ஹட்ரிக் சம்பியன் பட்டம் வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்?

261
Mumbai Indians

இந்திய ப்ரிமியர் லீக் (IPL) தொடரின் கடந்த இரண்டு பருவகாலங்களிலும் சம்பியன் பட்டம் வென்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, தமது ஹட்ரிக் சம்பியன் பட்டக் கனவுகளுடன் 2021ஆம் ஆண்டுக்கான IPL தொடரில் களம் காணுகின்றது.

முதல் போட்டி – எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் (ஏப்ரல் 9, சென்னை)

IPL தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியினர், கடந்த காலங்களில் ஆறு தடவைகள் IPL தொடரின் இறுதிப் போட்டிக்கு நுழைந்திருப்பதோடு அதில் ஐந்து தடவைகள் சம்பியன் பட்டங்களுக்கு சொந்தக்காரர்களாகவும் மாறியிருக்கின்றனர். 

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு பிரதான காரணமாக அவ்வணியின் அடிப்படைத்தளம் இருப்பதனை கூற முடியும். அந்தவகையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட நட்சத்திரம் மஹேல ஜயவர்தன மூலம் பயிற்றுவிக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பக்கபலமாக அதன் அணித்தலைவர் ரோஹித் சர்மா, ஜஸ்பிரிட் பும்ரா, (கடந்த காலங்களில் லசித் மாலிங்க), கீரோன் பொலார்ட் மற்றும் பாண்டியா சகோதரர்கள் ஆகியோர் இருக்கின்றனர். 

இதேநேரம் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய உள்ளடக்கத்தினை இளம் வீரர்களான இஷான் கிஷான், றாகுல் சஹார் போன்ற வீரர்களுடன் சேர்த்து சுர்யகுமார் யாதவ் மற்றும் குயின்டன் டி கொக் ஆகியோர் ஒரு மிகச் சிறந்த அணியாக மாற்றுகின்றனர்.  

பலம்

கடந்த காலத்தில் நடைபெற்ற IPL தொடர்களினை நோக்கும் போது, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர்கள் உபயோகம் செய்த அனைத்து வியூகங்களும் வெற்றியளித்ததாகவே கருதப்படுகின்றது. 

எனவே, இம்முறைக்கான தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியினர் தாம் முன்னர் உபயோகித்த அந்த வியூகங்களை தொடர்ந்தும் பிரயோகம் செய்து மீண்டும் ஒரு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள் என கருதப்படுகின்றது. 

அணித்தெரிவு

இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இம்முறை அவர்களது முதல் பதினொருவர் அணியினை தெரிவு செய்வதில் ஒரு சவால் காணப்படுகின்றது. ஏனெனில், அவ்வணிக்கு புதிய உள்ளடக்கங்களாக மாறியிருக்கும் அனுபவம் கொண்ட சுழல் பந்துவீச்சாளர் பியூஸ் சவ்லா எதிர்பார்க்கப்படும் இளம் வீரர்களான மார்க் ஜான்சென் மற்றும் அர்ஜூன் டெண்டுல்கர் போன்றோர் அவர்களின் முதல் பதினொருவர் அணியினைத் தேர்வு செய்வதில் பிரதான பங்கு வகிப்பார்கள் எனத் தெரியவருகின்றது. 

அதேநேரம், அவ்வணியில் ஏற்கனவே இருக்கின்ற வீரர்களான அதிரடித் துடுப்பாட்டவீரர் கிறிஸ் லின் மற்றும் ஜேம்ஸ் நீஷம் போன்றோருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பதினொருவர் அணியில் வாய்ப்பு பெறுவதற்கான சவால் அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகின்றது. 

முழுமையான அணிக்குழாம்

ரோஹித் சர்மா (அணித்தலைவர்), ஹர்திக் பாண்டியா, கீய்ரோன் பொலார்ட், ஜஸ்பிரிட் பும்ரா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், அன்மோல் ப்ரீட்சிங், குயின்டன் டி கொக், அதித்யா டாரே, க்ருனால் பாண்டியா, ஜயந்த் யாதவ், ட்ரென்ட் போல்ட், கிறிஸ் லின், தவால் குல்கர்னி, றாகுல் சஹர், அன்குல் ரோய், சௌரப் திவாரி, மொஹ்சின் கான், அடம் மில்னெ, நேதன் குல்டர் நைல், பியூஸ் சவ்லா, ஜிம்மி நீஷம், யுத்விர் சரக், மார்கோ ஜான்சேன், அர்ஜூன் டெண்டுல்கர்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு <<