முதல் இடத்தைப் பறிகொடுத்த அஷ்ரப் : நிமாலிக்கு அதிர்ச்சித் தோல்வி

782

தியகமவில் இடம்பெற்று வரும் 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்ட இறுதிப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மொஹமட் அஷ்ரப், போட்டியை 10.71 செக்கன்களில் ஓடி முடித்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக நேற்று மாலை (31) நடைபெற்ற முதல் சுற்றில் கலந்துகொண்ட மொஹமட் அஷ்ரப் போட்டியை 10.87 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

மீண்டும் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினா அனித்தா

தற்பொழுது நடைபெற்று வரும் 95ஆவது தேசிய மெய்வல்லுனர்…

இந்த இறுதிப் போட்டியில், இத்தாலியில் மெய்வல்லுனர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த யுபுன் பிரியதர்ஷன அபேகோன், 10.52 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார். முன்னதாக அவர் 10.51 செக்கன்களில் ஓடி தனது தனிப்பட்ட சிறந்த காலத்தைப் பதிவு செய்திருந்தார்.

எனினும், கடந்த காலங்களில் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் பந்தயங்களில் முதலிடங்களைப் பெற்று வந்த வினோத் சுரன்ஜய டி சில்வா, போட்டி ஆரம்பித்தது முதல் சிறப்பாக ஓடிவந்தாலும் எல்லைக் கோட்டை தாண்டுவதற்கு முன் ஏற்பட்ட திடீர் உபாதையினால் கடைசி இடத்தைப் பெற்று ஏமாற்றமளித்தார்.

இந்நிலையில் இலங்கை மெய்வல்லுனர் குழாமில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற திருகோணமலைகிண்ணியாவைச் சேர்ந்தவரும் தற்போது இலங்கை இராணுவத்தில் விளையாடி வருகின்றவருமான மொஹமட் பாசில் உடயார், 10.81 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த பல வருடங்களாக இலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற கிழக்கின் வேகமான மனிதர் என்று கருதப்படும் அஷ்ரப், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கிரிகிஸ்தான் திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றி ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று இவ்வருடத்துக்கான சிறந்த காலத்தைப் பதிவு செய்தார். அஷ்ரப் இந்தப் போட்டித் தூரத்தை 10.51 செக்கன்களில் ஓடி முடித்திருந்தார்.    

ஆசிய சம்பியன் நிமாலிக்கு அதிர்ச்சித் தோல்வி

பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கை விமானப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட நிமாலி லியானாரச்சி எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவி 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் குறித்த போட்டித் தூரத்தை 55.14 செக்கன்களில் நிறைவு செய்தார்.  

இப்போட்டியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த வீராங்கனைகளான உதேஷிகா ரத்னகுமாரி, போட்டித் தூரத்தை 53.63 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தையும், ஆர் நதீஷா, 54.69 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து 2ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.     

ஒரே நாளில் 2 தேசிய சாதனைகள், 3 போட்டிச் சாதனைகள்

இலங்கைக்காக கடந்த இரு வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த நிமாலி, கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் சுமார் 22 வருடங்களின் பிறகு புதிய சாதனை படைத்தார்.

இதனையடுத்து கடந்த ஜுன் மாதம் சீனா மற்றும் சீன தாய்ப்பேயில் நடைபெற்ற ஆசிய க்ரோன் ப்றீ மெய்வல்லுனர் போட்டிகளின் 2ஆவது மற்றும் மூன்றாவது சுற்றுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

எனினும், கடந்த பல தடவைகளில் உபாதைகளுக்கு மத்தியில் போட்டிகளில் பங்கேற்றிருந்த நிமாலிக்கு இம்முறை முதற்தடவையாக உலக மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது.

கடந்த மாதம் இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கைக்காக ஒரேயொரு தங்கப் பதக்கத்தினை வென்று கொடுத்த நிமாலி, உலக மெய்வல்லுனர் போட்டிகளுக்கான அடைவுமட்டத்தை பூர்த்தி செய்யாத போதிலும், ஆசியாவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதால் உலக மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.