பாக். முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக்குக்கு புதிய பதவி

66
Saqlain Mushtaq
 

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் கீழ் இயங்கும் உயர் செயல்திறன் மையத்தின் சர்வதேச வீரர்களை பயிற்றுவிக்கும் பிரிவின் புதிய பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரரான சக்லைன் முஷ்டாக் நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 5ஆம் இடம் பிடித்து வெளியேறியது.  

>> இங்கிலாந்து தொடருக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கும் பாகிஸ்தான்

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து இன்சமாம்உல்ஹக் விலகினார். பிறகு, தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மிக்கி ஆர்தரை அந்நாட்டு கிரிக்கெட் சபை நீக்கியது.

மேலும், துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் பிளவர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் அஸார் மொஹமட், டிரெய்னர் கிராண்ட் லுடென் ஆகியோருடைய ஒப்பந்தத்தையும் அந்நாட்டு கிரிக்கெட் சபை புதுப்பிக்க மறுத்தது. 

இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் தலைவர் மிஸ்பா உல் ஹக் தேர்வானார்

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் தலைவராக இருந்த சர்பராஸ் அஹமட், பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், டி20 அணிகளிலிருந்து கடந்த ஒக்டோபர் மாதம் நீக்கப்பட்டார்.  

இதன்பிறகு அஸார் அலி டெஸ்ட் அணியின் தலைவராகவும், பாபர் அஸாம் ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்கள்

இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் வீரர்களுக்கான உயர் செயல்திறன் மையத்துக்கு பொறுப்பாக அந்த அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக் மற்றும் நியூசிலாந்து முன்னாள் வீரர் கிராண்ட் பிராட்பர்ன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்

இதன்படி, சர்வதேச வீரர் வளர்ச்சிக்கான பயிற்சியாளராக சக்லைன் முஷ்டாக்கும், உயர் செயல்திறன் பயிற்சிப் பிரிவின் பயிற்சியாளராக பிராட்பர்னும் நியமிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

முன்னதாக அந்தப் பிரிவின் பயிற்சியாளராக செயற்பட்டிருந்த நதீம் கான், உயர் செயல்திறன் மையத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்தே இந்தப் புதிய நியமனங்களை வழங்குவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது

இதனிடையே, பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான சக்லைன் முஷ்டாக், இதற்குமுன் பங்களாதேஷ், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளின் சுழல்பந்துவீச்சு பயிற்சியாளராகவும், அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளின் சுழல்பந்துவீச்சு ஆலோசகராகவும் செயற்பட்டிருந்தார்

>> இம்ரான் கான் போல அணியினை வழிநடாத்த விரும்பும் பாபர் அசாம்

அத்துடன், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு அவர் கடந்த வருடம் விண்ணப்பித்திருந்தார்

ஆனால், அந்த அணியின் முன்னாள் வீரரான இஜாஸ் அஹமட்டை பயிற்சியாளராக நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நியூஸிலாந்து மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணியின் பயிற்சியாளராகச் செயற்பட்ட அந்த அணியின் முன்னாள் வீரரான கிராண்ட் பிராட்பர்ன், பாகிஸ்தான் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக கடந்த 2018 முதல் செயற்ப்டடு வருகின்றார்

எனவே, பிராட்பர்ன் உயர் செயல்திறன் மையத்தின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் அணிக்கு புதிய களத்தடுப்பு பயிற்சியாளரை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனிடையே, பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் முன்னாள் வீரரான அசெர் மாலிக், பாகிஸ்தான் கிரிக்கெட் உயர் செயல்திறன் மையத்தின் செயல்பாட்டு முகாமையாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<