சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியானது 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருப்பதோடு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் புதிய பருவத்திற்காக நடைபெறும் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நேற்று (19) காலியில் நிறைவுக்கு வந்த போது போட்டியின் வெற்றி இலக்காக இலங்கை அணியினால் நிர்ணயம் செய்யப்பட்ட 131 ஓட்டங்களை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணியானது 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த பாபர் அசாம் 06 ஓட்டங்களையும், இமாம்-உல்-ஹக் 25 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இன்று போட்டியின் வெற்றிக்காக இன்னும் 83 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த பாகிஸ்தான் பிரபாத் ஜயசூரியவின் சுழலில் சற்று தடுமாறிய போதிலும் இமாம்-உல்-ஹக்கின் அரைச்சதம் கைகொடுக்க, அவ்வணி போட்டியின் வெற்றி இலக்கினை 6 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களுடன் அடைந்தது.
பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த இமாம்-உல்-ஹக் தன்னுடைய 8ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் பெற்றார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்ததோடு, ரமேஷ் மெண்டிஸ் ஒரு விக்கெட்டினை சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியின் வெற்றி மூலம் ஒரு வருடத்தின் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது டெஸ்ட் போட்டிகளில் வெற்றி ஒன்றினை பதிவு செய்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்டநாயகனாக இப்போட்டியின் போது இரட்டைச் சதம் விளாசிய சௌத் சகீல் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அதேநேரம் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் திங்கட்கிழமை (24) கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.