IPL வரலாற்றில் மும்பை படைத்த மோசான சாதனை

Indian Premier League 2022

171
BCCI

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் ஒரு சீசனில் தொடர்ச்சியாக முதல் 7 போட்டிகளில் தோல்விகளை சந்தித்த முதல் அணி என்ற மோசமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி பதிவுசெய்தது.

மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் போட்டியில் டோனியின் கடைசி நேர அதிரடியின் உதவியால் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை சென்னை சுபர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் தொடர்ச்சியாக முதல் 7 போட்டிகளில் தோல்விகளை சந்தித்த முதல் அணி என்ற மோசமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்தது.

இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு டெல்லி கெபிடல்ஸ் அணியும், 2019ஆம் ஆண்டு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் தங்களது முதல் 6 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தன. அந்த மோசமான சாதனையை தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி முந்தியுள்ளது.

அதேபோல, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் 5 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்து தடவைகள் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு வெற்றிகூட பெறவில்லை. இதன்மூலம் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இதுஇவ்வாறிருக்க, இந்த தொடர்ச்சியான தோல்விக்குப் பிறகு மும்பை அணிக்கு பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தது 14 புள்ளிகள் எடுக்க வேண்டும். அந்தவகையில் மும்பை அணிக்கு இன்னும் 7 போட்டிகள் எஞ்சியிருப்பதால் அனைத்திலும் வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் வந்துவிடும்.

ஆனால் அது நடந்தாலும் ஒரு சிக்கல் உள்ளது. புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்திற்காக மற்ற அணிகளும் 14 புள்ளிகளுடன் இருக்க வேண்டும். அதில் ஓட்டவிகித அடிப்படையில் மும்பை அணி ஒருபடி முன் இருந்தால், பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். தற்போது இருக்கும் சூழலை பார்த்தால் அப்படி நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது

கடைசியாக 2011ஆம் ஆண்டு 10 அணிகள் தலா 14 லீக் போட்டிகளில் விளையாடியது. அதில் பஞ்சாப் அணி 14 புள்ளிகளைப் பெற்ற போதும், ஓட்டவிகித அடிப்படையில் 5ஆவது இடத்தைப் பெற்று பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. ஒருவேளை, இம்முறை ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிஷ்டம் இருந்தால், அனைத்து விடயங்களும் ஒருசேர நடந்து பிளே-ஆப் செல்லலாம்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<