12 சாதனைகள் முறியடிக்கப்பட்ட 42ஆவது தேசிய விளையாட்டுத் திருவிழாவின் நீச்சல் தொடர்

194

சுகததாஸ உள்ளக நீச்சல் அரங்கில் ஆரம்பமான 42வது தேசிய விளையாட்டுத் திருவிழா நீச்சல் தொடரின் முதலாவது நாள் முடிவில் மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நீச்சல் வீர வீராங்கனைகள் தொடரில் ஆதிக்கம் செலுத்தியதுடன், இதன்போது மொத்தமாக 12 சாதனைகள் முறியடிக்கப்பட்டமை முக்கிய விடயமாகும்.

42ஆவது தேசிய விளையாட்டுத் திருவிழா நீச்சல் தொடர் சுகததாஸ உள்ளக நீச்சல் அரங்கில் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய சிறந்த நீச்சல் வீர வீராங்கனைகளின் முனைப்பான பங்குபற்றலுடன் ஆரம்பமானது.

போட்டியின் ஆரம்பத்தில் தேசிய நீச்சல் வீராங்கனை இஷானி சேனாநாயக்க, பெண்களுக்கான 800 மீற்றர் போட்டியினை 9:55:00 நிமிடங்களில் கடந்து புதிய சாதனையை பதிவு செய்தார். இவர் தனது முந்தைய 10:10:56 நிமிட சாதனையை முறியடித்து புதிய சாதனையை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்திய இஷானி 200 மீற்றர் ப்ரீ-ஸ்டைல் போட்டியினை 2:16:91 நிமிடங்களில் கடந்து கடந்த வருடம் அவர் ஏற்படுத்திய சாதனையையும் முறியடித்தார்.

தொடர்ந்து மேல் மாகாண அணியின் வெற்றியினை பலப்படுத்தும் விதமாக, 14 வயது நிரம்பிய ஹிருனி பெரேரா, பெண்களுக்கான 200 மீற்றர் தனியார் போட்டியில் 2:41:04 நிமிட நேரத்தில் போட்டியை முடித்து புதிய சாதனையைப் பதிவு செய்தார்.

விசாகா கல்லூரியைச் சேர்ந்த ரமுதி சமரக்கோன், இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். பெண்களுக்கான 50 மீற்றர் பட்டர்பிளை போட்டி மற்றும் 100 மீற்றர் ப்ரெஸ்ட்ஸ்ட்ரோக் போட்டிகளை அவர் முறையே புதிய சாதனை நேரங்களான 36:73 வினாடிகள் மற்றும் 1:19:52 நிமிடங்களில் முடித்தார்.

வளர்ந்து வரும் வீராங்கனையான நீர்கொழும்பைச் சேர்ந்த ஹிருனி பெரேராவும் இரண்டு பதக்கங்களை சுவீகரித்தார். அவர் பெண்களுக்கான 200 மீற்றர்  தனியார் போட்டித்தொடரினை 2:41.04 நிமிடங்களிலும் 200 மீற்றர் பட்டர்பிளை போட்டியினை  1:09:18 நிமிடங்களிலும் கடந்து சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார்.

அதேபோன்று, றோயல் கல்லூரியின் பழைய மாணவரும் கடற்படை அணி நீச்சல் வீரருமான கனித முனசிங்க, தனது தரப்பிலும் இரண்டு தங்கப் பதக்கங்களை சுவீகரித்துக்கொண்டார். இவர் முறையே 50 மீற்றர் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் மற்றும் 100 மீற்றர் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் போட்டிகளில் வெற்றி பெற்றார். மேலும் சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தை சேர்ந்த வெற்றி வீராங்கனையான வினோலி சிறிவர்தன, மேல் மாகாண அணி சார்பாக மேலும் இரு பதக்கங்களை வென்று கொடுத்தார். அவர் பெண்களுக்கான 200 மீற்றர் பெக் ஸ்ட்ரோக்  மற்றும் 50 மீற்றர் பெக் ஸ்ட்ரோக் போட்டிகளில் குறித்த தூரங்களை சாதனை நேரத்தில் கடந்து வெற்றிவாகை சூடினார்.

முதல் நாள் இடம்பெற்ற 17 போட்டிகளிலும் மேல் மாகாண வீர வீராங்கனைகள் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி அனைத்து போட்டிகளையும் தம்வசப்படுத்தினர். முதல் நாள் இடம்பெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற மேல் மாகாண அணி ஒட்டு மொத்த வெற்றியாளர் கிண்ணத்தையும் சுவீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.