லஹிரு உதார, அஹானின் சிறப்பாட்டத்தால் கண்டிக்கு முதல் வெற்றி

107

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் இன்றைய தினம் (20) ஒரு போட்டி மாத்திரம் நடைபெற்றிருந்த நிலையில், சகலதுறையிலும் பிரகாசித்த கண்டி அணி 8 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இதன் மூலம் இம்முறை தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த 2 தோல்விகளுக்குப் பிறகு முதல் வெற்றியை கண்டி அணி பதிவு செய்தது.

இதனிடையே, கண்டியில் நடைபெறவிருந்த ஜப்னா மற்றும் கொழும்பு அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக முதல் இன்னிங்ஸ் மாத்திரம் விளையாடப்பட்ட நிலையில் நிறுத்தப்பட, தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் காலி மற்றும் கண்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

காலி அணியின் பணிப்புரைக்கு அமைய இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி, லஹிரு உதாரவின் சதம் மற்றும் அஹான் விக்ரமசிங்கவின் அரைச் சதத்தின் உதவியுடன், 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 293 ஓட்டங்களை எடுத்தது. அணித்தலைவர் லஹிரு உதார 12 பௌண்டரிகளுடன் 108 பந்துகளில் 109 ஓட்டங்களைக் குவித்தார்.

இவருக்கு அடுத்தப்படியாக இளம் வீரர் அஹான் விக்ரமசிங்க 77 பந்துகளில் 71 ஓட்டங்களைக் குவிக்க, காலி அணியின் பந்துவீச்சில் அகில தனன்ஜய 3 விக்கெட்டுகளையும், மொஹமட் சிராஸ், கவிஷ்க அன்ஜுல மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் சற்று கடினமான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய காலி அணி, 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 285 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சொஹான் டி லிவேரா 44 பந்துகளில் 52 ஓட்டங்களையும், பெதும் குமார 68 பந்துகளில் 66 ஓட்டங்களையும், பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சுமிந்த லக்ஷான் 41 பந்துகளில் 42 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

கண்டி அணியின் பந்துவீச்சில் மொவின் சுபசிங்க, அஷைன் டேனியல் மற்றும் புலின தரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி – 293 (50) – லஹிரு உதார 109, அஹான் விக்ரமசிங்க 71, அகில தனன்ஜய 3/41, மொஹமட் சிராஸ் 2/45, பிரவீன் ஜயவிக்ரம 2/53

காலி அணி – 285 (49.4) – பெதும் குமார 66, சொஹான் டி லிவேரா 52, சுமிந்த லக்ஷான் 42, மொவின் சுபசிங்க 3/15, அஷைன் டேனியல் 3/36, புலின தரங்க 3/43

முடிவுகண்டி அணி 8 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<