ஜேர்மனியை வெளியேற்றிய இங்கிலாந்து; இறுதி நிமிடத்தில் வெற்றி பெற்ற உக்ரைன்

UEFA EURO 2020

143

யூரோ 2020 கால்பந்து தொடரில் இறுதி 16 அணிகள் சுற்றில் இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் பலம் மிக்க ஜேர்மனியை வீழ்த்திய இங்கிலாந்து அணியும், இறுதி நிமிடத்தில்  சுவீடனை வீழ்த்திய உக்ரைன் அணியும் தொடரின் காலிறுதிக்குத் தெரிவாகியுள்ளன. 

இங்கிலாந்து எதிர் ஜேர்மனி    

லீக் சுற்று முடிவில் D குழுவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து  அணியும் F குழுவில் இரண்டாம் இடம் பிடித்த ஜேர்மனி அணியும் இங்கிலாந்தின் சொந்த மைதானமான லண்டன் வெம்ப்லி அரங்கில் இடம்பெற்ற இந்த மோதலில் செவ்வாய்க்கிழமை (28) மோதின. 

விறுவிறுப்பான போட்டியின் பின் காலிறுதிக்குச் சென்ற ஸ்பெயின், சுவிட்சர்லாந்து

போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதியதன் காரணமாக முதல் 45 நிமிடஙகளும் கோல்கள் எதவும் இன்றி நிறைவு பெற்றது. 

எனினும், இரண்டாவது பாதியில் இங்கிலாந்தை விட ஜேர்மன் வீரர்கள் சற்று அதிகமாகவே கோலுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தினர். 

எனினும்,  75ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் பகுதிக்குள் வைத்து Shaw உள்ளனுப்பிய பந்தினை ரஹீம் ஸ்டேர்லிங் கோலுக்குள் செலுத்தி இங்கிலாந்து அணியை முன்னிலைப்படுத்தினார். 

மீண்டும் 10 நிமிடங்களின் பின்னர் மாற்று வீரராக வந்த Grealish வங்கிய பந்தினை ஹெடர் செய்து இங்கிலாந்து அணித் தலைவர் ஹர்ரி கேன் அவ்வணிக்கான இரண்டாவது கோலையும் பதிவு செய்தார். 

இரண்டாம் பாதியில் ஜேர்மன் அணிக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக தோமஸ் முல்லர் எதிரணியின் கோல் எல்லைக்கு தனியே பந்தை எடுத்துச் சென்று கோல் நோக்கி உதைந்த பந்து இடது பக்க கம்பத்தை அண்மித்த வகையில் வெளியே சென்றது.  

எனவே, போட்டி நிறைவில், இறுதி 15 நிமிடங்களில் பெற்ற இரண்டு கோல்களினால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. 

முழு நேரம்: இங்கிலாந்து எதிர் ஜேர்மனி 

கோல் பெற்றவர்கள் 

  • இங்கிலாந்து – Sterling 75′, Kane 86′

சுவீடன் எதிர் உக்ரைன் 

லீக் சுற்றில் சுவீடன் அணி குழு E யில் முதலிடத்தையும் உக்ரைன் குழு  Cயில் மூன்றாவது இடத்தையும் பெற்று நொக் அவுட் சுற்றுக்கு தெரிவாகியது. ஸ்கொட்லாந்தின் Hampden Park அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டி இறுதி 16 அணிகள் சுற்றின் கடைசிப் போட்டியாக இருந்தது. 

 5 விநாடிகளில் சந்தையை மாற்றிய RONALDO 

ஆட்டம் ஆரம்பமாகிய 27ஆவது நமிடத்தில் Zinchenko மூலம் உக்ரைன் முதல் கோலைப் பெற்றது. எனினும், 43ஆவது நிமிடத்தில் சுவீடன் வீரர் Forsberg தனது அணிக்கான முதல் கோலைப் பெற்று போட்டியை சமப்படுத்தினார். 

எனினும், வெற்றி கோலைப் பெறும் நோக்கில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இரண்டாம் பாதி நிறைவில் இரண்டு அணிகளினாலும் கோல்கள் பெறப்படவில்லை. 

எனவே, போட்டியில் 30 நிமிடங்கள் மேலதிக நேரமாக வழங்கப்பட்டது. மேலதிக நேரம் ஆரம்பமாகி 8 நிமிடங்களில் சுவீடன் வீரர் Marcus Danielson இற்கு எதிரணி வீரரை முறையற்ற விதத்தில் வீழ்த்தியமைக்காக மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. எனினும், அதனை VAR மூலமும் பரிசோதித்த நடுவர் அவருக்கு சிவப்பு அட்டை காண்பித்து மைதானத்தில் இருந்து வெளியேற்றினார் . 

எஞ்சிய நேரத்தில் 10 வீரர்களுடன் தடுப்பாட்டத்தை மேற்கொண்டு வந்த சுவீடன் அணிக்கு 120 நிமிடங்கள் முடிந்து மேலதிக நேரம் வழங்கப்பட்டபோது அதிர்ச்சி காத்திருந்தது. உக்ரைன் வீரர் Zinchenko உயர்த்தி வழங்கிய பந்துப் பரிமாற்றத்தின்போது எதிரணியின் கோலுக்கு அண்மையில் இருந்து அதனை ஹெடர் செய்த Dovbyk போட்டியின் வெற்றி கோலைப் பெற்று உக்ரைன் அணியை காலிறுதிக்கு கொண்டு சென்றார். 

எனவே, உக்ரைன் அணி யூரோ கிண்ண காலிறுதியில் இங்கிலாந்து அணியை சந்திக்கவுள்ளது.  

முழு நேரம்: சுவீடன் 1 – 2 உக்ரைன் 

கோல் பெற்றவர்கள்   

  • சுவீடன் – Forsberg 43′ 
  • உக்ரைன் – Zinchenko 27′, Dovbyk 120’+1 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<