ஆசிய பரா விளையாட்டில் 14 பதக்கங்களுடன் இலங்கைக்கு 14ஆவது இடம்

177

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றுவருகின்ற 3 ஆவது ஆசிய பரா விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதி நாளான இன்று (12) நடைபெற்ற ஆண்களுக்கான T 44/62/64 பிரிவு நீளம் பாய்தலில் நுவன் இந்திக வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இப்போட்டியில் நுவன், 6.09 மீற்றர் தூரம் பாய்ந்து இம்முறை ஆசிய பரா மெய்வல்லுனரில் இலங்கைக்கான கடைசிப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தார்.

ஆசிய பரா விளையாட்டில் போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த

இவர் தனது முதல் 5 முயற்சிகளிலும் முறையே 5.44, 5.85, 5.56, 5.69, 5.79 ஆகிய மீற்றர் தூரங்களைப் பதிவுசெய்த போதிலும், இறுதி முயற்சியில் 6.09 தூரத்தைப் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இது இவ்வாறிருக்க குறித்த போட்டியில் மலேஷியாவின் எட்டி பேர்னாட் புதிய போட்டிச் சாதனையுடன் (6.30 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், இந்தோனேஷியாவின் ரசியிதி (6.05 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தினையும் வென்றனர்.

கடந்த ஏழு தினங்களாக நடைபெற்ற இம்முறை ஆசிய பரா விளையாட்டு விழாவில் 43 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 3000 வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.

இந்த நிலையில், ஆசிய பரா விளையாட்டு விழாவுக்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 35 வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்ததுடன், போட்டிகளின் முடிவில் இலங்கை அணி, 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 14 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 14 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

எனினும், இறுதியாக 2014 ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய பரா விளையாட்டு விழாவில் 14 பதக்கங்களை வென்ற இலங்கை அணி, 19 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க இம்முறை ஆசிய பரா விளையாட்டு விழாவில் ஒரு கையை இழந்த அல்லது முழங்கைக்கு மேல் செயழிலந்த பெண்களுக்கான T 45/46/47 பிரிவு நீளம் பாய்தலில் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர மாற்றுத்திறனாளி வீராங்கனைகளில் ஒருவரான அமரா இந்துமதி, புதிய போட்டிச் சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 4.51 மீற்றர் தூரத்திற்குப் பாய்ந்து திறமையை வெளிப்படுத்தினார்.

எனினும், பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அமரா இந்துமதிக்கு (27.96 செக்.) ஐந்தாம் இடத்தையும், 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நான்காவது இடத்தையும் பெற்றுக்கொள்ள முடிந்தது.

தேசிய விளையாட்டு விழா முதல் நாளில் சண்முகேஸ்வரன், ஆஷிக் ஹெரீனாவுக்கு பதக்கம்

2014 ஆம் ஆண்டு தென்கொரியாவின் இன்சியோனில் நடைபெற்ற ஆசிய பரா விளையாட்டு விழாவில் 2 வெள்ளிப் பதக்கங்களை அமரா இந்துமதி வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பராலிம்பிக் பதக்கம் வென்றவரும், இலங்கை பரா அணியின் தலைவருமான தினேஷ் பிரியந்த ஹேரத், ஒரு கையை செயழிலந்த ஆண்களுக்கான F-46 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் 61.84 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இம்முறை ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கை அணி, முழங்காலுக்கு கீழ் கால்களை இழந்த அல்லது கால் செயலிழந்த ஆண்களுக்கான T 43/63 பிரிவு 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்தது.

இதில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த அமில பிரசன்ன ஆண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்று இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொடுத்திருந்ததுடன், சக இலங்கை வீரரான உபுல் இந்திக சூலதாச வெள்ளிப் பதக்கங்களையும் வென்றார்.

அதே போட்டிப் பிரிவில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வென்ற நிர்மல புத்திக ஆண்களுக்கான T 42/61/63 பிரிவு நீளம் பாய்தல் போட்டியில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இது இவ்வாறிருக்க, இம்முறை ஆசிய பரா விளையாட்டு விழாவில் பங்கேற்றுள்ள 43 நாடுகளில் 33 நாடுகள் இதுவரை பதக்கங்களை வென்றுள்ளதுடன், போட்டிகளின் முடிவில் சீனா 161 தங்கம், 84 வெள்ளி, 55 வெண்கலத்துடன் மொத்தம் 300 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. இதில் 50 தங்கப் பதக்கங்களை வென்ற தென் கொரியா 2 ஆவது இடத்தையும்,  50 தங்கப் பதக்கங்களை வென்ற ஈரான் 3 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<