தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பக்கீர் அலி பதில்

280

பஹ்ரெய்னில் அண்மையில் நிறைவுக்கு வந்த 23 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளன (AFC) கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்தில் பங்கேற்றிருந்த இலங்கை அணி, 3 லீக் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது.

இதுஇவ்வாறிருக்க, பலஸ்தீனம் மற்றும் பஹ்ரெய்ன் ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டங்களில் தலா 9 கோல்கள் அடிப்படையில் இலங்கை அணி படுதோல்விகளை சந்தித்தது. இதனையடுத்து, இலங்கை அணியின் செயற்பாடு மற்றும் அணித் தேர்வு குறித்து சமூகவலைத்தளங்கள் வாயிலாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

பங்களாதேஷிடம் போராடித் தோற்றது இலங்கை

பஹ்ரைனில் நடைபெறும் 23 வயதுக்கு உட்பட்ட “2020 AFC கால்பந்து சம்பியன்ஷிப்”…

இந்த நிலையில், இலங்கை கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் நிசாம் பக்கீர் அலி, பங்களாதேஷ் அணிக்கெதிரான இறுதி லீக் ஆட்டத்துக்கு முன் இதுகுறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நாட்டுக்காக என்னுடைய வியர்வை மற்றும் இரத்தங்களையெல்லாம் சிந்தி நான் விளையாடியுள்ளேன். அதேபோல, ஒரு பயிற்சியாளராகவும் அதே தியாகத்தை தற்போது முன்னெடுத்து வருகிறேன். என்னைப் போல இலங்கையின் கால்பந்தாட்டத்துக்காக பல தியாகங்களைச் செய்த இன்னும் சிலர் தெரிவுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். அவர்களது மேற்பார்வையின் கீழ் தான் 23 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை அணி தெரிவு செய்யப்பட்டது. அதேபோல, இலங்கை கால்பந்து அணிக்காக விளையாடிய இரண்டு முன்னாள் நட்சத்திர வீரர்களும் எமது அணியுடன் பஹ்ரெய்ன் சுற்றுப்பயணத்தில் இணைந்துகொண்டனர் என தெரிவித்தார்.

1976ஆம் ஆண்டு முதல் 1980களின் நடுப்பகுதி வரை இலங்கை தேசிய கால்பந்து அணிக்காக விளையாடிய பக்கீர் அலி, 1979ஆம் ஆண்டு இலங்கை அணியின் தலைவராகவும் செயற்பட்டார்.

இதேநேரம், இலங்கையின் கால்பந்து விளையாட்டுக்கு பாரிய சேவையாற்றிய முக்கிய வீரர்களில் ஒருவராகவும், அனுபவமிக்க பயிற்சியாளராகவும் வலம்வந்து கொண்டிருக்கின்ற பக்கீர் அலி, நீர்கொழும்பு யூத், ஜுப்பிட்டர்ஸ், ரத்னம், ஜாவா லேன் உள்ளிட்ட உள்ளூர் கழகங்களின் பிரதான பயிற்சியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

FFSL தலைவர் மற்றும் சகாக்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

கடந்த வார இறுதியில் முக்கிய திருப்பமாக இலங்கை கால்பந்து சம்மேளனத் (FFSL)…

அதேபோல, மாலைத்தீவுகள், பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கழகங்களின் பயிற்சியாளராகச் செயற்பட்டிருந்த அவர், 2018ஆம் ஆண்டு இலங்கை கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இதுஇவ்வாறிருக்க, அண்மையில் நிறைவுக்கு வந்த டயலொக் சம்பியன்ஸ் லீக் மற்றும் ப்ரிமியர் லீக் டிவிஷன் 1 ஆகிய கால்பந்து போட்டித் தொடர்களில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த ஒருசில முக்கியமான வீரர்களை 23 வயதுக்குட்பட்ட இலங்கை கால்பந்து அணியில் இணைத்துக் கொள்ளத் தவறியமை குறித்து பல வாதப் பிரதிவாதங்களும் முன்வைக்கப்பட்டன.  

இந்த நிலையில், இம்முறை நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளன கிண்ண தகுதிச் சுற்றுக்கான இலங்கை வீரர்களின் தெரிவு குறித்தும் தலைமைப் பயிற்றுவிப்பாளர் நிசாம் பக்கீர் அலி தெளிவுபடுத்தியிருந்தார்

>>Photos: Sri Lanka Training Session | 2020 AFC U23 Championship Qualifiers

  • டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களில் நடைபெற்ற பெரும்பாலான லீக் ஆட்டங்களை நேரடியாகச் சென்று கண்டுகளித்தேன்.  
  • ThePapare.com இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்து போட்டித் தொடர்களை பார்த்து வீரர்களைத் தெரிவு செய்தேன்.
  • யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேசங்களில் உள்ள திறமையான வீரர்களை தெரிவுசெய்ய அங்கு சென்றிருந்தேன்.
  • பி குழாத்தில் இடம்பெற்றுள்ள வீரர்களையும் தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அழைப்பு விடுத்தேன்.
  • அனைத்து வீரர்களுக்கும் தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு வழமையாக கொடுக்கப்படுகின்ற 20 நிமிடங்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு நான்கு நாட்கள் அவகாசம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தேன்.
  • விளையாட்டுத்துறை அமைச்சினால் பெயரிடப்பட்ட 3 முன்னாள் வீரர்களைக் கொண்ட தேர்வுக்குழு உறுப்பினர்களின் முன்னிலையில் இந்த வீரர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
  • முதலில் 85 வீரர்களையும், அதன்பிறகு 52, 32 மற்றும் 23 என வீரர்கள் தெரிவு இடம்பெற்றது.  

இதேநேரம், இம்முறை நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளன கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டித் தொடரில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட தோல்வியை அடுத்து, சமூகவலைத்தளங்கள் வாயிலாக தன்மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு பலத்த எதிர்ப்பினைனையும் அவர் தெரிவித்திருந்தார். அத்துடன், தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்து வகையில் பொய்யான செய்திகளை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவுடன் தன்னை ஒப்பிட்டு போலிப் பிரச்சாரங்களை செய்தவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

AFC சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) 2020 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் 23 வயதின்…

இதேவேளை, தனது சேவையினைப் பெற்றுக்கொள்ள பல வெளிநாட்டு கழகங்கள் அணுகி வருவதாகத் தெரிவித்த பக்கீர் அலி, இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் வழங்கப்படுகின்ற சம்பளத்தைக் காட்டிலும் இரு மடங்கு சம்பளத்தை புறம்தள்ளிவிட்டு இலங்கைக்கு சேவையாற்றும் நோக்கிலேயே மாலைத்தீவுகளில் இருந்து வந்து பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனது நாட்டுக்காக ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் எனது முழுப் பங்களிப்பையும் வழங்கியுள்ளேன். தற்போது மாத்திரமல்லாது எதிர்காலத்திலும் அவ்வாறு கடமையாற்றுவதற்கு தயாராகவுள்ளேன். அதேபோல, இலங்கை கால்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்காக என்னால் முடியுமான அனைத்து ஒத்துழைப்பினையும் வழங்குவேன். நீங்கள் மேசையில் உட்கார்ந்துகொண்டு மற்றவர்களின் வேலைகளை குறைகூறுகின்றீர்கள். ஆனால், நாங்கள் வெயில், மழை, இரவு, பகல் என்று பார்க்காமல் மௌனமாக இருந்து கொண்டு இலங்கையின் கால்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்காக வீரர்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம் என்றார்.  

இதேநேரம், இலங்கை வீரர்களின் இந்த பின்னடைவு குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், நான் இலங்கை அணியைப் பொறுப்பெடுத்த போது எந்த வீரரும் அணியில் இருக்கவில்லை. அதன்பிறகு தேசிய அணிக்காக வீரர்களை தேடுவதற்கு நேரிட்டது. எனினும், இந்தப் பதவியில் இருந்து நான் செல்லும்போது அந்த பதவிக்கு வரவுள்ள புதிய பயிற்சியாளருக்கு நல்லதொரு அணியை வழங்கிவிட்டுச் செல்வேன் என குறிப்பிட்டார்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<