சுஹைல் கானின் பந்துவீச்சில் சிக்கிய இங்கிலாந்து வீரர்கள்

167
eng v pak

பாகிஸ்தான் கிரிக்கட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 3ஆவது போட்டி பர்மிங்ஹாம் மைதானத்தில் நேற்றுத் தொடங்கியது.

ஏற்கனவே நடைபெற்று முடிவடைந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா 1 வெற்றி வீதம் பெற்றுள்ள நிலையில் 3ஆவது தீர்மானமிக்க போட்டி நேற்று ஆரம்பமாகியது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா-உல்-ஹக் முதலில் பந்துவீச்சைத்  தெரிவு செய்தார்.

இதன் படி தமது முதல் இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 86 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 297 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பாக கெரி பேலன்ஸ் 70 ஓட்டங்களையும், மொய்ன் அலி 63 ஓட்டங்களையும், எலாஸ்டயர் குக் 45 ஓட்டங்களையும் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் 3ஆவது டெஸ்ட் போட்டியில் வஹாப் ரியாஸிற்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட சுஹைல் கான் மிகச் சிறப்பான முறையில் பந்து வீசி இங்கிலாந்து விக்கட்டுகளை சாய்த்தார்.

அந்த அடிப்படையில் அவர் 23 ஓவர்கள் பந்து வீசி 96 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை வீழ்த்தினார். இவரோடு ரஹத் அலி மற்றும் முஹமத் அமீர் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் யசீர் ஷா 1 விக்கட்டையும் வீழ்த்தினர்.

போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் இன்று தொடர உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி தமது முதல் இனிங்ஸை இன்று ஆரம்பிக்க உள்ளது.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 297/10

கெரி பேலன்ஸ் 70, மொயின் அலி 63, எலாஸ்டயர் குக் 45, ஜேம்ஸ் வின்ஸ 39

சுஹைல் கான்  96/5, ரஹத் அலி 83/2, முஹமத் அமீர் 53/2