உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் அரையிறுதியுடன் வெளியேறிய தருஷி, மெதானி

58

கென்யாவின் நைரோபியில் கடந்த 17ம் திகதி ஆரம்பமாகிய உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் மூன்றாவது நாளான இன்று (20), இரண்டு வீராங்கனைகள் தங்களுடைய பதக்க வாய்ப்பை இழந்துள்ளனர்.

தருஷி காருணாரத்ன நேற்றைய தினம் (19) நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் முதல் சுற்றிலிருந்து முன்னேறி, இன்றைய தினம் நடைபெற்ற அரையிறுதியில் பங்கேற்றார். 

உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் அரையிறுதிக்கு முன்னேறிய தருஷி

நேற்றைய தினம் போட்டித் தூரத்தை 2:13.70 நிமிடங்களில் நிறைவுசெய்த போதும், இன்றைய அரையிறுதிப் போட்டியில், 2:17.82 நிமிடங்களில் நிறைவுசெய்து 8வது இடத்தை பிடித்துக்கொண்டார். அத்துடன், இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டார்.

அதேநேரம், இன்று மதியம் மகளிருக்கான 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் முதல் சுற்றில் இலங்கை வீராங்கனை மெதானி ஜயமான்ன பங்கேற்றார். முதல் சுற்றில் தன்னுடைய சிறந்த நேரப்பிரிதியை பதிவுசெய்து 24.01 செக்கன்களில் போட்டித்தூரத்தை நிறைவுசெய்தார். அத்துடன், அரையிறுதிக்கான வாய்ப்பையும் தக்கவைத்தார்.

இந்தநிலையில், இன்று இரவு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், மீண்டும் தன்னுடைய மிகச்சிறந்த நேரப்பிரதியாக 23.95 செக்கன்களில் போட்டித்தூரத்தை நிறைவுசெய்து, நான்காவது இடத்தை பிடித்துக்கொண்டார். எனினும், முதலிரண்டு இடங்களை பிடித்த வீராங்கனைகள் மாத்திரமே இறுதிப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட, துரதிஷ்டவசமாக இறுதிப்போட்டி வாய்ப்பை மெதானி ஜெயமான்ன இழந்தார்.   

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளை படிக்க <<