வெறும் 42 பந்தில் சதம் அடித்து புதிய மைல்கல்லை எட்டிய அப்ரிடி

886
Derbyshire Falcons v Hampshire - NatWest T20 Blast

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், அதிரடித் துடுப்பாட்ட வீரருமான சஹீட் அப்ரிடி, T-20 அரங்கில் தனது முதலாவது சதத்தை நேற்று பதிவு செய்தார்.

இங்கிலாந்தின் உள்ளூர் T-20 போட்டியான 4ஆவது நெட்வெஸ்ட் T-20 போட்டித் தொடரின் காலிறுதிப் போட்டிகள் நேற்று ஆரம்பமாகின. இதன் முதலாவது காலிறுதியில் ஹேம்ப்ஷெயர்டெர்பைஷெயர் அணிகள் மோதின. இதில் ஹேம்ப்ஷெயர் அணியில் பாகிஸ்தானின் அதிரடி வீரர் அப்ரிடி விளையாடி வருகின்றார்.

நேற்றைய போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டெர்பைஷெயர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி ஹேம்ப்ஷெயர் அணிக்காக சஹீட் அப்ரிடி மற்றும் கெல்வின் டிகின்சன் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். T-20 போட்டிகளில் முதற்தடவையாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய அப்ரிடி, வெய்னி மெட்சன் வீசிய முதல் ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி அபார ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.  

மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் அணியில் மீண்டும் கிறிஸ் கெய்ல்

பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட்…

தொடர்ந்து சளைக்கமால் அதிரடி காட்டிய அப்ரிடி, டெர்பைஷெயர் அணியின் பந்து வீச்சாளர்களை திக்குமுக்காடச் செய்து 20 பந்துகளில் அரைச் சதத்தை கடந்தார். இந்நிலையில், 65 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இம்ரான் தாஹிர் வீசிய பந்தை சிக்ஸர் நோக்கி வேகமாக அடித்த அப்ரிடியின் பிடியெடுப்பை மெட்சன் தவறிவிட்டார்.

அதனையடுத்து அதிரடியாக விளையாடிய அப்ரிடி, வெறும் 42 பந்தில் சதம் அடித்து T-20 அரங்கில் புதிய மைல்கல்லை எட்டினார். இதில் 10 பௌண்டரிகள், 7 சிக்ஸர்களும் அடங்கும். எனினும் அபாரமாக விளையாடி அப்ரிடி மெட் ஹென்ரியின் பந்து வீச்சில் 101 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

இவ்வாறு தனது துடுப்பாட்டத்தில் அதிரடியைக் காட்டிய அப்ரிடி, பாகிஸ்தான் அணிக்காக குறைந்த பந்தில் சதம் அடித்த 2ஆவது வீரராக இடம்பெற்றதுடன், அதற்காக அவர் 200 இன்னிங்ஸ்களை செலவழித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அஹமட் ஷேசாத், 2012ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் T-20 தொடரில் 40 பந்துகளில் சதம் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இங்கிலாந்து உள்ளூர் T-20 போட்டியில் அதிவேகமாக சதம் குவித்த 4ஆவது வீரராகவும், உலகின் 12ஆவது வீரராகவும் அவர் இடம்பிடித்தார்.

37 வயதான வலது கை துடுப்பாட்ட வீரரான சஹீட் அப்ரிடி, T-20 அரங்கில் கன்னிச்சதம் குவித்த 6ஆவது வயது மூத்த வீரரராகவும் இடம்பிடித்தார். இதற்கு முன் இங்கிலாந்தின் போல் கொல்லிங்வூட் 41 வயதிலும், இலங்கையின் சனத் ஜயசூரியா 39 வயதிலும், இங்கிலாந்தின் க்ரேம் ஹிக் மற்றும் ஐக்கிய அரபு இராட்சியத்தின் சைமான் அன்வர் ஆகிய வீரர்கள் 38 வயதிலும், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 37 வயதிலும் இம்மைல்கல்லை எட்டினர்.

இதேவேளை, அப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் ஹேம்ப்ஷெயர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களைக் குவித்தது. நெட்வெஸ்ட் T-20 தொடரில் ஹேம்ப்ஷெயர் அணியின் அதிகபட்ச ஓட்டமாக இது அமைந்தது. எனினும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெர்பைஷெயர் அணி 148 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த தோல்வியைத் தழுவியது. போட்டியின் ஆட்ட நாயகனாக அப்ரிடி தெரிவானார். இந்த வெற்றியால் ஹேம்ப்ஷெயர் அணி அரையிறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

வர்த்தக சேவை கிரிக்கெட் பி பிரிவின் அனுசரணையாளராக யுனிலிவர்

வர்த்தக சேவை கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற 2017/2018

கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகின்ற பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான அப்ரிடி, 2010ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றதுடன், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.

இதனையடுத்து பாகிஸ்தான் T-20 அணியின் தலைவராக செயற்பட்ட அப்ரிடிக்கு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற T-20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து பல்வேறு சர்ச்சைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. பின்னர் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் அழுத்தங்களுக்கு மத்தியில் இவ்வருடம் பெப்ரவரி மாதம் அனைத்து வகை சர்வதேச போட்டிகளிலிருந்தும் அப்ரிடி ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

1996ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக நைரோபியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 37 பந்துகளில் அதிவேக சதம் குவித்த முதல் வீரராக விளங்கிய அப்ரிடியின் 17 வருட சாதனையை 2014இல் நியூசிலாந்து வீரர் கொரி அண்டர்சன் 36 பந்திலும், 2015ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் பி டிவில்லியர்ஸ் 31 பந்திலும் கடந்து முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்காக சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக மிகப் பெரிய சேவையை வழங்கிய அப்ரிடி, மிஸ்பா உல் ஹக் மற்றும் யூனுஸ் கான் ஆகிய 3 வீரர்களுக்கும் விசேட பிரியாவிடை நிகழ்வொன்றை அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள உலக பதினொருவர் அணியுடனான T-20 போட்டித் தொடரின் போது வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.