LPL T20 தொடரின் விளம்பர தூதுவராக ஆஸி. நட்சத்திரம்

54

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் அந்த நாடு 2015ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தினை வெல்லும் போது அதனை வழிநடாத்தியவருமான மைக்கல் கிளார்க் 2024ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் விளம்பர தூதுவராக (Brand Ambassador) நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

T20 உலகக்கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

LPL T20 தொடர் இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக ஜூலை மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. இந்த தொடரில் இம்முறையும் பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் இந்த தொடரின் விளம்பர தூதுவராக செயற்படும் வாய்ப்பு அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னணி துடுப்பாட்டவீரர்களில் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் தான் LPL T20 தொடரின் தூதுவராக மாறியிருக்கும் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மைக்கல் கிளார்க், தான் கிரிக்கெட் விளையாடும் காலப்பகுதியில் தனக்கு விருப்பமான நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்பட்டதாக தெரிவித்திருந்ததோடு, தான் LPL தொடர் வெற்றிகரகமாக நடக்க வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டார்.

அதேநேரம் LPL T20 தொடரில் இம்முறை ஆடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதனை அடுத்து அவ்வணி தொடரில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தம்புள்ளை அணி புதிய உரிமையாளர் ஒருவருடன் இம்முறை தொடரில் ஆடவிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<