இலங்கை A அணிக்கெதிராக 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார் நஷீம் ஷா

Pakistan A tour of Sri Lanka 2021

158

சுற்றுலா பாகிஸ்தான் A கிரிக்கெட் அணிக்கும், இலங்கை A கிரிக்கெட் அணிக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (29) நிறைவுக்கு வந்தது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி, பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இதில் பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்காக விளையாடி வருகின்ற 18 வயதுடைய வலதுகை வேகப்பந்துவீச்சாளரான நஷீம் ஷா அபாரமாகப் பந்துவீசி 53 ஓட்டங்ளை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இலங்கை A அணியை பந்துவீச்சில் மிரட்டிய நஷீம் ஷா

இதனையடுத்து, தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்ற பாகிஸ்தான் A கிரிக்கெட் அணி, சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது ஒரு விக்கெட் இழப்பிற்க்கு 70 ஓட்டங்களைப் பெற்று நிதானமாக விளையாடி வருகிறது.

உத்தியோகபூர்வமற்ற இருதரப்பு தொடருக்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் A அணி, இலங்கை A அணியுடன் நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி வருகின்றது.

இந்த நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட போட்டி நேற்று (28) கண்டி பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை A கிரிக்கெட் அணி, போட்டியின் முதல் நாள் நிறைவில் 61 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. இதன்போது சுமிந்த லக்ஷான் ஒரு ஓட்டத்துடன் களத்தில் நின்றார்.

பாகிஸ்தான் A தொடருக்கான இலங்கை குழாத்தில் மொஹமட் சிராஸ்!

இதனிடையே, போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் (29) இலங்கை A கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது.

இதில் ஏழாவது விக்கெட்டுக்காக சுமிந்த லக்ஷான் மற்றும் மொஹமட் சிராஸ் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 27 ஓட்டங்களை சேர்த்தனர். எனினும், சுமிந்த லக்ஷான் 17 ஓட்டங்களையும், மொஹமட் சிராஸ் 7 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

தொடர்ந்து வந்த லசித் எம்புல்தெனிய மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகிய இருவரும் 9 விக்கெட்டுக்காக பெறுமதியான 31 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்த்தனர்.

எனினும், நஷீம் ஷாவின் அபார பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய 22 ஓட்டங்களுடனும், அசித பெர்னாண்டோ ஓட்டமின்றியும் வெளியேற, இலங்கை A அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

மழையினால் கைவிடப்பட்ட நீலங்களின் சமர் முதல்நாள் ஆட்டம்

பாகிஸ்தான் A கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில் நஷீம் ஷா 53 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், குர்ராம் ஷஸாத் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், இர்பானுல்லாஹ் ஷா 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனைத்தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் A கிரிக்கெட் அணி, தங்களுடைய முதல் விக்கெட்டினை 25 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அப்துல்லாஹ் சபீக் (9) லசித் எம்புல்தெனியவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனிடையே, சீரற்ற காலநிலை காரணமாக போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதுடன், முதல் இன்னிங்ஸுக்காக விளையாடி வருகின்ற பாகிஸ்தான் A கிரிக்கெட் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ஓட்டங்களை எடுத்திருந்தது.

அணித்தலைவர் சவுத் சகீல் 35 ஓட்டங்களுடனும், ஒமைர் யூசுப் 26 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

நாளை போட்டியின் மூன்றாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை A அணி – 141/10 (46) – விஷ்வ பெர்னாண்டோ 30*, லஹிரு உதார 23, லசித் எம்புல்தெனிய 22, கமில் மிஷார 20, நஷீம் ஷா 53/5, குர்ராம் ஷஸாத் 25/3, இர்பானுல்லாஹ் ஷா 40/2

பாகிஸ்தான் A அணி – 70;/1 (23) – சவுத் சகீல் 35*, ஒமைர் யூசுப் 26*, லசித் எம்புல்தெனிய 22/1

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<