சுதந்திரக் கிண்ணத்திற்கான பங்களாதேஷ் அணியில் இணையும் சகீப்

984
Shakib Al Hasan

பங்களாதேஷ் டெஸ்ட் மற்றும் T20 அணிகளின் தலைவரான சகீப் அல் ஹஸன், தற்போது இலங்கையில்  நடைபெற்று வருகின்ற சுதந்திரக் கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் குழாத்தில் இணைந்திருப்பதாக இன்று (15) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

நட்சத்திர சகலதுறை வீரரான சகீப், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பங்களாதேஷ்  மண்ணில் இடம்பெற்றிருந்த முக்கோண ஒரு நாள் தொடரின் போது விரல் உபாதைக்கு ஆளாகியிருந்தார். உபாதையில் இருந்து அவர் இப்போது முழுமையாக குணமடைந்திருப்பதன் காரணமாகவே இலங்கையில் நடைபெற்று வருகின்ற சுதந்திரக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷை பலப்படுத்த அவர் மீண்டும் இணைக்கப்பட்டிருக்கின்றார்.  

இறுதி முடிவாக சுதந்திரக் கிண்ணத்திருந்து ஷகீப் அல் ஹஸன் நீக்கம்

இலங்கையில் நடைபெறும் சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20..

தற்போது இலங்கை வந்திருக்கும் சகீப் அல் ஹஸன் நாளை (16) சுதந்திரக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெறவிருக்கும் தீர்மானமிக்க மோதலில் பங்கெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

சுதந்திரக் கிண்ணத் தொடரில் மூன்று வெற்றிகளைப் பதிவு செய்திருக்கும் இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாட ஏற்கனவே தெரிவாகியிருக்கின்றது. எனவே, இத்தொடரில் ஒவ்வொரு வெற்றி வீதம் பதிவு செய்திருக்கும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளில் நாளைய மோதலில் வெற்றி பெறும் அணியே இறுதிப் போட்டிக்குச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கை அணி முக்கோணத் தொடரின் ஆரம்ப போட்டியில் இந்திய அணியினை தோற்கடித்திருந்தது. தொடர்ந்து, இத்தொடரின் தம்முடைய ஆரம்ப போட்டியில் இந்தியாவுடன் தோல்வியினை தழுவிய பங்களாதேஷ், இலங்கையுடனான முதல் போட்டியில் சாதனை வெற்றியினை பதிவு செய்திருந்தது. இதனையடுத்து, பங்களாதேஷ் நேற்று (14) இந்திய அணியுடன் மீண்டும்  தோல்வியினை சந்தித்ததன் காரணமாக நாளைய போட்டியில் இலங்கையுடன் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.

சுதந்திரக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக் கிழமை (18) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறுகின்றது.