பாகிஸ்தான் செல்லும் இலங்கை ஒருநாள் T20 குழாம் அறிவிப்பு

114

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கவிருக்கும் இலங்கை குழாம்களை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று (11) அறிவித்துள்ளது.

முன்னணி வீரர்கள் பாகிஸ்தான் செல்லாமைக்கு இந்தியா காரணமா? – பதில் கூறும் ஹரின்

இலங்கை அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்…

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி, இந்த மாத இறுதியில் இருந்து அடுத்த மாத நடுப்பகுதி வரை கராச்சி மற்றும் லாஹூர் நகர்களில் பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடவுள்ளது. 

அந்தவகையில், இந்த சுற்றுப் பயணத்தில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்காக 15 பேர் அடங்கிய வீரர்கள் குழாமும், T20 தொடருக்காக 16 பேர் அடங்கிய வீரர்கள் குழாமும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களான திமுத் கருணாரத்ன, லசித் மாலிங்க, அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா உள்ளிட்ட 10 முன்னணி வீரர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சுற்றுப் பயணத்தில் பங்கேற்க மறுப்புத் தெரிவித்தனர். எனவே, இந்த சுற்றுப் பயணத்தில் நடைபெறவிருக்கும் ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாட இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதன்படி, ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் தலைவராக முன்வரிசை துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்ன செயற்படவுள்ளார். ஏற்கனவே, 2015ஆம் ஆண்டில் இலங்கை அணியினை வழிநடாத்தியிருக்கும் லஹிரு திரிமான்ன இலங்கை அணியின் தலைவர் பொறுப்பினை பெறுவது இது இரண்டாவது தடவையாகும்.

இதேநேரம், இந்த சுற்றுப் பயணத்தின் போதான T20 தொடரில் இலங்கை அணியின் தலைவராக அதிரடி சகலதுறை வீரர் தசுன் ஷானக்க செயற்படவுள்ளார். இலங்கை அணியினை சர்வதேச தொடர் ஒன்றில் தசுன் ஷானக்க வழிநடாத்துவது இதுவே முதல் தடவையாகும். 

குறித்த தொடர்களில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் வீரர்களாக T20 அணியின் தலைவர் தசுன் ஷானக்கவுடன் இணைந்து தனுஷ்க குணத்திலக்க, சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாந்து, ஒசத பெர்னாந்து ஆகியோர் காணப்படுகின்றனர். 

இவர்களோடு உள்ளூர் போட்டிகளில் அண்மைக்காலமாக சிறப்பாக செயற்பட்டுவரும் துடுப்பாட்ட வீரரான மினோத் பானுக்கவிற்கும் இந்த சுற்றுப் பயணத்தின் போது இருவகைப் போட்டிகளிலும் தனது திறமையினை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. 

முக்கிய வீரர்கள் இன்றி பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி

இம்மாத கடைசில் இடம்பெறவுள்ள இலங்கை அணியின் பாகிஸ்தான்…

இதேவேளை, உள்ளூர் போட்டிகளில் சிறப்பான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தும் பானுக்க ராஜபக்ஷ இந்த சுற்றுப் பயணத்தின் போதான இலங்கை T20 குழாமில் மட்டும் சகலதுறை வீரர் லஹிரு மதுசங்கவுடன் இணைந்து வாய்ப்பினை பெற்றிருக்கின்றார். எனினும், இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக செயற்படும் லஹிரு திரிமான்னவிற்கு, பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின் போதான T20 தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.    

இந்த சுற்றுப் பயணத்தில் இலங்கை அணியின் பிரதான சகலதுறை வீரர்களாக செஹான் ஜயசூரிய, வனிது ஹஸரங்க மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோர் செயற்படவுள்ளனர். 

மறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சுத் துறைக்கு இந்த சுற்றுத் தொடரின் அனைத்து வகைப் போட்டிகளிலும் லஹிரு குமார, நுவான் பிரதீப், கசுன் ராஜித மற்றும் இசுரு உதான ஆகியோர் வேகப் பந்துவீச்சாளர்களாக வலுச்சேர்க்க, லக்ஷான் சந்தகன் பிரதான சுழல் பந்துவீச்சாளராக இருக்கவுள்ளார். 

இலங்கை ஒருநாள் அணிக்குழாம் 

லஹிரு திரிமான்ன (அணித் தலைவர்), தனுஷ்க குணத்திலக்க, மினோத் பானுக்க, கசுன் ராஜித, தசுன் ஷானக்க, இசுரு உதான, அவிஷ்க பெர்னாந்து, லஹிரு குமார, லக்ஷான் சந்தகன், செஹான் ஜயசூரிய, சதீர சமரவிக்ரம, ஒசாத பெர்னாந்து, அஞ்செலோ பெரேரா, வனிது ஹஸரங்க, நுவன் பிரதீப் 

இலங்கை T20 குழாம் 

தசுன் ஷானக்க (அணித் தலைவர்), தனுஷ்க குணத்திலக்க, மினோத் பானுக்க, கசுன் ராஜித, இசுரு உதான, அவிஷ்க பெர்னாந்து, லஹிரு குமார, லக்ஷான் சந்தகன், செஹான் ஜயசூரிய, சதீர சமரவிக்ரம, ஒசாத பெர்னாந்து, அஞ்செலோ பெரேரா, வனிது ஹஸரங்க, நுவன் பிரதீப், பானுக்க ராஜபக்ஷ, லஹிரு மதுசங்க 

சுற்றுத் தொடர் அட்டவணை 

ஒருநாள் தொடர் 

  • முதல் போட்டி – செப்டம்பர் 27 –கராச்சி 
  • இரண்டாவது போட்டி – செப்டம்பர் 29 – கராச்சி
  • மூன்றாவது போட்டி – ஒக்டோபர் 03 – கராச்சி

T20 தொடர் 

  • முதல் போட்டி – ஒக்டோபர் 05 – லாஹுர் 
  • இரண்டாவது போட்டி – ஒக்டோபர் 07 – லாஹுர் 
  • மூன்றாவது போட்டி – ஒக்டோபர் 09 – லாஹுர்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<