அசந்த டி மெல் தலைமையில் புதிய கிரிக்கெட் தெரிவுக் குழு

1071

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவருமான அசந்த டி மெல் இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரஹெம் லெப்ரோய் இரண்டு பதவிகளை வகிப்பது குறித்து ஐசிசி அறிக்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக …

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவராக கிரஹெம் லெப்ரோய் செயற்பட்டு வந்தார். இந்த நிலையில், இலங்கை அணியின் அண்மைக்கால தோல்விகளுக்கும், வீரர்கள் தெரிவு தொடர்பிலும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், கிரஹெம் லெப்ரோய் உள்ளிட்ட முன்னாள் தெரிவுக் குழு உறுப்பினர்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவை நேற்று (25) விளையாட்டுத்துறை அமைச்சில் சந்தித்தனர்.

இதன்போது, கடந்த ஒரு வருட காலத்துக்கும் மேலாக இலங்கை கிரிக்கெட்டுக்கு வழங்கிய சேவைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர், புதிய தெரிவுக் குழு நியமனம் தொடர்பிலான அறிவிப்பையும் வெளியிட்டார்.  

இதன்போது, முன்னாள் தெரிவுக் குழு உறுப்பினர்களான காமினி விக்ரமசிங்க, ஜெரில் வவுட்டர்ஸ், எரிக் உபஷாந்த உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக அசந்த டி மெல்லை நியமிக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அசந்த டி மெல், இதற்கு முன் 2004ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் முதற்தடவையாக தெரிவுக் குழுவின் தலைவராக செயற்பட்டிருந்ததுடன், அன்று முதல் சுமார் 6 வருடங்கள் (2012 வரை) கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவராக கடமையாற்றியிருந்தார்.

1982ஆம் ஆண்டு இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் இலங்கை தேசிய அணிக்கான அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட வலதுகை மித வேகப்பந்து வீச்சாளரான அசந்த டி மெல், 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். அதேபோல, துடுப்பாட்டத்திலும் முன்னிலை வீரராகத் திகழ்ந்த அவர் 326 ஓட்டங்களையும் குவித்தார்.

மேலும், 1982இல் ஒருநாள் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட அவர், 57 போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுக்களையும், 466 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

1986இல் டெஸ்ட் அரங்கிலிருந்தும், 1987இல் ஒரு நாள் அரங்கிலிருந்தும் அவர் ஓய்வு பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு அஞ்செலோ மெதிவ்ஸ் பந்துவீச மாட்டார்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் மற்றும் T20 …

அத்தோடு, முன்னைய தெரிவுக் குழுக்களில் கடமையாற்றிய முன்னாள் வீரர்களான பிரண்டன் குருப்பு, ஹேமந்த விக்ரமரத்ன மற்றும் சமிந்த மெண்டிஸ் ஆகியோர் புதிய தெரிவுக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விளையாட்டுத்துறை யாப்பு திருத்தத்தின் பிரகாரம், இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவும் தெரிவுக் குழு உறுப்பினராக இணைந்து செயற்படவுள்ளார்.

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்துக்கான இலங்கை அணியைத் தெரிவு செய்வது இப்புதிய தெரிவுக் குழுவின் முதலாவது பணியாக அமையவுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, விளையாட்டுத்துறை அமைச்சரால் அண்மையில் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினராக முன்னாள் தெரிவுக் குழுத் தலைவர் கிரஹெம் லெப்ரோய் அண்மையில் நியமிக்கப்பட்டமை நினைவுகூறத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…