ஆறாம் இலக்கத்தை நிரந்தரமாக கொடுத்தால் ஓட்டங்களைக் குவிப்பேன் – தனஞ்சய டி சில்வா

1258

இலங்கை டெஸ்ட் அணிக்காக தொடர்ந்து விளையாடி பந்துவீச்சிலும், களத்தடுப்பில் பிரகாசித்தாலும், துடுப்பாட்டத்தில் நிரந்தர இடமொன்று கிடைக்காமையினால் ஓட்டங்களைக் குவிப்பதில் தடுமாற நேரிடுவதாகத் தெரிவித்த தனஞ்சய டி சில்வா, எதிர்வரும் காலங்களில் நிரந்த இடமொன்றில் துடுப்பெடுத்தாட வாய்ப்பளித்தால் அணிக்காக அதிக ஓட்டங்களைப் பெற்றுக் கொடுப்பேன் என தெரிவித்தார். 

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸிற்காக 244 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

தனன்ஜயவின் சதத்தையும் தாண்டி ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து

கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில்….

துடுப்பாட்டத்தில் இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்த தனஞ்சய டி சில்வா சதம் அடித்து அசத்தியதுடன், 109 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 

இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக சதமடிக்க முடிந்தமை தொடர்பில் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தனஞ்சய டி சில்வா கருத்து வெளியிடுகையில், 

”உண்மையில், இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையில் சதமடிக்க கிடைத்தமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல, கடந்த காலங்களில் துடுப்பாட்டத்தில் என்னால் பெரிதளவில் எதுவும் செய்ய முடியாமல் போனது. எனவே இந்த சதமானது எனக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. 

இதற்கு உதவி செய்த அணித் தலைவர், முகாமையாளர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் கொடுத்த ஊக்குவிப்பு மற்றும் ஆலோசனைகள் காரணமாகத் தான் நான் ஆறாம் இடத்தில் களமிறங்கி அணிக்குத் தேவையான நேரத்தில் ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தேன். எனவே இந்த சதம் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என தெரிவித்தார். 

”நாங்கள் இருந்த நிலைமையைப் பார்க்கும் போது எம்மால் மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை அறிந்திருந்தோம். ஆனால், இன்று போட்டி ஆரம்பமாவதற்கு முன் பயிற்சியாளர் மற்றும் அணித் தலைவர் ஆகியோருடன் பேசிய போது 220 அல்லது 230 ஓட்டங்களைக் குவித்தால் நியூசிலாந்து அணிக்கு சற்று நெருக்கடியைக் கொடுக்கலாம் என தெரிவித்திருந்தனர். 

இதனால் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி முடியுமான அளவு ஓட்டங்களைக் குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் நாங்கள் ஆடுகளம் நுழைந்தோம்.

இதில் என்னுடன் இணைந்து டில்ருவன் பெரேரா ஓரளவு ஓட்டங்களைக் குவிக்க உதவி செய்தார். மறுபுறத்தில் விக்கெட்டின் தன்மையை நன்றாக அவதானிக்க முடிந்ததால் என்னால் ஓட்டங்களைக் குவிக்க முடிந்தது. எனவே இந்த சதத்தைப் பெற்றுக்கொள்ள டில்ருவன் பெரேரா மற்றும் அதற்குப் பிறகு துடுப்பெடுத்தாட வந்த வீரர்கள் எனக்கு மிகப் பெரிய ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்” என தெரிவித்தார்.

இதேநேரம், இந்த ஆடுகளத்தில் அதிக ஓட்டங்களைக் குவிப்பது இலகுவாக இருந்ததா என எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 

”உண்மையில், இந்த ஆடுகளத்தில் ஓட்டங்களைக் குவிப்பது கடினமாக இருக்கவில்லை. எனினும், காலை நேரத்தில் அதிகளவு மேகக் கூட்டங்கள் இருந்தமையால் அவர்களுக்கு விக்கெட்டுக்களை வீழ்த்துவது மிகவும் இலகுவாக இருந்தது. இதற்காக வேகப் பந்துவீச்சாளர்களையே அவர்கள் அதிகளவு உபயோகித்திருந்தனர். அதேபோல இவ்வாறான காலநிலையில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எனவே அவர்கள் அந்த நுணுக்கங்களை சிறந்த முறையில் கையாண்டு விக்கெட்டுக்களை எடுத்தனர்” எனத் தெரிவித்தார். 

மாலிங்க தலைமையிலான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள….

இந்த நிலையில், இனிவரும் காலங்களிலும் 6 ஆம் இலக்கத்தில் தொடர்ந்து களமிறங்குவீர்களா என்ற கேள்விக்கு தனஞ்சய டி சில்வா கருத்து தெரிவிக்கையில், 

”இந்த போட்டியில் எனக்கு ஆறாவது இடத்தில் களமிறங்கினால் சிறப்பாக விளையாட முடியும். எனினும், நான் 7 ஆம் இலக்க வீரராகத் தான் ஆரம்பத்தில் விளையாடி வந்தேன். அங்கு ஓட்டங்களைக் குவித்து தான் தற்போது 6 ஆவது இலக்கத்தில் விளையாடி வருகின்றேன். எனவே இந்த இலக்கத்தில் எனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள எதிர்பார்த்துள்ளேன். 

அதேபோல, எனக்கு எதிர்காலத்திலும் ஆறாவது இலக்கதில் விளையாட வாய்ப்பு கிடைக்குமானால் நிச்சயம் அணிக்காக ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க இலகுவாக இருக்கும்” என கூறினார்.

இதேவேளை, பந்துவீச்சுத் துறையில் முன்னேற்றம் காண்பதற்கு கையாண்ட யுக்திகள் குறித்து அவர் பேசுகையில், ”அண்மைக்காலங்களில் எனக்கு ஒரே இடத்தில் தொடர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அணிக்காக விளையாடுகின்ற போது ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பேன்.

பொதுவாக களத்தடுப்பில் நான் தொடர்ந்து எனது பூரண பங்களிப்பினை வழங்கி வருகிறேன். அதேபோல, முன்னரைவிட சிறப்பாக பந்துவீசுவதற்கும் பயிற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறேன். இது எனக்கும், அணிக்கும் மிகப் பெரிய சாதகத்தைப் பெற்றுக் கொடுத்ததாக” அவர் தெரிவித்தார். 

நிசங்கவின் சதத்துடன் ஒருநாள் தொடர் இலங்கை வளர்ந்துவரும் அணி வசம்

உத்தியோகபூர்வற்ற இருதரப்பு கிரிக்கெட்….

இது இவ்வர்றிருக்க, நாணய சுழற்சியில் வெற்றி பெற்று ஏன் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தனஞ்சய டி சில்வா பதிலளிககையில், 

”சீரற்ற காலநிலை நிலவினாலும், ஆடுகளத்தில் மிகப் பெரிய மாற்றம் இருந்திருக்கும் என்பதை என்னால் கூறமுடியாது. அதேபோல, தொடர்ந்து 2 நாட்கள் மழை பெய்யும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் பெரும்பாலும் வெப்பநிலை அதிகளவில் இருக்கும் என்பதை அனைவரும் நன்கு அறிவர். மறுபுறத்தில் அடிக்கடி மழை பெய்ததால் ஆடுகளம் சற்று ஈரலிப்புத் தன்மை கொண்டதாக இருந்தது. இதனால் அவர்களது வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்” என தெரிவித்தார். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<