சுற்றுலா பாகிஸ்தான் – நெதர்லாந்து தொடர் ஒத்திவைப்பு

90
@espncricinfo

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை காலவரையரையின்றி பிற்போடுவதற்கு நெதர்லாந்து கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. 

கொவிட்-19 வைரஸ் காரணமாக எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதிவரை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் எந்தவொரு நிகழ்வுகளையும் நடத்த முடியாது என நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான குறித்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

CPL இல் புதிய அணிக்காக விளையாடவுள்ள கிறிஸ் கெயில்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையினால் நடத்தப்படுகின்ற கரீபியன் ப்ரீமியர்..

இங்கிலாந்து அணிக்கு எதிரான முழு தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி எதிர்வரும் ஜூலை மாதம் நெதர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருந்தது. 

குறித்த மூன்று போட்டிகளும் அம்ஸ்டெல்வின் மைதானத்தில் ஜூலை மாதம் 4, 7 மற்றும் 9ம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொவிட்-19 காரணமாக இத்தொடர் தடைப்பட்டுள்ளது. 

அதேநேரம், ஜூன் 15ம் திகதி நெதர்லாந்து அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு போட்டிக்கொண்ட T20I தொடரில் விளையாடவிருந்தது. குறித்த தொடரும் திகதி அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி நெதர்லாந்தில் நடைபெறவிருந்த, நம்பீபியா, ஓமான் மற்றும் அமெரிக்க அணிகள் மோதவிருந்த தொடரும் பிற்போடப்பட்டுள்ளது. 

நெதர்லாந்து அணிக்கு எதிரான தொடர் பிற்போடப்பட்டமை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசீம் கான் கருத்து வெளியிடுகையில், “நெதர்லாந்து அணிக்கு எதிரான தொடர் பிற்போடப்பட்டமை வருத்தமளிக்கிறது. ஆனால், இவ்வாறான இன்னலான காலப்பகுதியில், மனித உயிர்களை கருத்திற்கொண்டு, தொடரை பிற்போடுவததுதான் சரியான விடயம். காரணம் கிரிக்கெட் மற்றும் நிகழ்வுகளை விட, மனித உயிர்களை காப்பதுதான் முக்கியம்” என்றார்.  

“அதுமாத்திரமின்றி, ஏனைய நாடுகளை போன்று நெதர்லாந்தும் கொவிட்-19 காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில், உயரிழந்தவர்களுக்காக பிராத்திக்கிறோம். அதேநேரம், நெதர்லாந்து இந்த இழப்புகளிலிருந்தும் மீண்டு வரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். 

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் நெதர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள நாம் விரும்புகிறோம். இந்த பிரச்சினைகள் தீர்ந்த பின்னர், போட்டித் தொடருக்கான அட்டவணையை நெதர்லாந்து கிரிக்கெட் சபை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என மேலும் சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் அனைத்து கிரிக்கெட் தொடர்களும் பிற்போடப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் நடைபெறவிருந்த இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரும் திகதிகள் அறிவிக்கப்படாமல் பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<