துடுப்பாட்ட வீரர்களின் உதவியை எதிர்பார்க்கும் தினேஷ் சந்திமால்

756

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் தினேஷ் சந்திமால், அடுத்த வாரம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகும் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பற்றி தனது கருத்துக்களை ஊடக சந்திப்பு ஒன்றின் போது பகிர்ந்திருந்தார்.

பந்துவீச்சு, துடுப்பாட்டம் இரண்டிலும் சிறந்த ஆரம்பத்தை பெற்ற இலங்கை

அவுஸ்திரேலியாவின் ஹோபர்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு

இதன்போது, அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 300 இற்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்தால் மாத்திரமே சிறப்பாக செயற்பட முடியும் எனத் தெரிவித்திருந்த சந்திமால், இப்படியான பெரிய ஓட்ட இலக்குகள் மூலமே பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி இந்திய அணி போன்று ஒரு சாதனையை அவுஸ்திரேலிய மண்ணில் நிகழ்த்த முடியும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இம்மாத ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவுடன் நிறைவுக்கு வந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி, அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றினை வெற்றி கொண்ட முதல் ஆசிய அணியாக மாறியிருந்தது. எனினும், குறித்த டெஸ்ட் தொடர் அவுஸ்திரேலியாவில் நிறைவடைந்த போது இலங்கை வீரர்கள் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரினை நியூசிலாந்தின் சொந்த மண்ணில் வைத்து பறிகொடுத்திருந்தனர்.

அதோடு, அவுஸ்திரேலிய மண்ணிலும் இதுவரையில் டெஸ்ட் வெற்றியொன்றினை பதிவு செய்யாத இலங்கை அணியினர், இதுவரையில் அங்கு  விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்திருப்பதோடு 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே சமநிலை முடிவை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியாக இருந்தாலும் தினேஷ் சந்திமால் அவுஸ்திரேலிய அணியுடன் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தனது பந்துவீச்சாளர்கள் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கு இடைஞ்சல் தருவதில் உறுதியாக இருப்பதோடு, அதற்காக துடுப்பாட்ட வீரர்களின் உதவியினையும் எதிர்பார்க்கின்றார்.

“ எமது இந்த (துடுப்பாட்டத்துறை) பகுதியினையே  நாம் முன்னேற்ற வேண்டியிருக்கின்றது. “ என பேசிய தினேஷ் சந்திமால் மேலும் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“ நியூசிலாந்து அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸ்களில் நல்ல ஆட்டத்தினையே வெளிப்படுத்தினோம். எங்களுக்கு (இங்கே) துடுப்பாட்டமோ பந்துவீச்சோ ஏதாவது ஒன்றில் சிறப்பான ஆரம்பத்தை காட்ட வேண்டியிருக்கின்றது. நாங்கள் எங்களது கடந்த (டெஸ்ட்) தொடரிலிருந்து பாடம் கற்றிருக்கின்றோம். அதோடு எங்களது வீரர்களும் போட்டித் திட்டங்களுடன் காணப்படுகின்றனர். அவற்றை எமது வீரர்கள் களத்திற்கு கொண்டு வருவார்கள் எனில், அது எங்களுக்கு சிறந்த ஆரம்பத்தினை தரும்.

எமது வேகப்பந்துவீச்சாளர்கள் தற்போது ஒரு ஸ்திர நிலையில் உள்ளனர். எனவே, எங்களுக்கு 300 இற்கு மேலாக ஓட்டங்கள் கிடைக்கும் எனில் அது துடுப்பாட்ட வீரர்களிடம் இருந்து கிடைக்கும் பெரிய விடயமாக அமையும். இந்திய அணியின் பந்துவீச்சுத்துறை (குறிப்பாக 40 இற்கும் 80) இடைப்பட்ட ஓவர்களில் நன்றாக இருந்தது. இதனாலேயே, அவர்கள் அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றிருந்தனர். ஒரு அணியாக இதேமாதிரியான ஒரு விடயத்தை நாமும் செய்ய விரும்புகின்றோம். “

இதேநேரம், அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெறப்போகும் டெஸ்ட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி உபாதைக்கு ஆளாகிய அனுபவ துடுப்பாட்ட வீரர் அஞ்செலோ மெதிவ்ஸை இழக்கின்றது. இப்படியான ஒரு நிலையில் தினேஷ் சந்திமால் இளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதிக்கும் ஒரு சந்தர்ப்பமாக இந்த டெஸ்ட் தொடர் அமையும் என தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானைப் போல இலங்கை அணியையும் வீழ்த்துவோம் – டீன் எல்கர்

பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றியது போல, பெப்ரவரி மாதம்

“ எங்கள் அனைவருக்கும் அஞ்செலோ (மெதிவ்ஸ்) எப்படி நல்ல வீரர் என்பது தெரியும். நாங்கள் நிச்சயமாக இத்தொடரில் அவரின் இழப்பினை உணர்கின்றோம். கடைசியாக (நியூசிலாந்தில் இடம்பெற்ற) டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக செயற்பட்டிருந்ததோடு, கூடுதலான அனுபவத்தையும் கொண்டிருக்கின்றார். “

“ இந்த டெஸ்ட் தொடர் இளம் வீரர்களுக்கு தங்களது திறமையினை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பமாகும். (இளம் வீரர்கள்) அவுஸ்திரேலிய மண்ணில் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது எதிர்காலத்தில் முன்னேறுவதற்கான தன்னம்பிக்கையை வளர்க்கும். எங்களிடம் ஒரு சிறப்பான விடயம் இருப்பதாக நம்புகின்றோம். அதனை எங்களுக்கு வெளிப்படுத்த முடியுமாயின் நேரான பாதை ஒன்றில் பயணிக்க முடியும். ” என்றார்.

இறுதியாக குறித்த ஊடக சந்திப்பில் தமது எதிர்தரப்பு அணியான அவுஸ்திரேலியா பற்றியும் கதைத்திருந்த சந்திமால், அவுஸ்திரேலிய அணி அண்மைக்காலங்களில் ஏற்ற இறக்கங்களை சந்தித்த போதிலும் எப்போதும் சவால்தரக்கூடிய ஒரு அணி என குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியுடன் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க