பாகிஸ்தான் அணியின் தெரிவுக்குழுத் தலைவராக இன்ஸமாம்

323
Inzamam-ul-Haq

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் இன்ஸமாம் உல் ஹக், வளர்ந்து வரும் கிரிக்கட் அணியான ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடந்த 6 மாத காலமாக இருந்து வந்தார்.

அவரின் பயிற்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தில் மிகச் சிறப்பாக யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு விளையாடி சுப்பர் 10 சுற்றுக்குத் தகுதி பெற்றதுடன், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்து இருந்தது.

ஆப்கானிஸ்தானுடனான ஒப்பந்தக் காலம் இவ்வருட இறுதி வரை நீடித்து இருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகி எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக நேற்று அதிகாரபூர்வமாக 46 வயதான இன்ஸமாம் உல் ஹக் நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் வசீம் ஹைதர் மற்றும் முன்னாள் துடுப்பாட்ட வீரர் வஜஹதுல்லாஹ் வஸ்தி ஆகியோர் தேர்வுக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் ஷார்யார் கான் கடந்த திங்களன்று லாஹூரில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசும் போது “இன்ஸமாம் தேர்வுக்குழு தலைமைப் பொறுப்பை ஏற்றத்தை இட்டு  மகிழ்ச்சி அடைந்துள்ளோம், நாம் அணியை தெரிவு செய்யும் முழு அதிகாரத்தையும் இன்ஸமாமிற்கு வழங்குவோம்” என்று கூறியிருந்தார்.

புதிய தேர்வுக் குழு தலைவராகியமை தொடர்பாக இன்ஸமாம் உல் ஹக் செய்தியாளர் மாநாட்டில் பேசியபோது

“முதலில் தனது சொந்த அணிக்காக சேவை செய்ய என்னை விடுவித்தமைக்கு ஆப்கனிஸ்தான் கிரிக்கட் சபைக்கு நன்றி தெரிவிக்கின்றேன். நான் ஆறு மாதங்களாக அவர்களுக்கு பயிற்சியாளராக கடமையாற்றி தனக்கு ஒத்துழைப்புத் தந்த வீரர்கள் மற்றும் ஆப்கனிஸ்தான் கிரிக்கட் சபை அதிகாரிளுக்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

“பாகிஸ்தான் அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஆனால் தேர்வாளர் பணியை ஏற்பது இதுவே முதல் முறையாகும். உடனடியாக மாயாஜாலம் வெற்றிப் பயணம் காட்டுவதற்கு என்னிடம் எந்த மந்திரக் கோலும் இல்லை. வலுவான பாகிஸ்தான் அணியை உருவாக்க நிறைய விஷயங்களை சரிசெய்ய வேண்டி இருக்கிறது.

எனவே அணி பழைய நிலைமைக்குத் திரும்பும் வரை ரசிகர்கள் பொறுமை காப்பது அவசியம். இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு சரியான கலவையில் நம்பிக்கையான அணியைத் தேர்வு செய்வதே எனது உடனடி பணியாகும். பொறுமையாக இருப்பதன் மூலமே சிறந்த முடிவைப் பெற முடியும். அணித்தேர்வில் தலைவருக்கும் முக்கிய பங்குண்டு. தலைவர் மற்றும் பயிற்சியாளர் சொல்லும் யோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்” என்றார்.

2007ஆம் ஆண்டு கிரிக்கட்டில் இருந்து ஓய்வுபெற முன் பாகிஸ்தான் அணி சார்பாக 120 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,830 ஓட்டங்களையும், 378 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றி 11,739 ஓட்டங்களையும் பெற்றுள்ள கிரிக்கட்டில் அனுபவம் வாய்ந்த இன்ஸமாம் வீழ்ச்சியில் உள்ள பாகிஸ்தான் அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.