சொந்த ஊரில் நடைபெற்ற போட்டியுடன் மஹேந்திர சிங் டோனிக்கு திடீர் ஓய்வு

42
Image Courtesy - AFP
 

அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள நான்காவது மற்றும் ஐந்தாவது ஒரு நாள் போட்டிகளுக்கான குழாமிலிருந்து விக்கெட் காப்பாளரான மஹேந்திர சிங் டோனிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன், மொஹமட் சமி விளையாடுவதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரு தரப்பு தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது. முதல் தொடரான டி20 தொடரை அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்ற, சுற்றுப் பயணத்தின் அடுத்த தொடரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் தற்சயம் நடைபெற்று வருகின்றது.

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை தக்கவைத்த அவுஸ்திரேலியா

ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய அணி 2-1 என்ற அடிப்படையில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் மூன்றாவது போட்டியானது நேற்று (08) டோனியின் சொந்த ஊரான ரஞ்சியில் நடைபெற்றிருந்தது.

இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணியினால் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 314 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இந்திய அணி வீரர்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை பறிகொடுத்ததன் காரணமாக இறுதியில் இந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 281 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பாக அதன் அணித்தலைவர் விராட் கோஹ்லி தனித்து நின்று போராடி சதமடித்திருந்தார். இறுதியில் 123 ஓட்டங்களுடன் அவரும் ஆட்டமிழக்க இந்திய அணியால் வெற்றி பெற முடியமல் போனது. குறித்த போட்டியில் நான்காவது விக்கெட்டுக்காக இந்திய அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திர சிங் டோனி மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் 59 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு அனுபவத்தின் மூலம் முக்கிய கதாப்பாத்திரமாக திகழ்ந்துவரும் முன்னாள் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனிக்கு அடுத்து நடைபெறவுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலிருந்தும் திடீர் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய அணி துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரான சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

என்ன காரணத்திற்காக இவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படாவிட்டாலும், இன்னும் இரண்டரை மாதங்களில் உலக்கிண்ண போட்டிகள் ஆரம்பமாகவுள்ளதன் காரணமாக இந்திய அணியானது முக்கிய வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு வழங்கி வருகின்றது. அந்த அடிப்படையிலேயே டோனிக்கும் ஓய்வு வழங்கப்பட்டிருக்கலாம்.

இதன் காரணமாக அடுத்து நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளுக்குமான 11 பேர் கொண்ட அணியில், ஒருநாள் குழாமில் இடம்பெற்றிருந்தும் முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடாத சந்தர்ப்பம் கிட்டாத இளம் வீரர் ரிஷாப் பண்ட்டுக்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது.    

மேலும், வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் சமிக்கு நேற்றைய (08) மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது கால் உபாதை ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பரிசோதனையின் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும். அவ்வாறு சமி விளையாடாத நிலை ஏற்படும் போது அவரின் வெற்றிடத்திற்காக சுழற்சி முறையில் ஓய்வு வழங்கப்பட்டிருந்த புவனேஸ்வர் குமார் அணிக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளை 45 ஓட்டங்களுக்கு சுருட்டிய இங்கிலாந்துக்கு தொடர் வெற்றி

எஞ்சியுள்ள இரு போட்டிகளும் நாளை (10) மற்றும் புதன்கிழமை (13) முறையே மொஹாலி மற்றும் டெல்லியில் நடைபெறவுள்ளது. நாளைய போட்டியானது அவுஸ்திரேலிய அணிக்கு தொடர் தோல்வியிலிருந்து பாதுகாப்பதற்கான மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க