சென்னை அணிக்காக கண்ணீர் விட்ட டோனி

120

கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை சுபர் கிங்ஸ் அணி வீரர்களுக்காக நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் அந்த அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி கண்ணீர் விட்டு அழுததாக அந்த அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் உருக்கமான சம்பவம் ஒன்றை முதல் தடவையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் பிளே ஒப் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது தகுதிகாண் போட்டியில் நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸை 15 ஓட்டங்களால் வெற்றிகொண்ட முன்னாள் சம்பியன் சென்னை சுபர் கிங்ஸ் அணி 10ஆவது தடவையாக IPL இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. இதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் தலைவர் எம்எஸ் டோனி இருப்பதுதான் என்பதை அனைவரும் அறிவார்கள்.

2008ஆம் ஆண்டு முதல் எம்எஸ் டோனி தலைமையில் தொடர்ந்து பிளே ஒப் சுற்றுக்கு தகுதி பெற்று வந்த சென்னை அணி, 2015இல் சூதாட்ட புகாரில் சிக்கி ராஜஸ்தான் றேயால்ஸ் அணியுடன் 2 ஆண்டுகள் தடைக்கு உள்ளாகியது.

குறிப்பாக உரிமையாளர்களில் ஒருவர் அந்த சர்ச்சையில் சிக்கியதால் சென்னைக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் தவறான செயல்களில் ஈடுபடாத டோனி, சுரேஷ் ரெய்னா உட்பட அந்த அணிக்காக விளையாடி அனைவரும் 2016, 2017 ஆகிய பருவங்களில் புனே மற்றும் குஜராத் அணிக்காக விளையாடினர்.

அதைத்தொடர்ந்து 2018 பருவத்தில் மீண்டும் டோனி தலைமையில் சிரேஷ்ட வீரர்களுடன் களமிறங்கிய அந்த அணி Dady Army என்று எதிரணி ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளாகியது.

ஆனால் ஷேன் வொட்சன், அம்பத்தி ராயுடு போன்ற அனுபவமிக்க வீரர்களை வைத்து சாதித்த சென்னை அணி, 3ஆவது தடவையாக IPL சம்பியன் பட்டத்தை வென்று அற்புதமான கம்பேக் கொடுத்தது.

அந்த வகையில் 2 ஆண்டுகள் தடைபெற்று மீண்டும் 2018இல் சென்னை அணிக்காக ஒன்று சேர்ந்து விளையாட வந்த முதல் நாளன்று இரவு டோனி தமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அழுது விட்டதாக அந்த சமயத்தில் விளையாடிய ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

குஜராத் டைட்டனஸ் அணிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற பிளே ஒப் போட்டியின்போது Star Sports தொலைக்காட்சி வர்ணனையில் சென்னை அணியின் மற்றுமொரு முன்னாள் வீரர் இம்ரான் தாஹிருடன் இணைந்து ஹர்பஜன் சிங் இதை பகிர்ந்தார்.

இதுகுறித்த ஹர்பஜன் சிங் வர்ணனையின் போது பேசியதாவது:

ஒரு பழைய கதையை நான் பகிர விரும்புகிறேன். 2018 பருவத்தில் ஒரு போட்டி முடிவுற்ற பிறகு வீரர்களுக்கு இரவு உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது எங்களுக்கு ‘அழ வேண்டாம். அழ வேண்டாம்’ என்று சொல்வது போல் குரல் கேட்டது. உடனடியாக திரும்பி பார்த்தபோது டோனி ஒரு பக்கம் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார்.

பொதுவாக ஆண்கள் அழ மாட்டார்கள் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அன்றைய நாள் இரவில் அழுத டோனி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அந்த தருணத்தை யாரும் அறிய மாட்டார்கள் என்று நினைக்கிறேன். சரியா இம்ரான்’ என்று அருகிலிருந்த தென்னாபிரிக்க வீரர் இம்ரான் தாஹிருடன் பேசினார்.

அதற்கு அப்போது தான் சென்னை என்பது அணி அல்ல குடும்பத்தை போன்றது என்பதை புரிந்து கொண்டதாக அந்த பருவத்தில் விளையாடிய இம்ரான் தாகிர் தொடர்ந்து பேசியது பின்வருமாறு. ‘ஆம் நிச்சயமாக நானும் அந்த சமயத்தில் இருந்தேன். அது டோனிக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். அந்த சமயத்தில் தான் சென்னை அவருடைய இதயத்திற்கு எவ்வளவு நெருக்கமானது என்பதை நான் புரிந்து கொண்டேன்’

‘அவர் அந்த அணியை தம்முடைய குடும்பத்தைப் போல் கருதுகிறார். அதனால் அந்த சமயத்தில் அங்கிருந்த அனைவருமே மிகவும் உணர்ச்சிவசப்பட்டோம். அந்த பருவத்தில் 2 வருடங்கள் கழித்து நாங்கள் சம்பியன் பட்டத்தை வென்று கம்பேக் கொடுத்தோம். குறிப்பாக கிழவர்கள் என்று அனைவரும் எங்களுக்கு பட்டமளித்த போது நாங்கள் சம்பியன் பட்டத்தை வென்றதை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என்று கூறினார்.

‘டோனிக்கு இது தான் கடைசி IPL என்று சொல்லப்படுவதுதான் இன்று இதை பற்றி பகிர்வதற்கு முக்கிய காரணம். இதுபோன்ற சிறுசிறு நிகழ்வுகள், சென்னை அணி மீது அவர் வைத்திருக்கும் அன்பு எத்தகையது என்பதை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதற்காகவே கூறுகிறேன்’ என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<