T20 உலகக் கிண்ண குழு B இல் முன்னேற்றம் காட்டுமா பங்களாதேஷ் அணி??

549

ஆறாவது T20 உலகக் கிண்ணத் தொடர் இன்னும் ஓரிரு நாட்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த தொடரின் முதல் சுற்றின் குழு B இல் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, பபுவா நியூ கினியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் பலப்பரீட்சை நடாத்தவிருக்கின்றன.

T20 உலகக் கிண்ண இந்திய அணியில் மாற்றம்

குழு B இல் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆதிக்கம் அதிகம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதும் எதனையும் கணிக்க முடியாத T20 கிரிக்கெட்டில் ஓமான், ஸ்கொட்லாந்து மற்றும் பபுவா நியூ கினியா ஆகிய நாடுகளும் திருப்பு முனைகளை ஏற்படுத்த முடியும்.

T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றுக்கு பங்களாதேஷ் தவிர ஓமான், ஸ்கொட்லாந்து மற்றும் பபுவா நியூ கினியா ஆகிய நாடுகள் 2019ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் போட்டிகள் மூலம் தெரிவாகியிருக்கின்றன.

மொத்தம் 14 நாடுகள் பங்குபற்றிய குறித்த தகுதிகாண் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றிருந்தன. T20 உலகக் கிண்ண முதல் சுற்றின் குழு B போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அதே நிலைமைகளைக் கொண்ட ஓமானில் நடைபெறவிருப்பதனால் ஓமான், ஸ்கொட்லாந்து மற்றும் பபுவா நியூ கினியா ஆகிய நாடுகளுக்கு ஆடுகள நிலைமைகளை முன்னதாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் மூலம் முன்னரே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

பங்களாதேஷ் அணி

T20 உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை நொக்அவுட் (Knock Out) சுற்றுக்கு தெரிவாகாத அணிகளில் ஒன்றாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இருந்த போதும், அண்மைய நாட்களில் அவ்வணி குறிப்பாக நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக T20 தொடர்களில் வெற்றிகளை பதிவு செய்திருந்தது.

பங்களாதேஷ் அணியின் அண்மைய இந்த வெற்றிகள், T20 போட்டிகளில் அவ்வணி மிகவும் வலுவடைந்திருப்பதனை எடுத்துக் காட்டுகின்றது. இதுதவிர, பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர்களான முஷ்தபிசுர் ரஹ்மான் மற்றும் சகீப் அல் ஹசன் ஆகியோர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளிலும் திறமையினை வெளிப்படுத்தியிருந்தனர். எனவே, T20 உலகக் கிண்ணத்தில் முதல் சுற்றின் குழு B இல் காணப்படும் மிகவும் பலம் வாய்ந்த அணி பங்களாதேஷ் என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.

மஹமதுல்லா மூலம் வழிநடாத்தப்படும் பங்களாதேஷ் அணியில் அனுபவம் கொண்ட ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் இல்லாத போதும் முஸ்பிகுர் ரஹீம், சகீப் அல் ஹசன், சௌம்யா சர்க்கர் போன்ற வீரர்கள் அணியின் துடுப்பாட்டத்திற்கு நம்பிக்கை சேர்க்க, முஸ்தபிசுர் ரஹ்மான், மெஹதி ஹஸன் மற்றும் தஸ்கின் அஹமட் போன்ற வீரர்கள் பந்துவீச்சாளர்களாக பங்களாதேஷினை வலுப்படுத்துகின்றனர்.

மஹேலவால் T20 ஹீரோவான அகில

பங்களாதேஷ் குழாம் – மஹமதுல்லா (அணித்தலைவர்), சகீப் அல் ஹசன், முஸ்பிகுர் ரஹீம், சௌம்யா சர்க்கர், லிடன் தாஸ் குமார், அபிப் ஹொசைன், மொஹமட் நயீம், நூருல் ஹசன் சொஹான், சமிம் ஹொசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மட், மொஹமட் சயீபுத்தின், சொரிபுல் இஸ்லாம், மெஹதி ஹஸன், நசும் அஹ்மட்

ஓமான் அணி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் துலிப் மெண்டிஸ் பயிற்றுவிப்பில் ஓமான் கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ண போட்டிகளில் பங்கெடுக்கின்றது.

இந்த T20 தொடரில் பங்கேற்கும் ஓமான் அணி இந்தியா, பாகிஸ்தான் வம்சாவளி வீரர்களை கொண்டு பூரணப்படுத்தப்பட்ட ஒரு அணியாக காணப்படுகின்றது. எனவே, T20 உலகக் கிண்ணத்தில் எந்நேரத்திலும் எந்த அணிக்கும் அதிர்ச்சி கொடுக்க கூடிய ஒரு அணியாக ஓமான் காணப்படுகின்றது.

இதேநேரம் அண்மையில் இலங்கை வீரர்களுடன் நிறைவுக்கு வந்த T20 தொடரிலும் ஓமான் வீரர்கள் திறமையினை நிரூபித்திருந்ததனை தொடர்ச்சியாக அவதானிக்க கூடியதாக இருந்தது. அதேநேரம், 2019ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை (18) சாய்த்த பந்துவீச்சாளரான பிலால் கான், மொஹமட் நதீம் போன்ற பந்துவீச்சாளர்கள் ஓமான் அணியின் பந்துவீச்சுத்துறைக்கு பலம் சேர்க்க, அணித்தலைவர் ஷீசான் மக்சூத், விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் நஷிம் குஷி, மற்றும் உப தலைவர் ஆகிப் இல்யாஸ் போன்றோர் ஓமான் அணியில் எதிர்பார்க்கப்படும் துடுப்பாட்டவீரர்களாக காணப்படுகின்றனர்.

முதல் ஓவரில் மூன்று விக்கெட்டுகள்! ; மெதிவ்ஸின் அசத்தல் பந்துவீச்சு

ஓமான் குழாம் – ஷீசான் மக்சூத் (அணித்தலைவர்), ஆகிப் இல்யாஸ், கவார் அலி, பய்யாஸ் பட், நெஸ்டர் தம்பா, சந்தீப் கௌட், கலிமுல்லா, அய்யான் கான், பிலால் கான், சுராஜ் குமார், நஷீம் குஷி, சுபியான் மஹ்மூட், மொஹமட் நதீம், குர்ராம் நவாஸ், ஜடின்தர் சிங்

பபுவா நியூ கினியா

நடைபெறப்போகும் T20 உலகக் கிண்ணம் பபுவா நியூ கினியாவின் கன்னி T20 உலகக் கிண்ணமாக கருதப்படுகின்றது. T20 உலகக் கிண்ணத்திற்காக நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளிலும் அதி சிறப்பான முறையில் செயற்பட்ட பபுவா நியூ கினியா, தமது கன்னி T20 உலகக் கிண்ண போட்டி வெற்றியுடன் இந்த முறை வேறு அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்க முடியும்.

அவ்வணியின் வீரர்களை நோக்கும் போது அணித் தலைவர் அஸ்ஸாட் வாலா மற்றும் டொனி ஊரா ஆகியோர், தமது தரப்பிற்கு பலம் சேர்க்க கூடிய பிரதான வீரர்களாக இருப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இந்த வீரர்கள் அடங்கலாக பபுவா நியூ கினியா அணியினர் தமது கன்னி T20 உலகக் கிண்ணப் போட்டியில் எதிர்வரும் 17ஆம் திகதி ஓமான் அணியினை எதிர்கொள்கின்றனர்.

பபுவா நியூ கினியா குழாம் – அஸ்ஸாட் வாலா (தலைவர்), சார்ளஸ் அமினி, சிமோன் ஆட்டை, செஸே போ, கிப்லின் டொரிகா, ஜேக் கார்ட்னர், ஹிரி ஹிரி, ஜேசன் கிலா, கபுவா மொரியா, நொசைனா போக்கனா, டேமியன் ரேவு, லெக்கா சியாக்கா, சாட் சொப்பர், கௌடி டோக்கா, டோனி ஊரா, நோமன் வனுஆ

ஸ்கொட்லாந்து அணி

T20 உலகக் கிண்ணத்திற்கான தீர்மானமிக்க தகுதிகாண் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணியினை வீழ்த்தி, ஸ்கொட்லாந்து அணி இம்முறை T20 உலகக் கிண்ணத்திற்கான தகுதியினைப் பெற்றிருந்தது.

கத்துக்குட்டி என்ற போதும் இங்கிலாந்து போன்ற பலமிக்க கிரிக்கெட் அணிகளை தோற்கடித்திருக்கும் ஸ்கொட்லாந்து அணி இலகுவாக எண்ணிவிட முடியாத அணிகளில் ஒன்றாக இம்முறை T20 உலகக் கிண்ணத்திலும் காணப்படும் என்பதில் சந்தேகமும் இல்லை.

மாயஜாலம் செய்து இலங்கையின் உலகக் கிண்ண கனவினை நனவாக்கிய ஹேரத்

நான்காவது முறையாக T20 உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் களமிறங்கும் ஸ்கொட்லாந்து அணியினை சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினுடைய கடந்த தசாப்தத்தின் அங்கத்துவ நாடுகளுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதினை வென்ற கைல் கோயெட்சர் வழிநடாத்துகின்றார். அவர் தவிர, அணியின் உப தலைவர் ரிச்சி பெர்ரின்ங்டன், சபியான் சரீப் போன்ற வீரர்களும் ஸ்கொட்லாந்து அணியின் எதிர்பார்ப்பு வீரர்களாக காணப்படுகின்றனர்.

ஸ்கொட்லாந்து அணிக்குழாம் – கைல் கொயேட்சர் (தலைவர்), ரிச்சி பெர்ரின்ங்டன், டைலான் பட்ஜ், மெதிவ் குரொஸ், ஜோஸ் டேவி, அலஸ்டைர் எவான்ஸ், கிறிஸ் கிரிவ்ஸ், மைக்கல் லெஸ்க், கெலும் மெக்லொய்ட், ஜோர்ஜ் முன்ஸி, சபியான் சரிப், ஹம்சா தாஹிர், கிரைக் வல்லாஸ், மார்க் வாட், பிரட் வீல்

குழு B போட்டி அட்டவணை

  • ஒக்டோபர் 17 – ஓமான் எதிர் பபுவா நியூ கினியா – மஸ்கட்
  • ஒக்டோபர் 17 – பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து – மஸ்கட்
  • ஒக்டோபர் 19 – ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூ கினியா – மஸ்கட்
  • ஒக்டோபர் 19 – ஓமான் எதிர் பங்களாதேஷ் – மஸ்கட்
  • ஒக்டோபர் 21 – பங்களாதேஷ் எதிர் பபுவா நியூ கினியா – மஸ்கட்
  • ஒக்டோபர் 21 – ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து – மஸ்கட்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…