நுவன் சொய்ஸாவுக்கு 6 வருட தடை விதித்த ஐசிசி

ICC Match Fixing Investigations

183

ஐ.சி.சி.யின் மூன்று வகையான ஊழல் தடுப்பு விதிகளை மீறிய இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான நுவன் சொய்ஸாவுக்கு 6 வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்துவகை சார்ந்த கிரிக்கெட் தொடர்புடைய விடயங்களில் எதிர்வரும் 6 வருடங்களுக்கு நுவன் சொய்ஸாவால் பங்கேற்க முடியாது எனவும், இவருக்கான தடைக்காலம் 2018ம் ஆண்டு ஒக்டோபர் 31ம் திகதியிலிருந்து கணிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நுவன் சொய்ஸா மீதான ஊழல் மோசடி குற்றச்சாட்டு நிரூபணம்

கடந்த 2017ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T10 லீக் தொடரில் களமிறங்கிய இலங்கை அணியின், பயிற்சியாளராக நுவன் சொய்ஸா செயற்பட்டிருந்தார். இதன்போது அவர் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் .சி.சி இன் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நுவன் சொய்ஸா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து, .சி.சியினால் நியமிக்கப்பட்ட சுயாதீன நடுவர் தீர்ப்பாயத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகிய பின்னர் .சி.சி இன் பின்வரும் சட்ட விதிகளை மீறியமை நிரூபனமானது.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:

சரத்து 2.1.1 – சர்வதேச போட்டி ஒன்றின்போது தரப்பு ஒன்று நிர்ணயிக்க அல்லது திட்டமிட அல்லது போட்டியில் முறையற்ற முடிவு, முன்னேற்றம், நடத்தை அல்லது ஏனைய அம்சங்களில் செல்வாக்கு செலுத்த முயற்சித்தல்

சரத்து 2.1.4 –  விதிமுறை சரத்து 2.1.1 இனை மீறும் வகையில் வீரர்களை நேரடியாக அணுகல், தூண்டுதல், கவர்தல் அல்லது ஊக்குவித்தல்

சரத்து 2.4.4 – விதிமுறைகளின் கீழ் ஊழல் நடத்தை தொடர்பில் தன் மீதான அழைப்பு அல்லது அணுகல் பற்றி ICC இன் ஊழல் தடுப்பு பிரிவுக்கு முழு விபரத்தை வெளியிட தவறுவது.

மேற்குறித்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்னர், அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதுடன், அவருக்கான தண்டனைகள் அறிவிக்கப்படும் என ஐ.சி.சி. குறிப்பிட்டிருந்தது. அதன்படி, தற்போது 6 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

நுவன் சொய்ஸா 1997ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடியதுடன், 30 டெஸ்ட், 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒட்டுமொத்தமாக 170 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். அதுமாத்திரமின்றி, இவர் கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…