பங்களாதேஷ் வீரருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது ஐசிசி

124

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் நசீர் ஹெசைனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டை நசீர் ஹெசைன் ஒப்புக்கொண்டதையடுத்து, சர்வதேச கிரிக்கெட் சபை 2 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அவருக்கு தடை விதித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு அபுதாபில் நடைபெற்ற T10 லீக் தொடரில் பாரிய அளவில் முறைகேடு நடந்தது அம்பலமானது. ஆட்டத்தை முன்கூட்டியே நிர்ணயம் செய்ய முயற்சி (Match Fixing), இரகசிய தகவல் பரிமாற்றம், சூதாட்டம் நோக்கில் சந்தேக நபர்கள் அணுகியதை தெரிவிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் புனே டெவில்ஸ் அணியின் இணை உரிமையாளர்களான இந்தியாவின் கிரிஷன் குமார் சவுத்ரி, பராக் சங்வி, உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ரிஸ்வான் ஜாவித், சலியா சமன், துடுப்பாட்ட பயிற்சியாளர் அசார் ஜாய்தி, உதவிப் பயிற்சியாளர் சன்னி தில்லான், அணி முகாமையாளர் ஷதப் அஹமட் மற்றும பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் நசீர் ஹெசைன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, குறித்த தொடரில் நடுவர்கள் உள்பட, 7 வீரர்கள் மற்றும் அணி உரிமையாளர்களுடன் சேர்ந்து பங்களாதேஷ் வீரர் நசீர் ஹெசைனும் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஐசிசி ஆதாரத்துடன் கடந்த 2023 செப்டம்பர் மாதம் கண்டுபிடித்தது.

இதில் குறிப்பாக சூதாட்டம் செய்ததற்காக 750 அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பெற்றதை து பங்களாதேஷ் வீரர் நசீர் ஹெசைன் ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் சொல்லாமல் மறைத்து விட்டார். அதற்காக நடத்தப்பட்ட விசாரணையின் போது ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் ஒத்துழைப்பு கொடுக்காமலும் அவர் எதிர்மறையாக நடந்து கொண்டுள்ளார். ஆனாலும் இறுதிக்கட்ட விசாரணையில் நசீர் ஹொசைன் தன் மீது வைக்கப்பட்ட புகார்களை ஒப்பு கொண்டதாக தெரிய வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து அவருக்கு சர்வதேசம் முதல் உள்ளூர் வரை அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அடுத்த 2 ஆடுண்கள் விளையாடுவதற்கு தடை விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் 2.4.3, 2.4.4, 2.4.6 ஆகிய 3 அடிப்படை விதிமுறைகளை மீறிய அவருக்கு 2 ஆண்டுகள் தடை மட்டுமல்லாமல் கூடுதலாக 6 மாதங்கள் விளையாடுவதற்கு இடைக்காலத் தடையும் விதிக்கப்படுவதாக ஐசிசி கூறியுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் 2025 ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி வரை அவரால் எந்த வகையான கிரிக்கெட்டிலும் விளையாட முடியாது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

32 வயதான நசீர் ஹொசைன் பங்களாதேஷ் அணிக்காக 19 டெஸ்ட், 65 ஒருநாள் மற்றும் 31 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<