NSL ஒருநாள் தொடரின் சம்பியனாக மகுடம் சூடியது தம்புள்ள அணி

National Super League 2023

122

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் 2ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில், நடப்புச் சம்பியன் ஜப்னா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மினோத் பானுக தலைமையிலான தம்புள்ள அணி சம்பியனாக முடிசூடியது.

முன்னதாக கடந்த மாதம் நிறைவடைந்த தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் ஜப்னா அணியை வீழ்த்தி தம்புள்ள அணி சம்பியன் பட்டத்தை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, ஜப்னா அணியின் சார்பில் நவோத் பரணவிதான, நிஷான் மதுஷ்க ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். நிஷான் மதுஷ்க 12 ஓட்டங்களுடன் அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதனைத்தொடர்ந்து வந்த கசுன் அபேரட்ன, ஜனித் லியனகே, கமேஷ் நிர்மால், லஹிரு மதுசங்க உள்ளிட்ட முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க கண்டி அணி 99 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நவோத் பரணவிதான பெற்றக்கொண்ட அரைச் சததத்தின் உதவியோடு ஜப்னா அணி 47.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 160 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

ஜப்னா அணிக்காக துடுப்பெடுத்தாட்டத்தில் வலுச்சேர்த்த நவோத் பரணவிதான 6 பௌண்டரிகளுடன் 72 பந்துகளில் 51 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுக்க, தம்புள்ள அணியின் பந்துவீச்சில் லக்ஷான் சந்தகன், துஷான் ஹேமன்த மற்றும் சொனால் தினூஷ ஆகிய மூவரும் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

161 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணிக்கு அணித்தலைவர் மினோத் பானுக மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் தலா ஓரு ஓட்டத்துடன் ஏமாற்றம் கொடுத்தனர்.

எனினும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக, அஷான் பிரியன்ஜன் மற்றும் சொனால் தினூஷ ஆகியோரது துடுப்பாட்ட பங்களிப்புடன் தம்புள்ள அணி, 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை எடுத்து இலகு வெற்றியைப் பதிவுசெய்தது.

தம்புள்ள அணியின் துடுப்பாட்டத்தில் பவன் ரத்நாயக 80 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களையும், சொனால் தினூஷ 52 பந்துகளில் 45 ஓட்டங்களையும், அஷான் பிரியன்ஜன் 33 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

ஜப்னா தரப்பில் பினுர பெர்னாண்டோ மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

எனவே ஜப்னாவுக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய தம்புள்ள அணி, இந்த ஆண்டு தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரின் சம்பியனாக மகுடம் சூடியது.

இந்த நிலையில், தேசிய சுபர் லீக் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சம்பியனாகிய தம்புள்ள அணிக்கு 2 மில்லியன் ரூபா பணப்பரிசும், இரண்டாவது இடத்தைப் பிடித்த ஜப்னா அணி;க்கு ஒரு மில்லியன் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.

விருதுகள்

  • தொடரின் சிறந்த பந்துவீச்சாளர் – லஹிரு சமரகோன் (தம்புள்ள)
  • தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர் – பசிந்து சூரியபண்டார (காலி)
  • தொடர் ஆட்டநாயகன் – அஷேன் பண்டார (கொழும்பு)
  • ஆட்டநாயகன் (இறுதிப்போட்டி) – சொனால் தினூஷ (தம்புள்ள)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<