தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது நாளான இன்று (08) நடைபெற்ற மைதான நிகழ்ச்சிகளில் வடக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதில் குண்டு எறிதலில் மிதுன்ராஜ், கோலூன்றிப் பாய்தலில் விஜயகுமார் ஜதூஷிகா, இடியமீன் அபினயன் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
அதேபோன்று, கோலூன்றிப் பாய்தலில் கே. சோபிதன் மற்றும் சந்திரகுமார் தீபிகா ஆகிய இருவரும் வெள்ளிப் பதக்கங்களையும், அதே போட்டி நிகழ்ச்சயில் சந்திரகுமார் துஷாந்தன், சிவபாதம் சுவர்ணா ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.
>>கோலூன்றிப் பாய்தலில் யாழ் மாணவி அபிலாஷினி புதிய சாதனை
அத்துடன், 3000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டத்தில் மலையகத்தைச் சேர்ந்த தர்மராஜ் வினோகரனும், 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் டி. சுஜீவனும் வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தனர்.
கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கடந்த மாதம் 9ஆம் திகதி ஆரம்பமானது. ஆனால், அன்றைய தினம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் முதலாம் நாள் போட்டிகள் இடைநடுவில் பிற்போடப்பட்டது.
எனவே, ஒத்திவைக்கப்பட்ட கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் மீண்டும் நேற்று (07) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.
மிதுன்ராஜ் அபாரம்
போட்டித் தொடரின் இரண்டாவது நாளான இன்று (08) காலை நடைபெற்ற 20 வயதின்கீழ் ஆண்களுக்கான குண்டு எறிதலில் யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ் தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியில் அவர் 15.13 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்தார்.

இவருக்கு ஹார்ட்லி கல்லூரியின் மைதான நிகழ்ச்சிக்கான பயிற்சியாளரான ஹரிஹரன் பயிற்சி அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மகாஜனா வீரர்கள் பதக்க மழை
இன்று காலை நடைபெற்ற 20 வயதின்கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி வீராங்கனை விஜயகுமார் ஜதூஷிகா, 3.10 மீட்டர் உயரம் தாவி தங்கப் பதக்கம் வென்றார்.
அவருடன் குறித்த போட்டியில் பங்குகொண்ட அதே பாடசாலையைச் சேர்ந்த சந்திரகுமார் தீபிகா, அதே உயரத்தைத் தாவி (3.10 மீட்டர்) வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதனிடையே, 18 வயதின்கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சிவபாதம் சுவர்ணா வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 2.70 மீட்டர் உயரத்தை தாவியிருந்தார்.

இதன்படி, யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த வீரர்கள் கோலூன்றிப் பாய்தல் நிகழ்ச்சியில் மாத்திரம் இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.
>>சர்வதேச மெய்வல்லுனர் தொடர்களில் இலங்கை வீரர்கள்
அபினயன், சோபிதனுக்கு வெற்றி
20 வயதின்கீழ் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயா கல்லூரி வீரர் இடியமீன் அபினயன் 4.10 மீட்டர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதேவேளை, அபினயனுடன் குறித்த போட்டியில் பங்குகொண்ட யாழ். இந்துக் கல்லூரி வீரர் கே. சோபிதன் 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் 4.00 மீட்டர் உயரத்தைத் தாவினார்.
வினோகரனுக்கு முதல் பதக்கம்
3000 மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டிக்கான பயிற்சிகளை கடந்த மாதம் ஆரம்பித்த மலையக வீரர் தர்மராஜ் வினோகரன், தனது முதல் முயற்சியிலேயே பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
போட்டியின் முதல் நாளான நேற்று நடைபெற்ற 23 வயதின்கீழ் ஆண்களுக்கான 3000 மீட்டர் தடை தாண்டல் ஓட்டத்தில் பங்குகொண்ட அவர், 10 நிமிடங்கள் 24.15 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

இதேவேளை, இன்று மாலை நடைபெற்ற 23 வயதின்கீழ் ஆண்களுக்கான 1500 மீ;ட்டர் இறுதிப்போட்டியில் பங்குகொண்ட வினோகரனுக்கு 7ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது. போட்டியை நிறைவுசெய்ய 4 நிமிடங்கள் 25.30 செக்கன்களை அவர் எடுத்துக்கொண்டார்.
எவ்வாறாயினும், 23 வயதின்கீழ் ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியிலும் அவர் பங்குகொள்ளவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>>இந்திய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் 12 இலங்கையர்கள்
சுஜீவனுக்கு வெண்கலப் பதக்கம்
16 வயதின்கீழ் ஆண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 14.69 செக்கன்களில் நிறைவு செய்த நாவலப்பிட்டிய கதிரேசன் கல்லூரி வீரர் டி. சுஜீவன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<




















