இங்கிலாந்து தொடருக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கும் பாகிஸ்தான்

107

இங்கிலாந்து அணிக்கு எதிரான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணம் நடைபெறும் சாத்திய கூறுகள் இருப்பதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) நம்பிக்கை வெளியிட்டுள்ளது.  

மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று T20I போட்டிகள் கொண்ட தொடர் குறித்து, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபைகளுக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது, வீரர்களின் பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.  

பாகிஸ்தான் கிரிக்கெட் வருடாந்த ஒப்பந்தத்தில் முன்னணி வீரர்கள் நீக்கம்

அதன்படி, எதிர்வரும் ஜூலை மாத ஆரம்ப பகுதியில் பாகிஸ்தான் குழாம் இங்கிலாந்துக்கு தனி விமானத்தில் அழைத்துவரப்படும் என்பதுடன், வீரர்களின் பயிற்சிகளுக்காக தனியொரு மைதானம் ஒதுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பிரித்தானிய அரசாங்க உத்தரவின்படி, வெளிநாட்டவர்களுக்கான 14 நாட்கள் தனிமைப்படுத்தல் பாக். வீரர்களுக்கும் வழங்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பாக். வீரர்களின் பயிற்றுவிப்புக்கான மைதானம் இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை. இந்த மைதானத்தை தவிர்த்து, 3 போட்டிகள் கொண்ட T20I மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான 2 மைதானங்கள் இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்படும். இப்போதைய அறிவிப்பின் படி, ஆகஸ்ட் மாதம் டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கவுள்ளதால், அதற்கு முன்னர் இரு வாரங்கள் பாகிஸ்தான் வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

“இந்த பருவகாலத்துக்கான போட்டிகளுக்கான பல திட்டங்களை இங்கிலாந்து கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது. குறிப்பாக செயல்பாட்டு பகுதிகளில், விமானத்தில் ஆரம்பித்து, விளையாடும் மைதானங்கள் வரை உயிரியல் பாதுகாப்பினை இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஏற்படுத்தவுள்ளது. இந்த விடயங்கள், ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. அதேநேரம், இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் திட்டங்கள் நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது. ” என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசீம் கான் தெரிவித்துள்ளார்.  

எவ்வாறாயினும், தொடர் குறித்து அவதானம் செலுத்துவதற்கு பல விடயங்கள் உள்ளன. கொவிட்-19 காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் அடங்குகிறது. எனினும், தற்போது ஊரடங்கில் சில விடயங்கள் தகர்க்கப்பட்டு வருகின்றன. அத்துடன் தொழில்முறை விளையாட்டுகளை ஆரம்பிப்பதற்கான சில வரையறைகளையும் அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, இங்கிலாந்து வீரர்களும் தங்களுடைய பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர். 

இந்தநிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் திட்டங்களை ஏற்றுக்கொண்டு பாகிஸ்தான் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டால், கொவிட்-19 இற்கு பின்னர், நடைபெறும் இரண்டாவது தொடராக இந்த தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், போட்டி அட்டவணையின் படி, அந்த அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்.

பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது வீரர்களின் ஒத்துழைப்பில் தங்கியுள்ளதாக வசீம் கான் குறிப்பிட்டுள்ளார். “நாம் அடுத்த வாரம் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் திட்டங்கள் தொடர்பில், எமது வீரர்களுக்கு தெளிவுப்படுத்தவுள்ளோம். வீரர்களுக்கு விருப்பமில்லையென்றால் அவர்களை கட்டாயப்படுத்த போவதில்லை” என்றார்.

இதேவேளை, பாகிஸ்தான் வீரர்களின் பயிற்சிகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக, வசீம் கான் தெரிவித்துள்ளார். “இப்போது நாட்டின் நிலை சற்று மாறி வருகின்றது. மாற்றங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், நாம் அரசாங்கத்தின் வரையறைகளை கருத்திற்கொண்டு செயற்படுவோம். இதேவேளை, எதிர்வரும் 12 மாதங்கள் கிரிக்கெட்டுக்கு கடினமான காலப்பகுதி. இந்த காலப்பகுதியில் நாம் ஒற்றுமையுடன் இருப்பது அவசியம்” என்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க…