பாபர் அஸாம் தலைமையிலான பாகிஸ்தான் டி20 குழாம் வெளியானது

217
 

இங்கிலாந்து, சுற்றுலா பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள டி20 சர்வதேச தொடருக்கான இங்கிலாந்து அணியின் 14 பேர் கொண்ட குழாம் கடந்த செவ்வாய்க்கிழமை (18) வெளியிடப்பட்ட நிலையில் நேற்று (21) குறித்த தொடருக்கான பாகிஸ்தான் அணியின் 17 பேர் கொண்ட குழாம் பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் மிஸ்பாஹ் உல் ஹக்கினால் பெயரிடப்பட்டது.

கொரோனா வைரஸ் சவாலுக்கு மத்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச தொடர்களில் விளையாடவுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டதன் பின்னர் நடைபெறுகின்ற முதலாவது டி20 சர்வதேச தொடராக இங்கிலாந்து – பாகிஸ்தான் தொடர் அமைந்துள்ளது. 

பாகிஸ்தானுடன் மோதும் இங்கிலாந்து டி20 குழாம் அறிவிப்பு

இரு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடரின் முதல் தொடரான டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்ற நிலையில் அடுத்து நடைபெறவுள்ள டி20 சர்வதேச தொடருக்கான பாகிஸ்தான் அணியின் குழாமே இவ்வாறு வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட குழாமின் அடிப்படையில் பாகிஸ்தான் டி20 அணியின் தலைவராக பாபர் அஸாம் பெயரிடப்பட்டுள்ளார். 

குழாமில் இரண்டு வீரர்களுக்கு முதல் முறையாக டி20 சர்வதேச போட்டிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இளையோர் அணியின் (U-19) தலைவரும், துடுப்பாட்ட வீரருமான 19 வயதுடைய ஹைதர் அலி மற்றும் 17 வயதுடைய இளம் வேகப்பந்துவீச்சாளர் நஸீம் ஷாஹ் ஆகியோர் இவ்வாறு அறிமுக வீரர்களாக குழாமில் இடம்பெற்றுள்ளனர். இதில் நஸீம் ஷாஹ் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் ஹைதர் அலி சர்வதேச அறிமுகம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் அணியின் தலைவராக செயற்பட்டுவந்த சர்பராஸ் அஹமட் கடந்த வருடம் அணித்தலைமையிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னர் தற்போது ஒரு வருடம் கழிந்த நிலையில் மீண்டும் டி20 சர்வதேச குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் இறுதியாக 2019 ஒக்டோபரில் இலங்கை அணியுடன் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

2020 ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகும் லசித் மாலிங்க

இதேவேளை ஆரம்பத்திலேயே இங்கிலாந்து சென்று உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த மூத்த வீரர்களான சுகைப் மலிக், மொஹமட் ஹபீஸ், மொஹமட் ஆமிர் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் டி20 சர்வதேச குழாமில் இடம்பெற்றுள்ளனர். டி20 தொடருக்கென இங்கிலாந்து அழைத்துச்செல்லப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌப் குழாமில் இடம்பெற்றுள்ளார். 

இறுதியாக ஜனவரியில் நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான தொடரில் தவறவிடப்பட்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பகார் ஸமான் மீண்டும் பாகிஸ்தான் டி20 குழாமிற்கு திரும்பியுள்ளார். ஆனால் நடைபெற்றுமுடிந்த பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் பிரகாசித்த ஷான் மஸூத் இங்கிலாந்துடனான டி20 சர்வதேச குழாமில் தவறவிடப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான் அணி இறுதியாக 2018 ஜனவரியின் பின்னர் வெளிநாட்டு மண்ணில் அதாவது பாகிஸ்தான் தவிர்ந்த ஏனைய நாடுகளில் ஒரு டி20 சர்வதேச தொடரையேனும் கைப்பற்றவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தொடரானது பாகிஸ்தான் அணிக்கு மிகவும் முக்கியமான ஒரு தொடராக அமைந்திருக்கிறது.

ஐ.பி.எல் தொடருக்கான புதிய இலச்சினை வெளியீடு

மூன்று டி20 சர்வதேச போட்டிகளும் ஒரே மைதானத்தில் நடைபெறவுள்ளன. முதலாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 28ஆம் திகதி ஓல்ட் ட்ரபெட்டில் ஆரம்பமாகிறது. தொடர்ந்து 30 மற்றும் 1ஆம் திகதி முறையே அடுத்தடுத்த இரு போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இங்கிலாந்து டி20 சர்வதேச தொடருக்கான பாகிஸ்தான் குழாம் 

பாபர் அஸாம் (அணித்தலைவர்), பகார் ஸமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரௌப், இப்திகார் அஹமட், இமாட் வஸீம், குஷ்தில் ஷாஹ், மொஹமட் ஹபீஸ், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் ஆமிர், நஸீம் ஷாஹ், சர்பராஸ் அஹமட், சதாப் கான், ஷஹீன் அப்ரிடி, சுகைப் மலிக், வஹாப் ரியாஸ்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<