கிரஹம் போர்ட் சொல்லாமலேயே இலங்கையை விட்டு வேளியேற இதுதான் காரணமாம்

1381
Graham Ford

இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட், திடீர் என்று சொல்லாமலேயே இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார். அவர் மீண்டும் நாட்டிற்கு வர மாட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தற்பொழுது இலங்கை கிரிக்கெட்டில் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதல் சுற்றுடன் இலங்கை அணி வெளியேறியமை, களத்தடுப்பு தொடர்பிலான விமர்சனங்கள், மாலிங்க – விளையாட்டுத்துறை அமைச்சர் இடையிலான மோதல் என்பவற்றுக்கு இடையில், தற்பொழுது கிரஹம் போர்ட் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளமையானது இலங்கை கிரிக்கெட்டில் ஒரு பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதையே காண்பிக்கின்றது.

விஷேட உடல் தகுதி சோதனைக்கு உள்வாங்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் உடல் தகுதியை அதிகரிக்கும் நோக்குடன்..

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான 43 வயதுடைய கிரஹம் போர்ட், கடந்த வருடம் இரண்டாவது முறையாகவும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். எதிர்வரும் 2019ஆம் அண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் முடிவுறும் வரை அவர் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தற்பொழுது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அணியின் முகாமையாளர் அசங்க குறுசிங்க ஆகியோருடன் இடம்பெற்ற மோதல் நிலையே, போர்ட் பொறுப்பில் இருந்து விலகுவதற்கான கடிதத்தையும் ஒப்படைக்காமல் இவ்வாறு சென்றமைக்கான காரணம் என்று The Sunday Times அறிவித்துள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் நாட்களில் சந்திக்கவுள்ள ஜிம்பாப்வே அணியுடனான தொடருக்கு அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக, தற்போதைய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் நிக் போதாஸ் நியமிக்கப்படலாம் என்று நம்பப்படுகின்றது.

எனினும், போர்டின் வெளியேற்றம் மற்றும் இடைக்காலப் பயிற்றுவிப்பாளர் யார் என்பன தொடர்பிலான எந்தவொரு தகவலையும் இலங்கை கிரிக்கெட் சபைத் தரப்பினர் இன்னும் வெளியிடவில்லை.

டெஸ்ட் அந்தஸ்தை பெற்றுக்கொள்ளும் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சர்வதேச…

இந்த விடயங்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக தற்பொழுது வெளிநாட்டில் உள்ள இலங்கை கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்லி டி சில்வா மற்றும் செயலாளர் மொஹான் டி சில்வா ஆகியோரை ThePapare.com தொடர்புகொள்ள முனைந்த போதும், அது சாத்தியப்படவில்லை.

நிறைவடைந்த சம்பியன்ஸ் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இலங்கை அணி மோசமான களத் தடுப்பின் காரணமாக தொடரில் இருந்து வெளியேறி பலரதும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. அந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்திருந்த கிரஹம் போர்ட், ”இலங்கை அணி தோல்வியடைந்தது குறித்து முழு நாடுமே கோபத்தில் இருந்தது. எனினும், அதனை விட வீரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர் என்பதை பயிற்றுவிப்பாளர் என்ற வகையில் நான் நன்கு அறிகின்றேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வாரம் ஆரம்பமாகிய 30 வீரர்களைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான விஷேட பயிற்சித் திட்டத்தில் போர்ட் கடமையாற்ற இருந்தமையும் நினைவுகூறத்தக்கது.

இவ்வாறான ஒரு நிலையில், கிரஹம் போர்ட் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் பின்னர் இலங்கை வராமலேயே தனது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார் என பிழையான தகவல்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. எனினும், அவர் இலங்கை வீரர்களுடன் நாடு திரும்பி ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.