இலங்கைக்கெதிரான முதல் டெஸ்டிலிருந்து வெளியேறும் மெஹிதி ஹாஸன்

Sri Lanka tour of Bangladesh 2022

132

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் மெஹிதி ஹாஸன் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டித்தொடருக்கான 16 பேர்கொண்ட குழாத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்தநிலையில் அறிவிக்கப்பட்டிருந்த குழாத்தில் இடம்பெற்றிருந்த மெஹிதி ஹாஸனின் விரலில் உபாதை ஏற்பட்டுள்ள காரணத்தால், அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெஹிதி ஹாஸன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்ற நிலையில், சுழல் பந்துவீச்சாளர் நயீம் ஹாஸன் அணியில் இணைக்கப்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மெஹிதி ஹாஸன் தொடர்பில் கருத்து வெளியிட்ட பங்களாதேஷ் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் ஹபிபுல் பஷார், “மெஹிதி ஹாஸன் உபாதை காரணமாக கட்டாயமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கும் குறைந்த அளவிலான வாய்ப்புகள் மாத்திரமே உள்ளன” என்றார்.

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை அணி எதிர்வரும் 8 ஆம் திகதி புறப்படவுள்ளதுடன், முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் 2 நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டியொன்றில் விளையாடவுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 15 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 23 ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<