இளம் வீரர்களைக் கொண்டு கடந்த பருவகாலத்தில் முன்னேற்றகரமான ஆட்டத்தை வெளிக்காட்டியிருந்த புனித அந்தோனியார் கல்லூரி, இம்முறை இடம்பெறும் பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் தொடரை முதல் மூன்று இடங்களுக்குள் நிறைவு செய்யும் எதிர்பார்ப்புடன் களமிறங்கவுள்ளது.

VISIT THE SCHOOLS RUGBY LEAGUE HUB

கல்லூரியின் ரக்பி வரலாறு

புனித அந்தோனியார் கல்லூரியானது இலங்கை பாடசாலை ரக்பி வரலாற்றில் முக்கியமான இடத்தை பெற்றுள்ள ஒரு கல்லூரி எனலாம். ஏனைய முன்னணி பாடசாலைகள் சிலவற்றை போலல்லாது இக்கல்லூரி 1950 களிலேயே ரக்பி விளையாட்டிற்குள் பிரவேசித்தது. எவ்வாறாயினும் 1961ஆம் ஆண்டளவில் புனித அந்தோனியார் கல்லூரியின் மாணவர்கள் மத்தியில் ரக்பி விளையாட்டு பிரசித்தி பெற்றதுடன், அதன் காரணமாக மாணவர்கள் உற்சாகத்துடன் இவ்விளையாட்டில் பங்கேற்க ஆரம்பித்தனர்.

அன்று தொட்டு இன்று வரை இலங்கை பாடசாலை ரக்பி களத்தில் பலமிக்கதொரு அணியாகவும், தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்ற அணியாகவும் புனித அந்தோனியார் கல்லூரி காணப்படுகின்றது. இக்கல்லூரி இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய பல முன்னணி வீரர்களையும் உருவாக்கி தந்துள்ளது. அவர்களுள், இலங்கை தேசிய ரக்பி அணியில் அதிக காலமாக தலைமை பதவியை வகித்தவர் என்ற பெருமையை பெற்றுக் கொண்டுள்ள பிரியந்த ஏக்கநாயக்க குறிப்பிட்டு கூறக்கூடிய வீரராவார்.

புனித அந்தோனியார் கல்லூரியின் ரக்பி வரலாற்றில் மிகச்சிறந்த வெற்றியாக, 2001 ஆம் ஆண்டு டிகிரி திஸாநாயக்கவின் தலைமையின் கீழ் லீக் சம்பியன்களாக முடி சூடிக் கொண்டமையை நினைவு படுத்தலாம்.

கடந்த பருவகாலம்

சில வருடங்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், கடந்த பருவகாலத்தில் இவ்வணி முன்னேற்றகரமான விளையாட்டுப் பாணியை வெளிப்படுத்தியிருந்தது. தர்மராஜ, கிங்ஸ்வூட் மற்றும் வெஸ்லி அணிகளை தோற்கடித்திருந்த போதிலும், இரண்டாம் கட்ட போட்டிகளில் சிறு புள்ளி வித்தியாசங்களில் சில போட்டிகளில் தோல்வியை தழுவியிருந்தது.

எவ்வாறாயினும் கடந்த வருடத்தில் பெரும்பாலும் இளம் வீரர்களை உள்ளடக்கியிருந்த காரணத்தினால், இவ்வருடமும் ஏறத்தாழ அதே அணியே களமிறங்கவுள்ளது. இதன்படி பிற அணிகளுடன் ஒப்பிடுகையில் அனுபவமிக்க அணியாக புனித அந்தோனியார் கல்லூரி காணப்படுகின்றமை அவ்வணிக்கு பலத்தை சேர்க்கவுள்ளது.

முக்கிய வீரர்கள்

Sachintha Akalanka

தினுக் அமரசிங்க: உயரமான பலமிக்க உடல்வாகுவை கொண்டுள்ள மத்திய நிலை வீரரான தினுக் அமரசிங்க தனது ஐந்தாவது வருடமாக களமிறங்கவுள்ளதுடன், அணியின் தலைவராகவும் செயற்படவுள்ளார். வேகத்தை தனது பலமாக கொண்டுள்ள இவர், பின்களத்தின் முக்கிய வீரராக காணப்படுகின்றமையினால் வேகத்துடன் விவேகத்தையும் சிறப்பாக பயன்படுத்தி செயற்பட்டால் தனது அணியின் வாய்ப்புகளை அதிகப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

Samuel Maduwantha

சாமுவெல் மதுவந்த: கடந்த பருவகாலத்தில் தனது அபார உதைக்கும் திறனால் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்த சாமுவெல் மதுவந்த, இம்முறை அணியின் அதிக நம்பிக்கைக்குரிய வீரராகக் காணப்படுகின்றார். இவர் கடந்த வருடம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 105 புள்ளிகளுடன் அதிக புள்ளிகள் பெற்றோரின் பட்டியலில் முதலிடத்தை பெற்றுக் கொண்டார். இம்முறை புனித அந்தோனியார் கல்லூரியின் வெற்றி வாய்ப்புக்களும் சாமுவேலை சார்ந்தே உள்ளன எனலாம்.

Jehan Seelagama

ஜெஹான் சீலகம: வேகத்திலும், ட்ரைகளை பெற்றுக் கொடுக்கும் இறுதி நகர்வுகளிலும் சிறந்து விளங்கும் ஜெஹான் சீலகம, தனி ஒருவராக அணிக்கு வெற்றியை பெற்றுத் தரக்கூடிய வீரராவார். எனினும் கடந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தினை இவர் வெளிக்காட்டாத நிலையில், இம்முறை இவர் பொறுப்பான, முன்னேற்றகரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினால் தனது அணியின் சம்பியன் கனவை நனவாக்கும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

Dinesh Rodrigo

தினேஷ் ரொட்ரிகோ: பலமிக்க முன்வரிசை வீரரான தினேஷ் ரொட்ரிகோ உபதலைவராகவும் முன்வரிசை வீரர்களை வழிநடத்தும் பொறுப்பினையும் ஏற்றுள்ளார். சென்ற வருடம் இவர் தடுப்பாட்டத்தில் சிறந்து காணப்பட்டதுடன், தனது பலத்தின் மூலம் எதிரணியின் தடுப்பை தகர்த்து முன்னேறுவதிலும் திறம்பட செயற்பட்டிருந்தார். முக்கியமாக ஸ்க்ரம் வாய்ப்புக்களின் போது இவரது அனுபவம் மற்றும் உத்திகள் அணிக்கு பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

பயிற்றுவிப்பாளர்கள்

அனுபவமிக்க பயிற்றுவிப்பாளரான வைப்பர் குணரத்ன இவ்வருடமும் புனித அந்தோனியார் கல்லூரியை பொறுப்பேற்றுள்ளதுடன், கண்டி கழகத்தின் பின்கள வீரர்களுக்கான பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் நாலக வீரக்கொடியும் இரண்டாவது வருடமாக புனித அந்தோனியார் கல்லூரிக்கு பயிற்சிகளை வழங்கவுள்ளார்.

  இவ்வருடத்திற்கான குழாம் 

[a-team-showcase-vc ats_team_id=”2165055″]