விரக்தியுடன் திடீர் ஓய்வை அறிவித்தார் ஜெர்மனி வீரர் ஓசில்

495
@AFP

ஜெர்மனியின் 29 வயதுடைய மத்தியகள வீரர் மெசட் ஓசில் அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் விரக்தியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஞாயிற்றுக்கிழமை (22) திடீரென அறிவித்துள்ளார்.

தனது துருக்கி பூர்வீகம் காரணமாக அண்மைய மாதங்களில் சர்ச்சைகளுக்கு முகம்கொடுத்த ஆர்சனல் அணியின் முக்கிய வீரரான ஒசில், இம்முறை உலகக் கிண்ண போட்டியில் ஜெர்மனியின் ஆரம்ப பதினொரு வீரர்களில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். நடப்புச் சம்பியனாக ரஷ்யாவில் உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்ற ஜெர்மனி உலகக் கிண்ணத்தின் ஆரம்ப சுற்றுடனேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெளியேறியது.

உலகக் கிண்ண தோல்வியின் பின் கால்பந்தை பிடிக்காத நெய்மார்

நடைபெற்று முடிந்த பிஃபா உலகக் கிண்ண காலிறுதியில்…

இதுவரை ஜெர்மனி அணிக்காக 92 போட்டிகளில் ஆடி 23 கோல்களை பெற்றும் 40 கோல் உதவிகளை வழங்கியவருமான ஓசில், தொடர்ந்து தனது சாதனையை நீடிக்காமல் இருக்க முடிவு செய்துள்ளார்.

ஓசில் கடந்த மே மாதத்தில் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகானை சந்தித்தது ஜெர்மனியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. லண்டன் சென்றிருந்தபோது ஓசில் மற்றும் இல்காய் குண்டோகன் ஆகியோர் துருக்கி ஜனாதிபதியுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை சமூகதளத்தில் பதிவிட்டதே அவர் மீது விமர்சனங்கள் ஊருவாக காரணமானது.    

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மௌனம் கலைந்த ஓசில், சமூகதளத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.  

அண்மைய சம்பவங்கள் பற்றி அதிகம் சிந்தித்த பின்னரே பாரமான மனதுடன் சர்வதேச அளவில் தொடர்ந்து ஜெர்மனி அணிக்கு ஆடுவதில்லை என்ற முடிவை எடுத்தேன். நான் இனவாதம் மற்றும் அவமதிப்புக்கு ஆளாவதாக உணர்கிறேன்என்று அவர் எழுதியுள்ளார். ‘நான் அதிக பெருமை மற்றும் உற்சாகத்துடனேயே ஜெர்மனி சட்டையை அணிந்தேன், இப்போது எனக்கு அவ்வாறு இல்லைஎன்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்திய ஒசில் – எர்துகான் புகைப்படம்

ஜெர்மனியின் கெல்சன்கிர்சன் நகரில் துருக்கி பெற்றோருக்கு பிறந்த ஓசில், 2006 ஆம் ஆண்டில் இத்தாலிக்கு எதிரான நட்புறவு போட்டியில் ஆடுவதற்கு துருக்கி கால்பந்து சம்மேளனம் அழைத்தபோது அதனை மறுத்தார். தமக்கு துருக்கி குடியுரிமை பெறும் எதிர்பார்ப்பு இல்லை என்றும் குறிப்பிட்டார்.    

ஜெர்மனி பொற்கால அணியின் முக்கிய வீரராக மாறிய ஓசில், 2009இல் 21 வயதுக்கு உட்பட்ட ஐரோப்பிய சம்பியன்சிப் போட்டியை வென்ற ஜெர்மனி அணியில் இடம்பிடித்தார். 2014 பிரேசிலில் உலகக் கிண்ணத்தை வென்ற ஜெர்மனி அணியின் முக்கிய வீரராகவும் அவர் இருந்தார்.   

ரொனால்டோவின் வருகையால் டொலர்களை அள்ளும் ஜுவான்டஸ்

உலகின் முதற்தர கால்பந்து வீரர் என வர்ணிக்கப்படும்…

இந்நிலையில் துருக்கி ஜனாதிபதியுடன் புகைப்படத்தில் தோன்றியதை நியாயப்படுத்திய ஓசில், அது அரசியல் காரணம் கொண்டதல்ல என்றும் ஜனாதிபதிக்கு மதிப்பு அளிப்பதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த புகைப்படம் வெளியான பின் ஜெர்மனியின் பல அரசியல்வாதிகளும் ஓசிலை விமர்சித்ததோடு, ஜெர்மனி ஜனநாயகத்தில் அவரது விசுவாசம் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.

துருக்கி ஜனாதிபதி எர்துகான் தனக்கு எதிரான தோல்வி அடைந்த அரசியல் சதிப்புரட்சிக்கு பின்னர் உள்நாட்டில் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் ஜெர்மனியின் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகலுக்கும் காரணமாகியுள்ளது.  

இந்த புகைப்படம் வெளியானபின் தமக்கு மின்னஞ்சலில் வெறுப்பு கடிதங்கள் கிடைத்ததாகவும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் மெசட் ஓசில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<