பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தில் ஆடுவது தொடர்பில் ஆலோசனைக் கூட்டம்

231

இந்தியாவில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடுவதனை தீர்மானிக்க பிலாவல் பூட்டோ தலைமையிலான குழு வியாழக்கிழமை (03) ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>செய்பர்ட்டின் அதிரடி ஆட்டத்துடன் கோல் அணிக்கு இரண்டாவது வெற்றி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது இந்தியா செல்வதில் இருக்கும் சில சிக்கல்களை கருத்திற்கொண்டு, பாகிஸ்தான் பிரதமர் சாஹ்நபாஸ் சரீப் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நியமனம் செய்த குழுவே ஒன்று கூடவிருப்பதோடு இந்த குழு இந்தியாவில் சில பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட பின்னர் தமது அணியினை இந்தியாவில் விளையாட அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தவகையில் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடமும் (ICC), இந்திய கிரிக்ககெட் கட்டுப்பாட்டு சபையிடமும் (BCCI) பாதுகாப்பு செயற்பாடுகளுக்கான அனுமதியினை விரைவில் பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய – பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடையில் தொடர்ச்சியாக நிலவி வரும் அரசியல் குளறுபடிகளே அந்த நாடுகள் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் ஆடாமல் இருப்பதற்கு காரணமாக அமைந்திருப்பதோடு,  அதன் ஒரு அங்கமாகவே இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ணத்தில் பாதுகாப்பு செயற்பாடுகளுக்கான அனுமதியும் கோரப்பட்டிருக்கின்றது.

மறுமுனையில் பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தில் விளையாட இருக்கும் இரண்டு போட்டிகளின் திகதிகளில் மாற்றம் செய்யப்படும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது. இந்த தகவல் உத்தியோகபூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படாத போதிலும் இந்திய அணியுடன் பாகிஸ்தான் ஆடவிருக்கும் போட்டியின் திகதியிலும், நெதர்லாந்து அணியுடன் விளையாடவிருக்கும் போட்டியின் திகதியிலுமே குறித்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக நம்பத்தகுந்த செய்தி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.எனினும் மைதானங்களில் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாது எனக் கூறப்பட்டிருக்கின்றது.

>>இந்திய அணிக்கு தலைவராக திரும்பும் பும்ரா

அதேநேரம் போட்டிகளின் திகதிகளின் மாற்றங்கள் மேற்கொள்ளப்படின் உலகக் கிண்ணத் தொடருக்கான மாற்றப்பட்ட போட்டி அட்டவணை அடுத்த வாரமளவில் வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<