பாடசாலை கிரிக்கெட் விருத்திக்காக கரம் கொடுக்கும் யாழ். மத்தி பழைய மாணவர்கள்

590

வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியானது அண்மைக்காலங்களில்  கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளை மேற்கொண்டிருக்கின்றது. குறுகிய வளங்களை மாத்திரமே வைத்திருக்கும் இந்தக் கல்லூரி தேசிய கிரிக்கெட் அணிக்கு வீரர்களை அனுப்பும் அளவிற்கு இன்று வளர்ந்திருக்கின்றது.

கிரிக்கெட் விளையாட்டில் பல முன்னேற்றங்களை காட்டி வரும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியினை மேலும் ஊக்குவிக்க அதனது பழைய மாணவர்களும் கைகொடுத்து வருகின்றனர்.

>> இலங்கை வளர்ந்து வரும் அணியை தலைமை தாங்கும் சரித் அசலங்க

அந்தவகையில் பாடசாலையின் கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடற்தகுயினை சரியான முறையில் பேணுவதற்காக “கிரிக்கெட் உடற்பயிற்சி அறை (Cricket Fitness Room)“ ஒன்றினை அமைக்க மிகப் பெரும் பொருட்செலவோடு உடற்பயிற்சி உபகரணங்கள் யாழ். மத்தியின் பழைய மாணவர் தீலிபன் அவர்கள் மூலம் அன்பளிப்புச் செய்யப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாண மத்திய கல்லூரி வீரர்களான மதுஷன் மற்றும் வியாஸ்காந்த் ஆகியோர் அண்மையில் இலங்கையின் 19 வயதின் கீழ்ப்பட்ட தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப்பட்ட இந்த வீரர்கள் ஊடகங்களிற்கு அளித்த செவ்விகளில் தங்களோடு சேர்த்து  தமது பாடசாலை கிரிக்கெட் வீரர்களும் உடற்தகுதியினை சரியான முறையில் பேண வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருந்தனர்.

குறித்த மாணவர்களின் வேண்டுகோளினை பூர்த்தி செய்யும் விதமாகவும் யாழ். மத்திய கல்லூரியின் ஏனைய கிரிக்கெட் வீரர்களின் நன்மை கருதியுமே யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் பழைய மாணவரான தீலிபன் அவர்களினால் கிரிக்கெட் உடற்பயிற்சி அறை ஒன்றினை பாடசாலையில் அமைப்பதற்கு தேவையான உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டிருகின்றது.

சுவிட்சர்லாந்து நாட்டில் வசித்து வருகின்ற யாழ். மத்தியின் பழைய மாணவரான தீலிபன் அவர்கள் தனது பாடசாலை அணிக்காக 1996 ஆம் ஆண்டு வரை வடக்கின் சமர் உள்ளடங்கலாக பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் விளையாடியிருந்ததோடு சுவிட்சர்லாந்து தேசிய கிரிக்கெட் அணிக்காகவும் தற்போது விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தீலிபன் அவர்களின் உதவியோடு உருவாக்கப்பட்ட யாழ். மத்திய கல்லூரி வீரர்களுக்கான உடற்பயிற்சி அறை இலங்கை மண்ணுக்கு முதல் முறையாக சர்வதேச ரீதியில் உயரம் பாய்தலில் தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த முன்னாள் தடகள வீரர் எதிரிவீரசிங்கம் ஐயாவினால் கடந்த வியாழக்கிழமை (29) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இதேநேரம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களினால் நடாத்தப்படும் தொண்டு நிறுவனமான யாழ் எய்ட் (Yarl Aid) இன் உதவியோடு இந்த ஆண்டின் நடுப்பகுதியில் கிரிக்கெட் வீரர்கள் வெளிமாவட்ட போட்டிகளுக்கு பயணம் செய்வதற்காக பாடசாலையின் பேரூந்து வண்டி சுமார் ஒரு இலட்ச ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டிருந்தது.

>> துடுப்பாட்டத்தில் பிரகாசித்த குசல் மெண்டிஸ் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்

யாழ் எய்ட் தொண்டு நிறுவனத்தின் அங்கத்துவராகவும் காணப்படும் தீலிபன் அவர்கள் தனது பாடசாலைக்கான கிரிக்கெட் உடற்பயிற்சி நிலையம் அமைத்தது தொடர்பில் ThePapare.com இடம் பேசிய போது இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“ஒட்டுமொத்த இலங்கை பாடசாலைகள் வரலாற்றில் முதன்மை வகிக்கும் யாழ்ப்பாண மத்திய தாயின் கெளரவத்திற்கு இன்னும் கெளரவம் சேர்க்கும் பாக்கியம் கிடைத்ததை என் வாழ்நாளின் பெருமைமிகுந்த தருணமாக கருதுகின்றேன். எமது பாடசாலை கடந்த காலங்களில் பல்வேறு சிறந்த துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கிய போதிலும் அவர்கள் சில காரணங்களினால் நாடளாவிய ரீதியில் ஜொலிக்க முடியாது போயிருந்தது கவலையளிக்கின்றது. ஆனால், இப்போதைய நாட்களில் எமது பாடசாலை வீரர்கள் 19 வயதின் கீழ்ப்பட்ட அணிகளுக்குரிய சர்வதேச போட்டிகளில் பங்குகொள்ளும் வாய்ப்பினை பெற்றது மகிழ்ச்சி தருகின்றது. எதிர்காலத்தில் எமது மத்திய கல்லூரியின் வீரர்கள் தேசிய கிரிக்கெட் அணியில் பிரகாசிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.“

“என்னை உருவாக்கிய மத்திய தாய்க்கு வடமாகாணத்தின் முதலாவது கிரிக்கெட் உடற்பயிற்சி அறை மூலம் மகுடம் சூட்டி மகிழ்கின்றேன்.“

இவர் தவிர யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மற்றுமொரு பழைய மாணவரான சிவா அவர்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 15 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை காட்டி வரும் இளம் வீரரான சன்சயனுக்கு ஒன்றரை லட்ச ரூபா பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்களை வழங்கி ஊக்குவித்துள்ளார்.

லண்டனை மையமாக கொண்டு செயற்படும் Cricket Direct நிறுவனத்தின் உரிமையாளரான சிவா, சன்சயனுக்கு செய்த உதவிகள் மட்டுமல்லாது அவரது முன்னாள் பாடசாலையில் கிரிக்கெட் விளையாட்டினை விருத்தி செய்ய கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு உதவிகளை தொடர்ச்சியாக செய்து வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவை தவிர யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த ஆண்டு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான பந்துவீச்சு இயந்திரத்தினை யாழ்ப்பாண மத்திய கல்லூரிக்காக கொள்வனவு செய்திருந்தனர்.

மேலும், இந்த பழைய மாணவர்கள் சங்கமே யாழ். மத்திய கல்லூரி அணி கிரிக்கெட் போட்டிகளுக்குச் செல்கின்ற நேரங்களில் போக்குவரத்து உதவிகளை செய்து தருவதுடன், பயிற்றுனர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதிலும் முன்னின்று செயற்படுகின்றது.

>> நியூசிலாந்து செல்லும் இலங்கை அணியில் முக்கிய மாற்றங்கள்

இப்படியாக பல்வேறு உதவிகளின் மூலம் யாழ். மத்திய கல்லூரியின் கிரிக்கெட் விளையாட்டினை வளர்ப்பதற்கு அதன் முன்னாள் மைந்தர்கள் அரும்பாடுபடுகின்றனர். மேலும் அவர்கள் இப்படியான செயற்பாடுகள் மூலம் அடுத்தவர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<