தாய் நாட்டிற்கு முன்னுரிமை வழங்கும் மெஹிதி ஹஸன்

142

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறைவீரரான மெஹிதி ஹஸன் தாய் நாட்டிற்கு முன்னுரிமை வழங்கும் பொருட்டு, இந்த ஆண்டு நடைபெறும் கவுண்டி போட்டிகளில் ஆட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

25 வயது நிரம்பிய மெஹிதி ஹஸன் இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 16ஆம் வரை நடைபெறவுள்ள இங்கிலாந்தின் கவுண்டி ஒருநாள் தொடரில், வோர்விக்ஷையர் கழகத்திற்காக விளையாட ஒப்பந்தமாகியிருந்தார்.

>> RCB அணியை IPL இல் இருந்து வெளியேற்றிய சுப்மன் கில்

மெஹிதி ஹஸனிற்கு வோர்விக்ஷையர் கழகத்துடன் விளையாடுவதற்கான ஒப்பந்தம், அந்த அணிக்காக விளையாடும் ஜேக் லிட்னோட் மூலம் கிடைக்கப் பெற்றிருந்தது. எனவே மெஹிதி ஹஸன் குறித்த ஒப்பந்தம் தொடர்பில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

”லிட்னோட் அவர் விளையாடும் அணியான வோர்விக்ஷையர் கழக அணிக்காக ஒருநாள் தொடரில் விளையாட முடியுமா எனக் கேட்டிருந்தார். எனவே நான் அவரிடம் குறித்த சந்தர்ப்பத்தில் தேசிய அணிக்காக (பங்களாதேஷ் அணிக்காக) போட்டிகள் எதுவும் இல்லை எனில் நான் ஓரிரு போட்டிகளில் விளையாடுவேன்.”

”எனக்கு தேசிய அணிக்காக விளையாடும் பணியே முக்கியமானது, நான் அதனை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். எனவே (கவுண்டி போட்டிகளில் விளையாடுவதற்கான) இடைவேளை ஒன்றும் இருக்கும் சந்தர்ப்பத்தில் நான் அதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம், ஆட்சேபனையற்ற சான்றிதழ் (NOC) கேட்பேன். ஏனெனில் குறிப்பிட்ட இடங்களில் ஆடுவது எனது விளையாட்டினை இன்னும் விருத்தி செய்யும்.” என மெஹிதி ஹஸன் குறிப்பிட்டிருந்தார்.

பங்களாதேஷ் அடுத்த மாத ஆரம்பத்தில் (ஜூன் 10 தொடக்கம்) ஆப்கானிஸ்தான் அணியுடன் டெஸ்ட் போட்டியொன்றில் ஆடவுள்ளதோடு, அதன் பின்னர் இந்தியாவுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர்களில் ஆடுகின்றது.

இதன் பின்னர் செப்டம்பர் மாத நடுப் பகுதி வரையில், ஆசியக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி விளையாட வேண்டிய நிர்ப்பந்த நிலை காணப்படுகின்றது. எனவே தேசிய அணிக்கான இந்தப் போட்டிகளை கருத்திற் கொண்டே, மெஹிதி ஹஸன் கவுண்டி போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டவில்லை என நம்பப்படுகின்றது.

>> மதீஷ பதிரன என்ன செய்தார்? இனி என்ன செய்ய வேண்டும் – மாலிங்க

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களில் சகீப் அல் ஹசன், தமிம் இக்பால் போன்ற ஓரிரு வீரர்களுக்கு மாத்திரமே இதுவரை  கவுண்டி போட்டிகளில் ஆடும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கும் நிலையில் மெஹிதி ஹஸன் தனக்கு கிடைத்த வாய்ப்பினை தாய் நாட்டிற்காக புறக்கணித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மெஹிதி ஹஸன் அண்மையில் இந்திய அணி பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என இந்தியாவினை வீழ்த்துவதற்கு பங்களிப்புச் செய்திருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<