பாராலிம்பிக் செல்லும் ஒரே இலங்கை வீராங்கனை குமுது

Para Olympic

216

டோக்கியோ ஒலிம்பிக் 2020 விளையாட்டு விழாவில் இலங்கை குழாத்தில் இருக்கும் ஒரே வீராங்கனை குமுது பிரியங்கா. அவர் இந்த விளையாட்டு விழாவில் 100 மீற்றர் ஓட்டப் பந்தயம் மற்றும் நீளம் பாய்தல் ஆகிய இரண்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். 

இம்முறை விளையாட்டு விழாவில் இந்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களில் இரு போட்டிகளில் பங்கேற்க அவர் மாத்திரம் தான் தகுதி பெற்றிருக்கிறார். இந்நிலையில், அவர் பற்றி ThePapare.com  இனால் வழங்கப்படும் சிறப்புப் பதிவாக இது அமைகின்றது.  

டோக்கியோ பாராலிம்பிக்கில் இலங்கையிலிருந்து 9 வீரர்கள் பங்கேற்பு

‘பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க பல ஆண்டுகளாக எதிர்பார்ப்புடன் இருந்தேன். அதற்காக உச்ச அர்ப்பணிப்பு செய்தேன், உழைத்தேன். கிடைத்த இந்த சந்தர்ப்பத்தில் எனது தாய் நாட்டை கௌரவப்படுத்த முடியுமானால் அதனைவிட மகிழ்ச்சியான விடயம் வேறு ஒன்று இல்லை. அதற்காக உச்சகட்டமாக பாடுபடுவேன்’ என்று குமுதினி பிரியங்கா ThePapare.com  இற்கு தெரிவித்தார்.  

குமுது, தலைநகரை தற்காலிக இருப்பிடமாகக் கொண்ட புத்தல, ஹொரபொக்க கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் பாடசாலை சென்றது மொனராகலை சித்தார்த்த மஹா வித்தியாலயத்திற்கு. விவசாயக் குடும்பத்தில் நால்வரில் மூத்த சகோதரி அவராவார். அவரை விட மூத்த சகோதரர் மற்றும் இளைய சகோதரிகள் இருவர் உள்ளனர்.  

அறியாத சிறு வயதிலேயே குமுதுவுக்கு தந்தையின் அன்பு பறிபோனது. அதற்கு பின்னர் தாய் தான் பொறுப்பை சுமந்தார். குடும்பத்தில் மூத்த பெண் என்பதால் அம்மாவின் வேலைகளுக்கு உதவியாக வேலைகளை செய்ய வேண்டிய பொறுப்பு குமுதுவுக்கு ஏற்பட்டது. தாய் ஆர்.எம். நந்தாவத்தி. இன்றும் கூட அன்றாட செலவுகளுக்கு உழைப்பதற்காக பூமியோடு போராடும் தைரியம் மிக்க பெண்ணாக உள்ளார்.  

காலையில் மண்வெட்டியை கையில் எடுக்கும் குமுதுவின் அம்மா அதனை மீண்டும் கீழே வைப்பது மாலையிலாகும். இரவில் கூட அம்மா சும்மா இருக்கவில்லை. குமுது மற்றும் சகோதரர்களை ஒன்றாக இருக்க வைத்து அறுவடை செய்த பயிர்களை கட்டு இடுகிறார். அடுத்த நாளில் வியாபாரிகளுக்கு வழங்க அவர் அவ்வாறு தயாராக வைப்பார். அதன் பின் எல்லோரும் இணைந்து அம்மானில் வியர்வை வாசனையுடன் ஒன்றாக உறங்குவார்கள்.  

வாழ்க்கையே மாறி, இன்று பாராலிம்பிக் செல்லும் சுபசிங்க

‘எம்மை வளர்ப்பதற்கு அம்மா பட்டபாடு உலகில் எந்தத் தாயும் செய்திருக்க மாட்டார்கள். அம்மாவின் மூச்சில் தான் நாம் வாழ்ந்தோம். அவ்வளவுக்கு அம்மா எமக்கு நெருக்கமானவர்’ என்கிறார் குமுது. 

தோட்ட வேலை மற்றும் வீட்டு வேலைகளுக்கு பழகிய குமுது பாடசாலைக்கு பின் தொடர்ந்து அம்மாவின் வேலைகளுக்கு உதவுவது அப்போதிருந்து பழகிப்போன ஒன்றாகும். ஆனால் ஒருநாள் இந்த நல்ல பழக்கம் மோசமானதாக மாறியது. சிறிய மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்த அம்மாவுக்கு தெரியாத ஒன்று கண்ணில் பட்டது. அதனை பரீட்சிக்க குமுதுவுக்கு அம்மா கொடுத்தார்.  

‘அம்மா தந்தது என்னவென்று எனக்கும் தெரியாது. நான் அதனை மேலும் கீழும் திருப்பிப் பார்த்தேன். திடீரென்று அது நெருப்புப் பிழம்பாக வெடித்தது. எனது கண்கள் இருண்டன. எனக்கு அவ்வளவுதான் ஞாபகம் இருக்கிறது. அப்போது எனக்கு வயது 16.’

இப்போது குமுதுவுக்கு வயது 33. அது 17 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவம். 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற அந்த நிகழ்வின் பின் குமுதுவுக்கு முழங்கைக்குக் கீழ் இரண்டு கைகளும் பறிபோயின. அதேபோன்று ஒரு கண்ணின் பார்வையை முழுமையாக இழந்தார். அந்த பாதிப்பு நிலைக்கு அமைய குமுது பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் T45/46 பிரிவில் போட்டியிட நிர்ணயிக்கப்பட்டுள்ளார். 

மூத்த மகளுக்கு நேர்ந்த இந்த துயரம் வீட்டில் இருப்பவர்களுக்கு மாத்திரம் அல்ல ஊரில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐயோ பாவம் என்றே எல்லோரினதும் வாயில் இருந்து ஒலித்தது. ஆனால் குமுதுவுக்கு அப்படி இருக்க முடியாது. கொஞ்சம் சுகமடைந்த குமுது வீட்டுக்கு வந்த பின் முடியுமான வகையில் அம்மாவுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்.   

‘அந்த நிகழ்வுக்குப் பின் பாடசாலை செல்வது நின்றுவிட்டது. அப்போது நான் சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு இருந்தேன். ஆரம்ப காலத்தில் வீட்டு வேலைகளை செய்வது கடினமாக இருந்தது. எதற்காக இப்படி வாழ வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு அந்த நிகழ்வு எனது மனதை பாதித்தது. அம்மா நான் தும்புத்தடியை எடுப்பதைக் கூட விரும்பவில்லை. ஆனால் நான் என்னால் முடியுமான வகையில் வீட்டு வேலைகளில் உதவி செய்துகொண்டிருந்தேன்.’   

இதற்கிடையே உடல் ஊனமுற்றவர்களுக்கு மறுவாழ்வளிப்பதற்காக இலங்கை அறக்கட்டளை என்ற Sri Lanka Foundation for the Rehabilitation of the Disabled (SLFRD – Rehab Lanka) இல் பிரேமதாச திசானாயக்க அவர்கள் குமுதுவை சந்திக்க வீட்டுக்கு வந்தார். அந்த சந்திப்பு குமுதுவின் தலைவிதியை தீர்மானிக்கும் ஒன்றாக இருந்தது. 

‘சேர் எம் வீட்டிற்கு வந்தது பிரதேச செயலக அலுவலகத்தின் ஊடாக கிடைத்த தகவலைக் கொண்டு. என்னையும் அம்மாவையும் சந்தித்து பல விடயங்கள் பற்றி பேசினார். சிறு வயதில் இழந்த அப்பாவின் அன்பு கிடைத்தால் இப்படித் தான் இருக்கும் என்னும் அளவுக்கு சேர் எனது மனதை வென்றார். சேர் என்னை கொழும்புக்கு வர அழைத்தார். ஆனால் அம்மா அதற்கு உடனே விரும்பவில்லை. அம்மா அது பற்றி பின்னர் ஒருமுறை கூறியது, கைகள் இரண்டும் இல்லாத நான் தெரியாத இடத்திற்குச் சென்று எப்படி எனது வேலைகளை செய்து கொள்வது என்று கவலைப்பட்டாதாக தெரிவித்தார். ஆனால் எனது விருப்பத்திற்கு அமைய அம்மா நான் கொழும்பு வருவதற்கு விருப்பத்தை வெளியிட்டார்.’  

புத்தலவில் இருந்து கொழும்புக்கு வரும் குமுதுவுக்கு உடல் ஊனமுற்றோர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் இலங்கை அறக்கட்டளை தான் தங்குமிடமாக இருந்தது.  குமுது போன்ற மேலும் பலர் அங்கு தமது வாழ்வை வகுத்துக்கொண்டு இருந்தார்கள். அங்கு பல்வேறு தொழில் மற்றும் பல்வேறு செயற்பாடுகளுக்காக அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டார். வந்த சிறிது காலத்திலேயே குமுது விளையாட்டுக்கு ஈடுபடுத்தப்படுகிறார். பாடசாலை மட்டத்தில் இல்ல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றபோதும், குமுதுவுக்கு விளையாட்டுப் பற்றி அவ்வளவாக புரிதல் இல்லை. ஒன் யுவர் மார்க்…. கெட் செட்… கோ… எனும்போது ஓடும் பழக்கத்தைத் தவிர விளையாட்டுப் பற்றி அவர் வேறு ஒன்றையும் தெரிந்திருக்கவில்லை. 

பாராலிம்பிக் படகோட்டத்தில் பங்கேற்கும் ஒரே ஆசிய வீரர் மஹேஷ் ஜயகொடி

‘கடந்த 2006 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்த நான் ரிஹேப் லங்காவுடன் விளையாட்டில் ஈடுபட்டேன். பயிற்சி பெற்ற சிறிது காலத்தின் பின் பாரா தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்றேன். அதில் 100 மீற்றர், 200 மீற்றர் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்ல என்னால் முடிந்தது. ‘  

அது தொடக்கம் குமுதுவின் விளையாட்டுத் திறமை பாரா மைதானத்தில் ஒளிர ஆரம்பித்தது. அதிலே அதற்கு அடுத்த ஆண்டு மலேசியாவில் இடம்பெற்ற திறந்த பாரா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் 200 மீற்றர் போட்டியில் வெண்கலப் பதக்கமும், 2010 இல் சீனாவில் இடம்பெற்ற ஆசிய பாரா விளையாட்டு விழாவில் 200 மீற்றர் போட்டியில் வெண்கலப் பதக்கமும், 2012 மலேசியாவில் இடம்பெற்ற திறந்த பாரா மெய்வல்லுநர் விளையாட்டு விழாவில் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் போட்டிகளில் வெள்ளிப் பதக்கமும், 2016 இல் இடம்பெற்ற ஆசிய பாரா சம்பியன்ஷிப் போட்டியின் 200 மீற்றரில் வெண்கலப் பதக்கமும், 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் இடம்பெற்ற ஆசிய பாரா போட்டியில் நீளம் பாய்தல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் 2021 டுபாயில் இடம்பெற்ற World Para Athletics Grand Prix போட்டியில் நீளம் பாய்தல் போட்டியில் வெண்கலப் பதக்கமும், அந்தப் போட்டியில் 100 மீற்றர் போட்டியில் நான்காவது இடத்தையும் பெற்றார்.   

அவருக்கு இது தவிர 2019 உலக பாரா மெய்வல்லுநர் போட்டியில் 100 மீற்றர் மற்றும் நீளம் பாய்தல் போட்டியில் பங்கேற்க சந்தர்ப்பம் கிடைத்தது. 

குமுது, இந்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இரண்டாவது விராங்கனையாவார். இதற்கு முன் பாராலிம்பிக் போட்டிகளில் பங்பேற்ற வீராங்கனையாக அமரா இன்துமதி உள்ளார். அவர் 2012 லண்டன் பாராலிம்பிக் விளையாட்டு விழாவிலும் 2016 ரியோ பாராலிம்பிக் விழாவிலும் பங்கேற்றார். குமுது பாராலிம்பிக்கில் பங்கேற்பது இது முதல் முறையாகும்.   

‘முதலில் கொழும்புக்கு வந்தேன். சிறிது காலத்தின் பின் மீண்டும் ஊருக்குச் சென்றேன். வீட்டில் இருந்து பயிற்சிகளில் ஈடுபட்டேன். ஆனால் அது கடினமாக இருந்தது. மீண்டும் கொழும்புக்கு வந்தேன். ரிஹா

ப் லங்காவுக்கு முதலில் ஓடி பின்னர் MAS Holdings நிறுவனத்துடன் இணைந்தேன். அதில் இருந்து எமக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கிறது. எமக்கு பயிற்சி பெறுவது மற்றும் போட்டிகளில் பங்கேற்பதற்கு தேவையான அளவு சுதந்திரத்தை எந்த நிபந்தனையும் இன்றி பெற்றுத் தருகிறார்கள். அதற்காக அதிக நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். அந்த ஆதரவினால் தான் நான் இங்கே இருக்கிறேன்’ என்கிறார் குமுது.  

உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் அரையிறுதியுடன் வெளியேறிய தருஷி, மெதானி

இம்முறை டோக்கியோ விளையாட்டு விழாவில் பங்பேற்கும் இராணுவம் சாராத ஒரே வீரரும் குமுது ஆவார்.

‘பாரா விளையாட்டு சம்மேளனம் எம்மை பாதுகாத்து இந்த இடத்திற்கு கொண்டுவந்தது. அதேபோன்று விளையாட்டு அமைச்சு மற்றும் தற்போதைய விளையாட்டு அமைச்சரும் பெரும் ஆதரவு அளித்தார். நாட்டிற்காக செய்வதற்கு பெரும் பொறுப்பு உள்ளது. அதற்காக அர்ப்பணிப்போடு செயற்படுவேன்.’   

கடந்த காலங்களில் கொரோனா பெருந்தொற்று நிலைமை குமுதுவின் பயிற்சிக்கு சில சந்தர்ப்பங்களில் இடையூறு ஏற்படுத்தியது. ஆனால் குமுதுவின் பயிற்சியாளர் ஹரிஜன் ரத்னாயக்கவுடன் இணைந்து கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முடிந்தது.  

‘ஹரிஜன் சேரின் எதிர்பார்ப்பு நான் இம்முறை விளையாட்டு விழாவில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்பதாகும். அதற்காக நாம் அதிகம் பாடுபட்டு கடுமையான பயிற்சிகள் பலதையும் செய்தோம். இப்போது தனிமைப்படுத்தலில் இருக்கும் வேளையிலும் கிடைக்கின்ற சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பயிற்சி பெறுகிறேன். பாராலிம்பிக்கிற்காக பங்பேற்கின்ற ஏனையவர்களின் திறமைகள் பற்றி ஆராய்ந்து அவர்களுக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பதற்கு திட்டமிடுகிறேன்.’   

புத்தல, பின்தங்கிய கிராமத்தில் இருந்து இரு கைகள் போன்று ஒரு கண்ணையும் இழந்த குமுதுவின் வாழ்வை ஒளியூட்டியது பிரேமதாச திசானாயக்க அவர்கள் என்று குமுது கூறுகிறார். அவரை சந்திக்காவிட்டால் குமுதுவின் வாழ்வு இப்போது புத்தல மண்ணுடன் போராடும் உடல் ஊனமுற்ற விவசாயியாக இருக்க வாய்ப்பு இருந்தது.      

‘பிரேமதாச சேரை சந்திக்க எனது வாழ்வில் நான் மிகப்பெரிய அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன். நான் மாத்திரமல்ல, என்னைப் போன்ற பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு பிரேமதாச சேர் போன்றவர்கள் உதவி செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்வை கட்டியெழுப்ப உதவுகிறார்கள். பிரேமதாச சேருக்கும் ரிஹாப் லங்கா நிறுவனத்திற்கும் நான் கடன்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். 

அதேபோன்று, எல்லோருமே எம்மைப் போன்றவர்களை அப்படிப் பார்ப்பதாயின் எம்மைப் போன்றவர்கள் மேன்மேலும் பலம்பெறுவார்கள். எனக்கு அவர்களிடம் இருந்து கிடைத்தவை காரணமாக இன்று நான் இங்கு இருக்கிறேன். என்னைப் போன்றவர்களை ஒருபோதும் ஒதுக்கிவிட வேண்டாம் என்று மற்றவர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். எமக்கு பரிதாபம் தேவையில்லை. எம்மைப்போன்ற உடல் ஊனமுற்றவர்கள் எல்லா வகையிலும் வலுவானவர்கள். தேவையாக இருப்பது அவர்களின் பலத்தால் எழுவதற்கு உதவுவதாகும்’ என்று குமுது பிரியங்கா குறிப்பிட்டார்.     

பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்கும் குமுது பிரியங்காவுக்கு ThePapare.com இன் வாழ்த்துகள்.

டோக்கியோ பாராலிம்பிக் விழாவின் அனைத்து விபரங்களை உங்களிடம் கொண்டுவருவதற்கு ThePapare.com   தயாராக உள்ளது. போட்டிகள் இம்மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. போட்டிகளை அனுபவிப்பதற்கு ThePapare.com  உடன் இணைந்திருங்கள்.

>>மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு…<<