நியூசிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து விலகிய ரசல், சிம்மண்ஸ், லூவிஸ்

330

கொரோனா வைரஸ் சவாலுக்கு மத்தியில் இருதரப்பு தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச குழாம்கள் சற்று முன்னர் (16) மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையினால் பெயரிடப்பட்டது. 

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதல் தொடராக 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. நியூஸிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான குறித்த இருதரப்பு தொடரானது அடுத்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகின்ற நிலையில் தற்போது இரு குழாம்களும் வெளியிடப்பட்டுள்ளன.

>>KKR அணியின் தலைவர் பதவியை மோர்கனிடம் கையளித்த கார்த்திக்<<

டெஸ்ட் குழாம்

இரு போட்டிகளுக்குமாக ஜேசன் ஹோல்டர் தலைமையிலான 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை கொரோனா வைரஸ் அச்சம் மற்றும் வீரர்களின் உபாதை காரணமாக 6 வீரர்கள் மேலதிக வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். டெஸ்ட் குழாமில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு இந்திய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இறுதியாக விளையாடிய நிலையில் டெஸ்ட் குழாமில் தவறவிடப்பட்டிருந்த டெரன் பிராவோ மீண்டும் குழாமில் இடம்பெற்றுள்ளார். 

அதேபோன்று 23 வயதுடைய இளம் துடுப்பாட்ட வீரரான சிம்ரொன் ஹெட்மயர் கடந்த நவம்பரில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக விளையாடியதன் பின்னர் தற்போது மீண்டும் டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார். மேலும் வெறும் 3 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய நிலையில் கடந்த ஒரு வருடமாக டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காத 22 வயதுடைய இளம் சகலதுறை வீரர் கீமொ போல் நியூசிலாந்து தொடரில் இடம்பெற்றுள்ளார். 

கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்திற்கு பின்னர் ஆரம்பமான முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியாக நடைபெற்ற இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் டெரன் பிராவோ, சிம்ரொன் ஹெட்மயர் மற்றும் கீமொ போல் ஆகியோர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த தொடரில் விளையாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷெய் ஹோப் நியூசிலாந்து தொடருக்கான குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

>>ஒரே போட்டியில் இரட்டை சாதனை படைத்த கோஹ்லி<<

22 வயதுடைய இளம் வேகப்பந்துவீச்சாளரான ச்சீமார் ஹோல்டர் கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அடிப்படையில் முதல் முறையாக குழாமில் இடம்பெற்றுள்ளார். க்ரூமாஹ் போன்னர், ஜௌஸா டி சில்வா, ப்ரெஸ்டன் மெக்ஸூவீன், ஷெயின் மொஸ்லி, ரைமன் ரெய்பர் மற்றும் ஜெய்டன் சீல்ஸ் ஆகிய வீரர்கள் மேலதிக வீரர்களாக டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளனர். 

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான குழாம்

ஜேசன் ஹோல்டர் (அணித்தலைவர்), ஜெர்மைன் பிளக்வூட், கிரைக் பிரத்வெயிட், டெரன் பிராவோ, ஷமார் ப்ரூக்ஸ், ஜொன் கெம்ப்பெல், ரொஸ்டன் சேஸ், ரஹ்கீம் கோர்ன்வால், ஷேன் டௌரிச், ஷனோன் கேப்ரியல், சிம்ரொன் ஹெட்மயர், ச்சீமார் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கீமொ போல், கீமார் ரோச் 

டி20 சர்வதேச குழாம்

3 போட்டிகள் டி20 சர்வதேச தொடருக்காக கிரண் பொல்லார்ட் தலைமையிலான 14 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியில் டி20 சர்வதேச அறிமுகம் பெற்ற விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் அண்ரே பிளெச்சர் 2018ஆம் ஆண்டிற்கு பிறகு 2 வருடங்களின் பின்னர் டி20 சர்வதேச குழாமில் இடம்பெற்றுள்ளார். 

>>இடைநடுவில் IPL தொடரை தவறவிட்ட முன்னணி வீரர்கள்<<

கடந்த மாதம் நிறைவுற்ற கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் 9 போட்டிகளில் 222 ஓட்டங்களை குவித்து பிரகாசித்த 28 வயதுடைய சகலதுறை வீரர் கைல் மயேர்ஸ் முதல் முறையாக டி20 சர்வதேச குழாமில் இடம்பெற்றுள்ளார். இதேவேளை அதிரடி சகலதுறை வீரர் அண்ட்ரே ரசல் மற்றும் துடுப்பாட்ட வீரர்களான லெண்டில் சிம்மண்ஸ், எவின் லூவிஸ் ஆகியோர் குறித்த சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான குழாம்.

கிரண் பொல்லார்ட் (அணித்தலைவர்), பெபியன் அலன், டுவைன் பிராவோ, ஷெல்டன் கொட்ரெல், அண்ரே பிளெச்சர், சிம்ரொன் ஹெட்மயர், பிரன்டன் கிங், கைல் மயேர்ஸ், ரொவ்மன் பவெல், கீமொ போல், நிக்கொலஸ் பூரன், ஒஷேன் தோமஸ், ஹெய்டன் வோல்ஸ் ஜூனியர், கேஸ்ரிக் வில்லியம்ஸ்

இருதரப்பு தொடர் அட்டவணை. (தொடர் அட்டவணையில் மாற்றமேற்பட வாய்ப்புண்டு)

27 நவம்பர் – 1ஆவது டி20 சர்வதேச போட்டி – ஒக்லாந்து

29 நவம்பர் – 2ஆவது டி20 சர்வதேச போட்டி – மௌண்ட் மௌங்கனி

30 நவம்பர் – 3ஆவது டி20 சர்வதேச போட்டி – மௌண்ட் மௌங்கனி

3-7 டிசம்பர் – 1ஆவது டெஸ்ட் போட்டி – ஹெமில்டன் 

11-15 டிசம்பர் – 2ஆவது டெஸ்ட் போட்டி – வெல்லிங்டன்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<