விளையாட்டுத்துறை அமைச்சர் பானுக்கவிடம் விடுத்துள்ள கோரிக்கை

3712
namal-bhanuka

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான பானுக்க ராஜபக்ஷவிடம் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இளம் வீரராக நாட்டுக்காக விளையாட இன்னும் கால அவகாசம் இருப்பதால் அவசர முடிவுகளை எடுப்பதை விட சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவதே முக்கியம் என நாமல் ராஜபக்‌ஷ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எந்தவொரு விளையாட்டு வீரருக்கும் விளையாட்டைப் போல விளையாட்டு வாழ்க்கையும் சவாலானது. இவர்கள் அனைவரும் தொழில்முறை விளையாட்டு வீரர்கள். எனவே, தொழில்முறை விளையாட்டு வீரர்கள் எப்போதும் அந்த தொழில்முறை நிலையை பராமரிக்கவும், அதை பாதுகாக்கவும் கடமைப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் சபை ஒரு சுயாதீன நிறுவனமாக இயங்குகிறது. இதை அங்கீகரிக்கும் வகையில், கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக, அரவிந்த டி சில்வா தலைமையில் கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்தோம்.

இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக்குழு மற்றும் கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தீர்மானத்திற்கு அமைய இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது 19 வயதின் கீழ் உலகக் கிண்ணத்தில் நமது இளம் வீரர்களுக்காக தனது சேவையினை வழங்க வருகின்றார்.

இதனால் கிரிக்கெட் வளர்ச்சிக்காக நீண்ட கால திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதுடன், அதில் தொழில்நுட்ப திட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறுகிய கால வெற்றியை விட முறையாக முன்னேறுவது நிரந்தர வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது எனது நம்பிக்கை.

தொழில்முறை உறவுகளை மதித்தது விளையாட்டு வீரர்களுக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாட்டை விட்டு வெளியேற எல்லா உரிமையும் உள்ளது, அத்தகைய சூழ்நிலையில், வெளியேறும் முடிவை வீரர் எடுக்க வேண்டும்.

சில சமயங்களில் நிர்வாகத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டாலோ அத்தகைய முடிவுக்காக தலையிடுகின்ற வாய்ப்பு உள்ளது.

இருப்பினும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்களின் அடிப்படையாக வைத்து முழு கட்டமைப்பையும் அல்லது முழு சட்ட அமைப்பையும் மாற்ற முடியாது. இத்தகைய தலையீடுகள் செய்யப்படும்போது, முழு செயல்முறையும் பாதிப்படைய செய்துவிடும்.

கிரிக்கெட்டின் வெற்றிக்கான திட்டப்படி இலங்கை கிரிக்கெட் செயல்பட வேண்டும் என்பதே கிரிக்கெட்டை நேசிக்கும் நான் உட்பட அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாகும். கிரிக்கெட்டைப் போலவே மற்ற விளையாட்டுகளிலும், வீரர்களின் ஒழுக்கம் மற்றும் நிர்வாகிகளின் ஒழுக்கம் ஆகியவற்றில் நான் கண்டிப்பாக இருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில், சில வீரர்கள் தங்கள் தவறான நடத்தைக்காக தண்டிக்கப்பட்டனர். எனினும், தண்டனை காலத்தின் போது அவர்கள் மீது எடுத்த முடிவை மதித்ததன் காரணமாக அவர்கள் மீண்டும் விளையாட்டுக்கு திரும்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வீரர்கள் ஒழுக்கமற்ற முறையில் நாட்டுக்கே அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டாலும், அவர்கள் மீது வாழ்நாள் தடை விதிக்கக் கூட தயங்க மாட்டார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். அதன்படி, முந்தைய கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே கிரிக்கெட் விளையாட்டிலிருந்து விலகுவதற்கான தமது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, பானுக்க ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<