உலகின் மற்றைய விளையாட்டுக்களை போல கிரிக்கெட் விளையாட்டிலும் வீரர்கள் அதிகளவான சம்பளங்களை வாங்கி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம். இதில் டெஸ்ட் அந்தஸ்துப் பெற்ற நாடுகளின் வரிசையில் இலங்கை அணியும் ஒன்றாகும்.

உலகின் பணக்கார கிரிக்கெட் சங்கமாக பிசிசிஐ (BCCI) இருந்தாலும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியை விட, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கே அதிக சம்பளம் கிடைக்கிறது.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரின் மனதை நெகிழவைக்கும் செயல்

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம்…

தேசிய அணிக்காக விளையாடுகின்ற கிரிக்கெட் வீரர்களுக்கு அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் சபைகளினால் வருடாந்த ஒப்பந்தம் மற்றும் போட்டி தொகை ஆகியவற்றை உள்ளடக்கியதாக சம்பளம் அளிக்கப்பட்டு வருகின்றன. இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளைப் பொறுத்தவரை, வீரர்களுக்கு ஏ, பி, சி என்று தரம் பிரிக்கப்பட்டு சம்பளம் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் அணிகளின் தலைவர்களின் இந்த ஆண்டுக்கான சம்பளம் குறித்து இந்தியாவின் பிரபல க்ரிக் இன்போ (Cricinfo) இணையத்தளத்தினால் நடாத்தப்பட்ட ஆய்வில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவரான  ஸ்டீவன் ஸ்மித் உலகில் அதிக வருமானத்தை  ஈட்டும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளமை சிறப்பம்சமாகும்.

உலகில் அதிக வருமானத்தை ஈட்டும் கிரிக்கெட் வீரர்கள் நாடுகள் ரீதியாக கணிப்பிடப்பட்டது. இதன்படி அவுஸ்திரேலியாவிலிருந்து ஸ்டீவன் ஸ்மித்தும் இங்கிலாந்திலிருந்து ஜோ ரூட்டும் இந்தியாவிலிருந்து விராட் கோஹ்லியும் தத்தம் நாடுகளில் அதிக வருமானத்தை ஈட்டும் வீரர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.

இதன்படி, தென்னாபிரிக்காவிலிருந்து டூ ப்ளெஸிஸும், இலங்கையிலிருந்து அஞ்செலோ மெதிவ்ஸும், பாகிஸ்தானிலிருந்து சர்பராஸ் அஹமட்டும், மேற்கிந்தியத் தீவிலிருந்து ஜேசன் ஹோல்டரும்,  நியூஸிலாந்திலிருந்து கேன் வில்லியம்சனும், பங்களாதேஷிலிருந்து சகிப் அல் ஹசனும், ஜிம்பாப்வேயிலிருந்து கிரெஹம் க்ரீமரும் தத்தமது நாடுகளில் அதிக வருமானத்தை ஈட்டிக்கொள்கின்ற  வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

இப்பட்டியலில் முதலிடத்திலுள்ள அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், கிரிக்கெட் போட்டிகளில் ஒப்பந்தம் மற்றும் போட்டி கொடுப்பனவு போன்றவற்றில் ஆண்டொன்றுக்கு  1.47 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெறுகின்றார். இது இலங்கை ரூபா மதிப்பில் 22 கோடியே 32 இலட்சத்து  88 ஆயிரம் ஆகும்.

சரித்திரத்தில் மற்றுமொரு மோசமான நிலையில் இலங்கை

இதன் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் ஜோ ரூட் ஆண்டொன்றுக்கு வருமானமாக 1.38 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதுடன், மூன்றாவது இடத்திலுள்ள அனைவரது வரவேற்பையும், இவ்வாண்டின் மிகச் சிறந்த தலைவராகக் கருதப்படுகின்ற இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோஹ்லி ஆண்டொன்றுக்கு வருமானமாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டிக்கொள்கிறார்.

இதன் நான்காவது இடத்தில் தென்னாபிரிக்க அணித் தலைவர் டூ ப்ளெஸிஸ் உள்ளார். இவர் ஆண்டொன்றுக்கு 0.59 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுகின்றார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் ஆண்டொன்றுக்கு 0.32 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டி இப்பட்டியலில் ஐந்தாவது இடத்தை வகிக்கின்றார். இது இலங்கை மதிப்பில்  4 கோடியே 86 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவாகும்.

உபாதை காரணமாக அண்மைக்காலமாக பெரும்பாலான போட்டிகளில் கலந்துகொள்ளாத அஞ்செலோ மெதிவ்ஸ், இலங்கை அணி சார்பாக இவ்வருடத்தில் 21 சர்வதேசப் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளதுடன், இதில் 12 ஒரு நாள் போட்டிகளும், 12 டெஸ்ட் மற்றும் 3 T-20 போட்டிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஜிம்பாப்வே அணியின் தலைவரான கிரஹம் க்ரீமர், ஆண்டொன்றுக்கு 90 ஆயிரம் அமெரிக்க டொலர்களை ஈட்டி வருகின்றார்.

இதேவேளை, உள்ளூர் முதல்தர போட்டிகள் மற்றும் T20 லீக் போட்டிகளிலிருந்து பெறப்படும் வருமானம் மற்றும் விளம்பரங்களிலிருந்து பெறப்படும் வருமானம் போன்றவை இந்த ஆய்வுக்காக உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகளவு வருமானத்தை ஈட்டிக்கொள்கின்ற கிரிக்கெட் தலைவர்கள்

தலைவர் வருமானம்
1. ஸ்டீவ்  ஸ்மித் (அவுஸ்திரேலியா) 1.47 மில்லியன் (22.5 கோடி)
2.  ஜோ ரூட் (இங்கிலாந்து) 1.38 மில்லியன் (21.1 கோடி)
3. விராட் கோஹ்லி (இந்தியா) 1 மில்லியன் (15.3 கோடி)
4. பாப் டூ ப்ளெஸில் (தென்னாபிரிக்கா) 0.59 மில்லியன் (9 கோடி)
5. அஞ்செலோ மெதிவ்ஸ் (இலங்கை) 0.32 மில்லியன் (4.9 கோடி)
6. சர்பராஸ் அஹமட் (பாகிஸ்தான்) 0.30 மில்லியன் (4.6 கோடி)
7. ஜேசன் ஹோல்டர் (மே. தீவுகள்) 0.27 மில்லியன் (4.1 கோடி)
8. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) 0.25 மில்லியன் (3.8 கோடி)
9. சகீப் அல் ஹசன் (பங்களாதேஷ்) 0.14 மில்லியன் (2.15 கோடி)
10. கிரஹம் க்ரீமர் (ஜிம்பாப்வே) 0.09 மில்லியன் (1.3 கோடி)

பயிற்சியாளர்களில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அதிக சம்பளம் வாங்குகின்ற பயிற்சியாளராக உள்ளார். அவர் வருடமொன்றுக்கு 1.17 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்கின்றார். இதில் அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டெரன் லீமன் (0.55 மில்.) 2ஆவது இடத்திலும், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பேலிஸ் (0.52 மில்.) 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

அத்துடன் உலகின் ஏனைய விளையாட்டுக்களான கால்பந்து, மோட்டார் சைக்கிள் பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடி வருகின்ற வீரர்களைப் போல கிரிக்கெட்டில் ஈடுபடுகின்ற வீரர்களும் ஆண்டொன்றுக்கு பாரியளவு பணத்தை சம்பளமாகப் பெற்று வருகின்றமை இந்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கெதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20…

ஆனால், உலகின் நட்சத்திர கால்பந்து வீரரான போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, இவ்வருடத்துக்கான சம்பளத் தொகையாக 58  மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொண்டுள்ளார். இது இலங்கை மதிப்பில் 890 கோடி ரூபாவாகும்.

அதேபோல உலகின் நட்சத்திர கார் பந்தய வீரரான பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த லூவிஸ் ஹெமில்டன், 38 மில்லியன் டொலர்களையும், அமெரிக்காவின் நட்சத்திர கூடைப்பந்தாட்ட வீரரான லிப்ரோன் ஜேம்ஸ், 31.2 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் ஆண்டொன்றுக்கான வருமானமாக பெற்று வருகின்றனர்.

உலகில் அதிகளவு வருமானத்தை ஈட்டிக்கொள்கின்ற விளையாட்டு வீரர்கள்

வீரர்கள்     வருமானம்
கிறிஸ்டியானோ ரொனால்டோ (கால்பந்து) 58 மில்லியன் (890 கோடி)
லூவிஸ் ஹெமில்டன் (கார் பந்தயம்) 38 மில்லியன் (580 கோடி)
லிப்ரோன் ஜேம்ஸ் (கூடைப்பந்து) 31.2 மில்லியன் (476 கோடி)
ரொரி மெக்ல்ரோய் (கோல்ப்) 16 மில்லியன் (245 கோடி)
ரோஜர் பெடரர் (டென்னிஸ்) 6 மில்லியன் (92 கோடி)

இந்நிலையில், கிரிக்கெட் வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டிகளுக்காக செலுத்தப்படுகின்ற சம்பளம் தொடர்பிலும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்காக இந்திய அணி வீரர்களுக்கே அதிகளவான சம்பளம் செலுத்தப்படுவதுடன், டெஸ்ட் போட்டியொன்றுக்காக வீரர் ஒருவருக்கு 23,380 டொலர்களும் (35.9 இலட்சம்), ஒரு நாள் போட்டியொன்றுக்காக 9,352 டொலர்களும் (14.3 இலட்சம்) கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், T20 போட்டியொன்றுக்காக அதிக சம்பளம் செலுத்துகின்ற நாடாக இங்கிலாந்து கருதப்படுகின்றது. இதில் போட்டியொன்றுக்காக வீரர் ஒருவருக்கு 5,284 டொலர்கள் (8.1 இலட்சம்) கொடுப்பனவாக செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை அணி வீரர்களும் இப்பட்டியலில் முன்னிலையில் உள்ளனர். டெஸ்ட் போட்டியொன்றுக்காக வீரர் ஒருவருக்கு 5 ஆயிரம் டொலர்களும் (7.6 இலட்சம்), ஒரு நாள் மற்றும் T20 போட்டியொன்றுக்காக 3 ஆயிரம் டொலர்களும் (4.6 இலட்சம்) சம்பளமாக வழங்கப்பட்டு வருகின்றதுடன், இவ்வாறு வீரர்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளப் பட்டியலில் டெஸ்ட் நாடுகளில் 7ஆவது இடத்தையும், ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளில் 4ஆவது இடத்தையும் இலங்கை அணி பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.