ICC T20 உலகக் கிண்ணத்துக்கான நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

ICC T20 World 2021

247
ICC T20 World 2021

ஐசிசி T20 உலகக் கிண்ண தொடருக்கான 15 பேர்கொண்ட குழாத்தை நியூசிலாந்து கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐசிசி T20 உலகக் கிண்ணம், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்த தொடரை இந்திய கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்து நடத்தவுள்ளது.

குறித்த இந்த T20 உலகக் கிண்ண தொடருக்கான குழாம்களை பல அணிகள் இதுவரையிலும் தெரிவுசெய்திருக்காத நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் சபை தங்களுடைய குழாத்தை தொடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே அறிவித்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் திலான் சமரவீர

ஐசிசி T20 உலகக் கிண்ணத்துக்கான குழாத்தில் 15 பேர்கொண்ட வீரர்களை இணைக்க முடியும் என்பதுடன், உபாதைகளை கவனத்திற்கொண்டு, மேலதிக ஒரு வீரரையும் நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்தள்ளது. 

அதன்படி, அறிவிக்கப்பட்ட இந்த குழாத்தில் கேன் வில்லியம்ஸன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், சுழல் பந்துவீச்சாளர்கள் மூவரையும், முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் நால்வரையும் இணைத்துள்ளது.

மிச்சல் சென்ட்னர், இஸ் சோதி மற்றும் டொட் எஸ்ட்ல் ஆகியோர் சுழல் பந்துவீச்சாளர்களாக இணைக்கப்பட்டுள்ளதுடன், ட்ரெண்ட் போல்ட், டிம் சௌதி, லொக்கி பேர்கஸன் மற்றும் கெயல் ஜெமிஷன் வேகப் பந்துவீச்சாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். 

அதேநேரம், சகலதுறை வீரர்களாக டார்லி மிச்சல் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். துடுப்பாட்ட வரிசையை பொருத்தவரை மார்க் செப்மன், டெவோன் கொன்வே, கிளேன் பிலிப்ஸ், டிம் செய்பர்ட், கேன் வில்லியம்ஸன் மற்றும் மார்டின் கப்டில் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த குழாத்தில் உபாதைகளை கவனத்தில் கொண்டு, வேகப்பந்துவீச்சாளர் எடம் மில்ன் இணைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த குழாத்திலிருந்து அனுபவ துடுப்பாட்ட வீரர்களான ரொஸ் டெய்லர் மற்றும் கொலின் மன்ரோ ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதுடன், முன்னணி சகலதுறை வீரரான கொலின் டி கிரெண்டோம் நீக்கப்பட்டுள்ளமை அதிகமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

எவ்வாறாயினும், அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழமானது, இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான நியூசிலாந்து குழாம்

கேன் வில்லியம்ஸன் (தலைவர்), டொட் எஸ்ட்ல், ட்ரெண்ட் போல்ட், மார்க் செப்மன், டெவோன் கொன்வே, லொக்கி பேர்கஸன், மார்டின் கப்டில், கெயல் ஜெமிஸன், டார்லி மிச்சல், ஜிம்மி நீஷம், கிளேன் பிலிப்ஸ், மிச்சல் சென்ட்னர், டிம் செய்பர்ட், இஸ் சோதி, டிம் சௌதி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<