த்ரில் வெற்றி மூலம் தென்னாபிரிக்காவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து

77

டொம் கர்ரன் கடைசி இரண்டு பந்துகளுக்கும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 2 ஒட்டங்களால் த்ரில் வெற்றியை பெற்றது. 

கிங்ஸ்மீட், டர்பனில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற இந்தப் போட்டியில் மொத்தம் 30 சிக்ஸர்கள் விளாசப்பட்டு, அதிக ஓட்டங்கள் பெறப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி ஈட்டியதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை அந்த அணி 1-1 என சமநிலைக்கு கொண்டுவந்துள்ளது. நாளை (16) சென்சூரியனில் நடைபெறும் இறுதி டி-20 போட்டியில் வெற்றியீட்டும் அணி தொடரை கைப்பற்றும். 

ஒரு ஓட்டத்தால் த்ரில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா

வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி தனது…………..

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ஓட்டங்களை பெற்றதோடு மொயின் அலி 11 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 39 ஓட்டங்களை பெற்று ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி கடைசி பந்துவரை பேராடியபோதும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை பெற்று 2 ஓட்டங்களால் வெற்றியை தவறவிட்டது.  

தென்னாபிரிக்க அணி சார்பாக தென்னாபிரிக்க அணித்தலைவர் குயின்டன் டி கொக் 22 பந்துகளில் 8 சிக்ஸர்களை விளாசி 65 ஓட்டங்களை பெற்றதோடு அவர் டெம்பா பவுமாவுடன் இணைந்து ஆரம்ப விக்கெட்டுக்கு 92 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். 

அதி வேகமாக பந்துவீசிய மார்க் வூட், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து போட்டியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 

எனினும் வன் டெர் டசன் (43*) மற்றும் டுவைன் ப்ரிடோரியஸ் (25) சிறப்பாக துடுப்பாடி தென்னாபிரிக்க அணியை வெற்றியை நெருங்கச் செய்தனர். கடைசி ஓவருக்கு தென்னாபிரிக்க அணி 15 ஓட்டங்களை பெறவேண்டி ஏற்பட்டபோது பிரிடோரியஸ் முதல் நான்கு பந்துகளில் சிக்ஸர், பௌண்டரி என 12 ஓட்டங்களை பெற்றார். எனினும் டொம் கர்ரன் ஐந்தாவது பந்தை யோக்கராக வீச அதில் அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.     

தனது முதலாவது டி-20 சர்வதேச போட்டியில் களமிறங்கிய ப்ஜோர்ன் போர்சுயின் (Bjorn Fortuin) கடைசி பந்துக்கு முகம் கொடுத்து அதனை பைன் லெக் திசைக்கு திருப்பியபோது மைதானத்தின் 30 மீற்றர் வட்டத்திற்குள் இருந்த ஆதில் ரஷீத் பின்பக்கமாக ஓடிச் சென்று பிடியெடுத்தார். 

அவர் பந்து வீசும் முன் வட்டத்திற்கு வெளியில் சென்று விதியை மீறவில்லை என்று தொலைக்காட்சி நடுவரின் உதவி மூலம் உறுதி செய்யப்பட்ட பின்னரே இங்கிலாந்து அணியின் வெற்றி உறுதியானது.  

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி-20 போட்டியிலும் இதேபோன்ற பரபரப்பு நிலை நீடித்தது. கடைசி இரண்டு பந்துகளில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு மூன்று ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையிலேயே அந்த அணி ஒரு விக்கெட்டை இழந்து ஒரு ஓட்டத்தை மாத்திரமே பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15.1 ஓவர்களில் 125 ஓட்டங்களை பெற்றிருந்தபோதே மொயின் அலி களமிறங்கினார். அன்டிலே பெஹ்லுக்வாயோ வீசிய தனது இரண்டாவது பந்திலேயே சிக்ஸர் விளாசிய அவர் மேலும் மூன்று சிக்ஸர்களையும் நான்கு பௌண்டரிகளையும் பெற்று அணிக்கு வலுச்சேர்த்தார். 

மொயின் அலி பென் ஸ்டோக்ஸ் உடன் சேர்ந்து 6 ஆவது விக்கெட்டுக்கு 18 பந்துகளில் 51 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டார். பென் ஸ்டோக்ஸ் 30 பந்துகளில் ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 204/7 (20) – பென் ஸ்டோக்ஸ் 47*, ஜேசன் ரோய் 40, மொயீன் அலி 39, ஜொனி பெயாஸ்டோ 35, லுங்கி நிகிடி 3/48, அன்டில் பெஹ்லுக்வாயோ 2/47, 

தென்னாபிரிக்கா – 202/7 (20) – குயின்டன் டி கொக் 65, வென்டர் டசன் 43*, டெம்பா பவுமா 31, கிறிஸ் ஜோர்டன் 2/31, மார்க் வூட் 2/39, டொம் கர்ரன் 2/45

முடிவு – இங்கிலாந்து 2 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<