அசலன்கவின் அபார இரட்டைச் சதத்தோடு சம்பியனான கொழும்பு

133
Colombo vs Jaffna

நேற்று (06) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்த தேசிய சுப்பர் லீக் ஒருநாள் தொடர் (2024) இறுதிப் போட்டியில் சரித் அசலன்கவின் அதிரடி இரட்டைச் சதத்தோடு கொழும்பு அணி ஜப்னாவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.  

>>இலங்கை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிப்பு<<

சுமார் ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த தேசிய சுப்பர் லீக் ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டிக்கு புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற ஜப்னா மற்றும் கொழும்பு அணிகள் தெரிவாகின 

தொடர்ந்து ஆரம்பமாகிய இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய கொழும்பு, சரித் அசலன்கவின் அதிரடி இரட்சைத் சதத்தோடு 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 413 ஓட்டங்கள் பெற்றது 

கொழும்பு துடுப்பாட்டம் சார்பில் 16 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகள் அடங்கலாக 142 பந்துகளில் 206 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் அவிஷ்க பெர்னாண்டோ சதம் விளாசி 113 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 126 ஓட்டங்கள் எடுத்தார். ஜப்னா அணியின் பந்துவீச்சில் லஹிரு மதுசங்க மற்றும் மதீஷ பதிரன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர் 

பின்னர் போட்டியின் சவால் நிறைந்த வெற்றி இலக்காக 414 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு ஆடிய ஜப்னா 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 321 ஓட்டங்களை மட்டும் எடுத்து போட்டியில் தோல்வி அடைந்தது. 

>>தலைவர் பதவியிலிருந்து பாபர் அஷாம் இராஜினாமா!<<

ஜப்னா அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக லஹிரு மதுசங்க 4 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகளோடு 104 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் ரொன் சந்திரகுப்தா 56 ஓட்டங்களையும், மொஹமட் சமாஸ் 49 ஓட்டங்களையும் பெற்றனர் 

கொழும்பு அணியின் பந்துவீச்சில் திலும் சுதீர 3 விக்கெட்டுக்களையும், தசுன் ஷானக்க, சரித் அசலன்க மற்றும் நுவான் துஷார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்தனர் 

போட்டி மற்றும் தொடர் நாயகனாக சரித் அசலன்க தெரிவாக தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரராக அஹான் விக்ரமசிங்கவும், சிறந்த பந்துவீச்சாளராக முதித லக்ஷானும் தெரிவாகினார்.   

போட்டியின் சுருக்கம் 

கொழும்பு – 413/6 (50) சரித் அசலன்க 206, அவிஷ்க பெர்னாண்டோ 126, லஹிரு மதுசங்க 77/2 

 

ஜப்னா – 321 (47.1) லஹிரு மதுசங்க 104, திலும் சுதீர 53/3 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<