சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மொஹமட் கைஃப் ஓய்வு

255

இந்திய கிரிக்கெட் அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரும், தலைசிறந்த களத்தடுப்பாளருமான மொஹமட் கைஃப், கடந்த 12 வருடங்களாக எந்தவொரு சர்வதேசப் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் இருந்த நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று (13) அறிவித்தார்.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை இந்தியாவுக்கு முதற்தடவையாகப் பெற்றுக்கொடுத்த இளம் இந்திய அணியின் தலைவராகச் செயற்பட்ட மொஹமட் கைஃப், அதே ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.

வட மாகாண வீரர் வியாஸ்காந்த் இலங்கை இளையோர் அணியில்

தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடியிருந்ததுடன், யுவராஜ் சிங் உடன் இணைந்து இந்தியாவுக்காக பல சாதனைக வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார்.

இதில் கைஃப் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது கங்குலி தலைமையிலான இந்திய ஒரு நாள் அணி 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே போன்ற தினத்தில் அதாவது 13 ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நெட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிதான்.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி திரெஸ்கோதிக் (109), அணித் தலைவர் மைக்கல் வோகன் (115) ஆகியோரின் சதத்தால் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ஓட்டங்களை குவித்தது. அப்போதைய காலத்தில் அணியொன்று 275 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தாலே eதிரணி அந்த வெற்றி இலக்கை அடைவது என்பது இயலாத காரியம். இதனால் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற எண்ணத்தில் இங்கிலாந்து வீரர்கள் களம் இறங்கினார்கள்.

சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்த பிறகு மொஹமட் கைஃப் களம் இறங்கினார். அப்போது இந்தியா 24 ஓவரில் 146 ஓட்டங்களை எடுத்திருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 156 பந்துகளில் 180 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது யுவராஜ் சிங் உடன் கைஃப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. இந்த ஜோடி 6 ஆவது விக்கெட்டுக்காக 131 ஓட்டங்களைக் குவித்தது. யுவராஜ் சிங் 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆனால் கைஃப் 75 பந்துகளில் 87 ஓட்டங்களைக் குவித்து இந்திய அணியை வெற்றி பெறவைத்தார்.

  • 2002 இல் கைஃப்பின் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி

புகழ்பெற்ற லோர்ட்ஸ் மைதானத்தில் கங்குலி தனது சட்டையை கழற்றி கையில் வைத்து சுழற்றி சுழற்றி வெற்றியை கொண்டாடினார். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் இந்த வெற்றியை மறந்திருக்கமாட்டார்கள். ஆட்ட நாயகன் விருதை பெற்ற மொஹமட் கைஃப்பும் இந்த வெற்றியை மறந்திருக்க மாட்டார். இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான நாளாக இது கருதப்படும்

இந்த நிலையில், அதே நாளான ஜூலை 13 ஆம் திகதியான நேற்று தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக மொஹமட் கைஃப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கைஃப் தனது டுவிட்டர் பக்கத்தில், ”நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது, இந்திய கிரிக்கெட் அணியின் தொப்பியை அணிந்து விளையாடுவது என்பது எனது கனவாக இருந்தது.

நான் இந்திய அணிக்காக விளையாடியது மிகவும் அதிர்ஷ்டமான சம்பவமாகும். எனது வாழ்க்கையில் 190 நாட்கள் எனது நாட்டுக்காக விளையாடி இருக்கிறேன். அதிலும் சுமார் 16 வருடங்களுக்கு முன் இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற நெட்வெஸ்ட் தொடரின் இறுதி ஒரு நாள் போட்டியில் இதே போன்றதொரு நாளில் இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது.  எனவே அனைத்து கிரிக்கெட் போட்டியிகளிலிருந்தும் நான் ஓய்வு பெறுகிறேன் என்பதை அறிவிப்பதற்கு இன்றே ஒரு பொருத்தமான நாள். அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

37 வயதான மொஹமட் கைஃப், இந்திய அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 3 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 624 ஓட்டங்களையும், 125 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2 சதம், 17 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 2753 ஓட்டங்களையும் எடுத்திருக்கிறார்.

எனினும், 2006 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரில் இறுதியாக விளையாடிய மொஹமட் கைஃப், அதனைத் தொடர்ந்து உள்ளுர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் தனது திறமைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். இதுவரை 129 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 15 சதங்களுடன் 7581 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

1997 முதல் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி வரும் மொஹமட் கைஃப், 2005-06 பருவகாலத்தில் உத்தர பிரதேச அணிக்கு தலைமை தாங்கி ரஞ்சி கிண்ணத்தை உத்தரப் பிரதேசத்துக்கு முதற்தடவையாகப் பெற்றுக்கொடுப்பதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தார். அதன்பிறகு ஆந்திரா, சட்டிஸ்கர் ஆகிய ரஞ்சி அணியிலுரும் அவர் இடம்பெற்றிருந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சுழல் மன்னன் ஹேரத் விரைவில் ஓய்வு

அதேநேரம், இந்திய ப்ரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகளுக்காகவும் அவர் விளையாடியுள்ளார். அத்துடன், 2017 இல் குஜராத் லயன்ஸ் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராகவும் அவர் செயற்பட்டார்.

இது இவ்வாறிருக்க, மொஹமட் கைஃப் அண்மைக்காலமாக ஐ.பி.எல் உள்ளிட்ட போட்டிகளில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும், ஆய்வாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள், உலகம் பூராகவும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<