட்டிகளில் ஆட இணங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பின்னர் இந்த வேண்டுகோளை நிராகரித்துள்ளது.

இதனிடையே, ஆசியக் கிண்ணத்தை நடத்துவதற்கு இலங்கை முன்வந்தமை மற்றும் இலங்கை முன்வைத்த வேண்டுகோள் ஏன் நிராரகரிப்பட்டது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதிநிதி ஒருவர் கருத்த தெரிவிக்கையில்,

”இம்முறை ஆசியக் கிண்ணத்தை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை முன்வந்தமை எமக்கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது இரு நாட்டு கிரிக்கெட் சபைகளுக்கு இடையிலான உறவை பலவீனப்படுத்துவதற்கான ஒரு எடுத்துக்காட்டு. எவ்வாறாயினும், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பாகிஸ்தானின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது ஒருசில ஒருநாள் போட்டிகளில் விளையாட பாகிஸ்தானுக்கு இலங்கை கிரிக்கெட் சபை முன்வைத்த கோரிக்கையை நிராகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையின்படி, எதிர்வரும் ஆசியக் கிண்ணம் மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணம் தொடர்பில் பாகிஸ்தான் சில கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் என அந்த பிரதிநிதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இம்முறை ஆசியக் கிண்ணத்தை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆசியக் கிண்ண ஒருநாள் தொடர் எந்த நாட்டில் நடத்துவது என்பதை ஆசிய கிரிக்கெட் பேரவை இன்னும் முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<