சாதனை வெற்றியுடன் டெஸ்ட் தரவரிசையில் மூன்றாமிடத்தில் நியூஸிலாந்து

176
Image Courtesy - ICC

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நேற்று (30) வெளியிடப்பட்டுள்ள அணிகளுக்கான புதிய டெஸ்ட் தரப்படுத்தலின்படி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து அணி மேலதிகமாக இரண்டு புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.

நியூஸிலாந்து மண்ணுக்கு சுற்றுப்பணயம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி நியூஸிலாந்து அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 சர்வதேச போட்டிகள் என்பவற்றில் விளையாடி வருகின்றது.

இலங்கையை வீழ்த்தி சாதனை வெற்றியை பதிவுசெய்த நியூசிலாந்து

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நேற்றுடன் (30) நிறைவுக்கு வந்துள்ள நிலையில் முதல் டெஸ்டை இலங்கை அணி போராடி சமப்படுத்த, இரண்டாவது டெஸ்டை நியூஸிலாந்து அணி பாரிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1 – 0 எனும் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

நியூஸிலாந்து அணியின் குறித்த வெற்றியானது, அவ்வணி பெற்றுக் கொண்ட அதிகூடிய ஓட்ட வித்தியாசத்தினாலான வெற்றியாகும். மேலும், நியூஸிலாந்து அணி தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் தொடரைகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை – நியூஸிலாந்து டெஸ்ட் தொடர் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது, அணிகளுக்கான புதிய டெஸ்ட் தரப்படுத்தலை நேற்று (30) வெளியிட்டுள்ளது.

அதன் பிரகாரம், நியூஸிலாந்து அணி இந்த வெற்றியின் மூலம் நான்காமிடத்திலிருந்து 2 புள்ளிகள் பெற்று அவ்விடத்தில் இருந்த தென்னாபிரிக்க அணியை பின்தள்ளி மூன்றமிடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போது மொத்தமாக 107 புள்ளிகளை அவ்வணி பெற்றுள்ளது.

இருந்தாலும், தென்னாபிரிக்க அணி பாக்கிஸ்தான் அணியுடன் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. ஒரு போட்டி நிறைவடைந்துள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி 1 – 0 எனும் அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி தொடரை கைப்பற்றும் பட்சத்தில் தரவரிசையில் இரண்டாமிடத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.

இதேவேளை தரவரிசையில் முன்னனியில் காணப்படும் இந்திய அணி அவுஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. 3 ஆவது போட்டி நேற்று (30) நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இந்திய அணி 2 – 1 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

நியூஸிலாந்து அணியுடனான தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கை அணி 95 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் காணப்பட்டது. பின்னர் டெஸ்ட் தொடரை 1 – 0 என இழந்திருந்தாலும், இலங்கையை பின்தொடர்ந்து ஏழாமிடத்தில் காணப்படுகின்ற பாகிஸ்தான் அணி 92 புள்ளிகளுடன் காணப்பட்டதனால் இலங்கை அணிக்கு தரவரிசையில் எந்தவித இடமாற்றமும் ஏற்படவில்லை.

அபார வெற்றியுடன் டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா

ஐ.சி.சி இனால் நேற்று (30) வெளியிடப்பட்ட அணிகளுக்கான புதிய டெஸ்ட் தரப்படுத்தல் பின்வருமாறு,

  1. இந்தியா – 116 புள்ளிகள்
  2. இங்கிலாந்து – 108 புள்ளிகள்
  3. நியூஸிலாந்து – 107 புள்ளிகள்
  4. தென்னாபிரிக்கா – 106 புள்ளிகள்
  5. அவுஸ்திரேலியா – 102 புள்ளிகள்
  6. இலங்கை – 93 புள்ளிகள்
  7. பாகிஸ்தான் – 92 புள்ளிகள்
  8. மேற்கிந்திய தீவுகள் – 70 புள்ளிகள்
  9. பங்களாதேஷ் – 69 புள்ளிகள்
  10. ஜிம்பாப்வே – 13 புள்ளிகள்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<