AFC சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

342

இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) 2020 ஆம் ஆண்டில்  நடைபெறவிருக்கும் 23 வயதின் கீழ்ப்பட்ட ஆசிய கால்பந்து சம்மேளன (AFC) சம்பியன்ஷிப்  தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்கும் 23 பேர் அடங்கிய இலங்கை கால்பந்து குழாத்தினை அறிவித்துள்ளது.

இம்மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை பஹ்ரேனில் இடம்பெறும் இந்த தகுதிகாண் போட்டிகளில் இலங்கை குழு B அணிகளோடு மோதல்களில் பங்கெடுக்கவுள்ளது. இலங்கையின் குழுவில் பங்களாதேஷ், தகுதிகாண் போட்டிகள் இடம்பெறும் பஹ்ரேன் மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகளின் கால்பந்து அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.

SAFF அரையிறுதியில் இலங்கை மகளிர் தோல்வி

இந்த தகுதிகாண் போட்டிகளுக்கான பங்கெடுக்கும் இலங்கை கால்பந்து அணி புதன்கிழமை (20) பஹ்ரேன் நோக்கி பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த தகுதிகாண் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை கால்பந்து அணியில் 3 கோல்காப்பாளர்கள், 4 முன்கள வீரர்கள், 8 மத்தியகள வீரர்கள் மற்றும் 8 பின்கள வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஆசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை கால்பந்து அணியினை ரினோன் விளையாட்டுக் கழகத்தின் றாசிக் றிசாட் தலைவராக வழிநடாத்த, ரட்னம் விளையாட்டு கழகத்தின் சசாங்க டில்ஹார ஜயசேகர பதில் தலைவராக செயற்படுகின்றார். இந்த இரண்டு வீரர்களும் இந்தப் பருவகாலத்திற்கான டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தினை காட்டியிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை கால்பந்து அணியில் ரினோன் மற்றும் சொலிட் விளையாட்டு கழகங்களிலிருந்து தலா 3 வீரர்கள் வீதம் இடம்பெற,  பொலிஸ் விளையாட்டுக் கழகம், ரட்னம் விளையாட்டுக் கழகம், நேவி சீ ஹோக்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் சோன்டர்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றிலிருந்து தலா 2 வீரர்கள் வீதம் தெரிவாகியுள்ளனர். அதேநேரம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலிருந்தும் 7 வீரர்கள் தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை கால்பந்து அணியில் இடம்பிடித்துள்ளனர். இதேவேளை, பஹ்ரேனின் உள்ளூர் அணிக்காக கால்பந்து போட்டிகளில் ஆடிய விசால் குணரத்னவும் இலங்கை கால்பந்து அணியில் இடம்பெற்றிருக்கின்றார்.

Photo Album : Sri Lanka Training Session | 2020 AFC U23 Championship Qualifiers

எனினும், இந்த தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை கால்பந்து அணியில் இந்தப் பருவகாலத்திற்கான டயலொக் சம்பியன்ஸ் லீக், டிவிஷன் – I கால்பந்து தொடர் போன்ற முன்னணி தொடர்களில் சிறப்பாக செயற்பட்ட மொஹமட் ஆகீப் (கொழும்பு கால்பந்து கழகம்), டிலீப் பீரிஸ் (ரினோன் வி.க), நவீன் ஜூட் (ஜாவா லேன் வி.க), மஹேந்திரன் தினேஷ் (நேவி சீ ஹோக்ஸ் வி.க) மற்றும் தனுஷ பெரேரா (பொலிஸ் வி.க) ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

எனினும், இலங்கை கால்பந்து அணியில் வடக்கு, கிழக்கினை சேர்ந்த வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு தங்களது திறமைகளை சர்வதேச ரீதியில் வெளிக்காட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பம் உருவாக்கி கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை அணியின் பயிற்சி நேரப் புகைப்படங்களைப் பார்வையிட…

ஆசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகளில் இலங்கை கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பக்கீர் அலி செயற்பட, சம்பத் பண்டார கோல்காப்பு பயிற்சியாளராக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேநேரம், இலங்கை கால்பந்து அணியின் முகாமையாளராக சுனில் சேனவீர செயற்படுகின்றார்.

இலங்கை கால்பந்து அணி

றாசிக் றிசாட் (அணித்தலைவர்), சசங்க டில்ஹார ஜயசேகர (பிரதி அணித்தலைவர்), மொஹமட் சஹீல் (நேவி சீ ஹோக்ஸ் விளையாட்டுக் கழகம்), சபீர் றசூனியா (பொலிஸ் விளையாட்டு கழகம்), றிப்கான் மொஹமட் (பொலிஸ் விளையாட்டு கழகம்), மொஹமட் முஜீப் (ரினோன் விளையாட்டு கழகம்), அல்பிரேட் தனேஷ் (சொலிட் விளையாட்டு கழகம்), ஜோய் நிதுஷன் (சென். ஜோசப் விளையாட்டு கழகம், மன்னார்), மொஹமட் சிபான் (மாவனல்லை யுனைடட்), சத்துர லக்ஷான் தனன்ஞய (நியூ யங்ஸ் விளையாட்டு கழகம்), சுந்தராஜ் நிரேஷ் (சோன்டர்ஸ் விளையாட்டுக் கழகம்), அமான் பைசர் (ரட்னம் விளையாட்டு கழகம்), மொஹமட் முஸ்தாக் (நியூ ஸ்டார் விளையாட்டு கழகம்), விஷால் குணரத்ன (மானாமா கால்பந்து கழகம், பஹ்ரேன்), சமோத் டில்சான் (சோன்டர்ஸ் விளையாட்டுக் கழகம்), பத்தும் விமுக்தி (ரெட் சன் விளையாட்டு கழகம், கம்பொல), சிவகுமாரன் கிருஷாந்த் (சொலிட் விளையாட்டு கழகம்), ஜூட் சுமன் (ரினோன் விளையாட்டு கழகம்), மொஹமட் றினாஸ் (பயனிர்ஸ் விளையாட்டு கழகம், கிண்ணியா), அந்தோனி சுபாஷ் (கொலின்ஸ், யாழ்ப்பாணம்), விக்கும் அவிஷ்க (நேவி சீ ஹோக்ஸ் விளையாட்டுக் கழகம்), மொஹமட் இஷான் (சொலிட் கால்பந்து கழகம்), நுவன் கிம்ஹானா (HGS ப்ளூ அணி, பிலியந்தல)

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<